கடற்கரையை தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்
திட்ட வரைவு நகலை ரத்து செய்க

கடலோரப் பகுதிகளை பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்
திட்ட வரைவு நகலை ரத்து செய்யக் கோரிக்கை

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011 – ன்படி மத்திய அரசின்சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம், தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணிதமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்கு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னையைச் சேர்ந்த நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம்(என்.சி.எஸ்.சி.எம்) மூலம் வரைவுத்திட்டம் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. இந்த மையம் தயாரித்த வரைவு நகல், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து கருத்துகூறக்கூடிய மீனவர்கள் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதிக்குள் கருத்துக்களை பதிவுசெய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை உள்ளடக்கிய தமிழக கடற்கரை பகுதி சிறந்த வளம்மிக்க பகுதியாகும். தாதுக்கள், நீர் ஆதாரங்கள், பல்வகை பயிர்கள் விளையும் மண் ஆதாரம், பல்வகை உயிரினங்கள் வாழும் சூழல் உள்ள இந்த கடலோர நிலப்பகுதி மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் சீரழியும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே தாது மணற் கொள்ளை,சட்ட விரோத இறால் பண்ணைகள், ரசாயன தொழிற்சாலைகள் கடற்கரையில் கட்டப்படும் உயர்தர சொகுசு ஓட்டல்கள், எண்ணெய்சுத்திகரிப்பு மண்டலங்கள், அனல் மின்நிலையங்கள் உள்ளிட்டவை சட்டவிதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கடற்கரை யோரங்கள் வேகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்டவரைவு ஏற்கனவேசெய்யப்பட்ட விதி மீறல்கள் அனைத் துக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் பல்வேறு அம்சங்கள் மீறப்பட்டுள்ளன என்று தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ மீனவர்களின் கோரிக்கையை காதில் வாங்கவில்லை காரணம் கடலோர பகுதிகளில்இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி விட்டு சாகர்மாலா போன்ற பிரம்மாண்டமான கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இரண்டாவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கடலோர மண்டல மேலாண்மை வரைபடம் உருவாக்க கடைசி தேதியாக ஏப்ரல் 2018 என கெடு விதித்துள்ளது.

எனவே அவசர அவசரமாக வரைபடம் தயாரித்து மீனவர்கள் தங்கள் கருத்துகளை கூறக்கூட அவகாசம் வழங்கவில்லை. அறிக்கையில் 1 ம் மண்டலத்தில் உள்ளகடலோர பகுதி 3 ஆம் மண்டலத்தில் உள்ளதாகவும் 3 ம் மண்டலத்தில் உள்ள கடலோர பகுதியை 2 ம் மண்டலமாக திட்டமிட்டு தவறாக வரையறுத்துள்ளனர்.அலையாத்திக்காடுகள், மணல்மேடுகள், ஈரத்தரைகள், ஆமை முட்டை இடும் இடங்கள், சுனாமி தடுப்பு உயிர்சுவர்கள், பண்ணுயிர்பெருக்க வள ஆதாரங்கள், பண்ணுயிர் தொடர்பான பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு, படகு நிறுத்தும் இடங்கள் மீனவர்கள் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை முறையாக கணக்கில் எடுத்துகொள்ளவில்லை,மேலும், அந்த திட்டத்தில் அபாய எல்லை (ழயணயசன ஷ்டிநே)வரையறுக்கப்படவில்லை. கழிமுகப் பகுதியில் சுற்றுச்சூழல்முக்கியத்துவம் வாய்ந்த (நஉடிடடிபiஉயடடலளநளேவைiஎந)அம்சங்கள் காணப்படவில்லை.

