தென்னிந்தியாவில் துடைத்தெறியப்பட்ட பாஜக புதுச்சேரியில் கட்சிமாறிகள், பதவி வெறி பிடித்தவர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரைக் கொண்டு அதிகார ருசியை சுவைத்துக் கொண்டிருக்கிறது. தங்களது கார்ப்பரேட், தனியார்மய, மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தும் சோத னைக் கூடமாக புதுச்சேரி மாநிலத்தை பயன்படுத்தி வருகிறது.
மோடியின் வாய்ப்பந்தல்
2019இல் புதுச்சேரிக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த மோடி புதிய முழக்கத்தை முன்வைத்தார். ‘பெஸ்ட்’ (BEST) புதுச்சேரி என்றார். அது என்ன பெஸ்ட்? அவரே வியாக்கியானம் செய்தார்: B-பிசினஸ். புதுச்சேரியில் வர்த்தகமும் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் தழைத்தோங்கும். E-எஜுகேஷன். கல்வியின் சிறந்த மாநிலமாக (‘Education hub’) உருவாக்குவோம். தேசத்திலேயே கல்விக்கான ஒரு கேந்திரமாக புதுச்சேரி மாறும்; S-‘ஸ்பிரிட்சுவல் சிட்டி’ ஆன்மீக நகரமாக புதுச்சேரியை மாற்றுவோம்; T-டூரிசம், சுற்றுலா நகரமாக்குவோம். சுற்றுலா மூலம் புதுச்சேரியின் பொருளாதாரத்தை செழிப்பாக்குவோம் என்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுச்சேரிக்கு வருகிறார்கள், ‘பெஸ்ட் புதுச்சேரியை’ பார்ப்பதற்காக!
புதுச்சேரியில் தொழில் அழிவு
புதுச்சேரியின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கக் கூடியவைகளாக பஞ்சாலைகள் திகழ்ந்தன. 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கி வந்தன. ஆனால் பஞ்சாலைகள் ஆட்சியாளர்களின் பாராமுகத்தினால் பூட்டியே கிடக்கின்றன. பஞ்சாலைகளின் அசையாச் சொத்துக்களை விற்கத் துடிக்கின்றனர் பாஜக, – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்கள். அத்தனை தொழிற்பேட்டைகளும் மூடிக் கிடக்கின்றன. தொழில் முனைவோர்களில் சிலர், இங்கே இருக்கக்கூடிய வசதி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெளியேறினர்.
50 மதமாக சம்பளமில்லை
கடந்த காலங்களில் கூட்டுறவுத் துறைக்கு முக்கியத்து வம் அளித்து கூட்டுறவுத் துறையில் வங்கிகள், நூற்பாலைகள் உருவாக்கப்பட்டன. இப்போதைய ஆட்சியாளர்களின் தவறான வழிகாட்டுதலாலும், திறமையின்மையாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் இவைகளும் சீரழிக்கப்பட்டன. 50 தொழிலாளர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் ஆட்சியாளர்களின் அத்துமீறலால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொல்லைப்புற வழியாக வேலைக்கு வைப்பது போன்றவற்றால் அமுதசுரபி, பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்கள் மூடுவிழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. வேலை பார்த்த ஊழியர்களுக்கு 50 மாதங்களாக சம்பளம் இல்லை.
தனியார்மயமாக்கலில் புதுச்சேரி மின்துறை
புதுச்சேரியில் தொழில் வளர்ச்சிக்கும், வணிகத்திற் கும் மிகவும் ஆதாரமாக இருக்கும் மின் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர் ஆட்சியாளர்கள். ரூ.25,000 கோடி மதிப்புள்ள மின்துறையை ரூ.300 கோடிக்கு டெண்டர் விடக்கூடிய அவலம் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. மின்துறை தனியார்மயமாக்கலை எதிர்த்து ஊழியர்களும், பொது மக்களும் பல்வேறு கட்டப்போராட்டங்களை நடத்தியதா லும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாலும் தனியார்மய நடவடிக்கை தள்ளிப் போயிருக்கிறது. இருப்பினும் தனி யார்மய நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, மின் கட்டணத்தை மாற்றுவதற்காக கருத்து கேட்புக் கூட்டங்களை சடங்காக நடத்தி, அதில் வந்த எந்த கருத்தையும் மதிக்காமல் ஓராண்டில் மட்டும் மூன்று முறை அநியாயமாக கட்டணம் உயர்த்தப்பட்டி ருக்கிறது. மின் கட்டண உயர்வும், தனியார்மயமாக்கலும் எதிர்கால புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி, வர்த்தகத்தை பாதிக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், “மக்களுக்கு விரோத மாக, மின்துறையை தனியார்மயமாக்க மாட்டோம்” என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆட்சி அதிகாரம் மாறும்பொழுது தானும் கட்சி மாறி பாஜகவில் உள்துறை அமைச்சராகவும், மின்துறை அமைச்சராகவும் பதவியேற்று ஆர்.எஸ்.எஸ். சங்கிகளின் கட்டளைக்கு ஏற்ப புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தாரைவாக்க தயாராகி அந்த வேலைகளில் மும்முரமாய் இருக்கிறார். அதற்கெதிரான போராட்டங்களை சீர்குலையச் செய்வது, இரண்டு நாட்கள் புதுச்சேரியை இருட்டில் மூழ்கச் செய்து அதற்கு போராட்டத்தை கார ணம் சொல்வது, மின்கட்டண உயர்வுக்கு காரணமாய் இருப்பது, தேர்தல் அறிவித்த பின்பும் சாதாரண மக்க ளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் கட்டண உயர்வை அறிவிப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களில் ஈடுபடும் நமச்சிவாயம் தான் பாஜகவேட்பாளர்.
முறைசாராத் தொழிலாளர்களின் அவலம்
கிராமப்புறத் தொழிலாளர்களும் விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்களால் சூறையாடப்பட்டு வருவ தால் வேலை இழந்து நிர்க்கதியாய் புதுச்சேரி நகரம் நோக்கி வருகிறார்கள். விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்கள் தங்கள் தொழிலில் இருந்து பிய்த்தெறியப் பட்டு, புதுச்சேரி நகரை சுத்தப்படுத்த நள்ளிரவுகளி லும் எவ்வித பாதுகாப்புமின்றி தனியார் ஒப்பந்த நிறுவனங்களால் அத்துக்கூலிகளாக துப்புரவுப் பணி யாளர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களுக்கும் உழைப்பிற்கேற்ற ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் சிறு குறு தொழில் புரிவோ ரும், ஜவுளிக்கடை, மளிகைக் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகளும் அநியாய வரி விதிப்பாலும், மின்கட்டண உயர்வாலும் அவதிக்குள்ளாகி நிற்கின்றனர். ஆளும் பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியினர் தொழில் வளர்ச்சியிலும், வணிகத்திலும் புதுச்சேரியை முன்னணி க்கு கொண்டு வருவோம் என்று சொன்னவர்கள், சீரழிவு க்கு காரணமானவர்கள் மீண்டும் வாக்குறுதிகளை அள்ளி வழங்க வந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் கல்விக் கேந்திரமா புதுச்சேரி?
புதுச்சேரியை நாட்டிலேயே சிறந்ததொரு கல்விக்கான மையமாக உருவாக்குவோம் என்று முழங்கி னார்கள். ஆனால் பாஜக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முழுமூச்சாக இறங்கியது. அரசுப் பள்ளிகள் அனைத்திலும் எட்டாம் வகுப்பிற்கு பிறகு சி.பி.எஸ்.இ.- யை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு முதல் தொடங்கி விட்டனர். மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு ஆகியவற்றிற்கு நுழைவுத் தேர்வு! சாத்தியமா? கவலை இல்லை. அமல்படுத்த துடிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகள் இணைப்பு என்ற ஒரு நடைமுறைக் காரண மாக, புதுச்சேரியில் 2022 இல் 7 பள்ளிகளும், 2023ல் 4 பள்ளிகளும், தற்போது வரை 20 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. 2016க்குப் பிறகு எட்டு ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 600 முதல் 700 பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன.
இருண்டு கிடக்கும் பெண் கல்வி
புதுச்சேரியில் கல்வியின் பெயரால் கொள்ளை தொடர்கிறது. இவை தவிர உயர்கல்வியில் மகளிருக் காக இருந்த ஒரே தொழில்நுட்பக் கல்லூரி ‘பிப் மேட்’ மூடப்பட்டு, தரம் உயர்த்துகிறோம் என்ற பெயரில் மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அதில் சேர்க்கையே இல்லை. சாதாரண ஏழை நடுத்தர குடும்பங்களின் பெண் குழந்தைகள் உயர்கல்விக்கான எதிர்காலம் இருண்டு கிடக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் உயர் கல்வி பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகளுக்கான இடங்கள் அனைத்துமே சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலை இறுதி செய்து வெளியிடுவது காலதாமதமாகும். வெளியிடும் பட்டியலிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். இதில் தன்னிச்சையான அதிகாரிகளின் போக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு பிரிவில் நீதி மன்றத்திற்கு செல்வதும், அந்த தீர்ப்பு வருவதற்கும் காலதாமத மாகும் வாடிக்கை. பிற கல்வி நிறுவனங்களில் கல்வியாண்டு தொடங்கி விடுவதும், புதுச்சேரியில் மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்காலத்திற்கான கனவு கண்டு, பீதியில் இருப்பதும் ஒவ்வொராண்டு நடவடிக்கையாக மாறிப் போயிருக்கிறது . இவ்வளவு குளறுபடிகளுக்கு மத்தியில் கல்வி வளாகங்கள் சாதிய சக்திகளின் பிடியில் இறுகிப் போயிருக்கிறது. ‘நம