மத்திய அரசின் அந்த அறிவிப்பில் இணைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது பின்னிணைப்பில் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் நிலப்பரப்பு மற்றும் 100 மீட்டர் கடற்பரப்பு இடையே வரவிருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அணுசக்தி உற்பத்தி,விமான தளம், விமான எரிபொருள்,அபாயகரமான பொருட்களைக் கையாளுதல், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு, மண்ணெண்ணெய், மோட்டார் எரிபொருள், டீசல், மீத்தேன், புட்டேன், நாப்தா, உரங்கள், உரங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், போன்றவற்றை கடலோரப் பகுதிகளில் அனுமதிக்கப்படும் என்றுஅந்த பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துறைமுகம், கப்பல்துறை உல்லாச விடுதிகள் ஆகியவையும் கடற்கரையில் வர அனுமதி அளிக்க மத்திய அரசின் அறிவிப்பின் 3 ஆம் பிரிவில் வழி உள்ளது. இவை மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.கடலோரப் பகுதிகளில் பாரம்பரிய மீனவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கடற்கரையை விட்டு அப்புறப்படுத்தி கடற்கரை நிலங்களை இந்த திட்டத்தின் வழியாக மத்திய அரசுகையகப்படுத்தி சாகர்மாலா போன்றதிட்டங்களின் பகுதியாக கடற்கரைசிறப்பு பொருளாதார மண்டலங்கள்அமைத்து தனியார் பெருநிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடத்தை தாரைவார்க்கும் உள்நோக்கம் மத்திய அரசின் அறிவிப்பில் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளில்இயல்பாக உள்ளதாக தெளிவாகத் தெரிகிறது.

பொதுவில் இருக்கும் நிலம் மற்றும் நீர் நிலை உரிமைகளைத் தனியாருக்கு விட்டுக்கொடுத்து அவற்றின் மீது இருந்த அரசின் கட்டுப்பாட்டையும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதார உரிமையை வர்த்தகத்திற்காக இழப்பது சமூக மற்றும் இயற்கை நீதிக்கு புறம்பானது. திட்டத்தில் வரையறுக்கப்பட்ட எண் 1(ஏ) மற்றும் 4 வது மண்டலங்களில் பல அரிய வகை அம்சங்கள்இருப்பதால் அந்த கடலோரப் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற நடவடிக்கைகளைக் கொண்டு வர இயலாது. ஏனென்றால், அவை பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீரழியும். எனவே, அத்தகைய அரியவகை அம்சங்கள் இல்லாத எண் 3 மாற்றும் 2 ம் மண்டலமாக இருந்தால் மட்டுமே மத்திய அரசினுடைய நோக்கத்தை செயல்படுத்த இயலும். ஆனால் புதுச்சேரியை உள்ளடக்கிய தமிழக கடலோரப் பகுதியில் உள்ள எண் 1(ஏ) மற்றும் எண் 4 மண்டல அம்சங்கள் இல்லவே இல்லாதது போல்மறைத்து, எண் 3 மற்றும் 2 வது மண்டலமாக தவறாக சித்தரித்து, பல்வேறு திட்டநடவடிக்கைகளை குறுக்கு வழியில் திணிக்கும் முயற்சியாக தெரிகிறது. தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள் அவ்வப்போது தொடர்மழை, வெள்ளம், வறட்சி, புயல்,கடல் சீற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் மற்றும் வானிலைஎதிர்மறை நிகழ்வுகளை சந்தித்து வருகின்றன.

அதனால், சுற்றச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே மத்திய அரசின் இந்ததவறான வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் கடலோரத்தில் கொண்டு வரப்பட்டால் அவை பலவகைகளில் பாதிப்புக்கு உள்ளாகும். மேலும்பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். எனவே தற்போது தமிழ்நாடு அரசு மற்றம் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகூலி நிறுவனமான புதிய கடற்கரை ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்.கடலியில் சூழலை பாதுகாக்கும் வகையிலும், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய வரைபடம் தயாரிக்க வேண்டும்.

அவ்வாறு, தயாரிக்கப்படும் புதிய திட்டத்தில் தவறு நடக்காமல் இருக்க வரைபடம் தயாரிப்பதற்கு முன்பே கிராம வாரியாக சென்று சம்பந்தப்பட்ட மீனவர்களையும், பொதுமக்களையும், மீனவர் அமைப்புகளையும் தீர கலந்தாலோசித்து திட்ட அம்சங்களைவல்லுநர்கள் குழு அமைத்து விஞ்ஞா னப் பூர்வமான முறையில் துல்லிய மாக வரையறை செய்ய வேண்டும். அவ்வாறு முன்னேற்பாடுகள் செய்யா மல் தயாரிக்கப்பட்ட தற்போதைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 1996-ம் ஆண்டு வரைபடத்தை , மீறி சட்டவிரோதமாக நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை அகற்ற வேண்டும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply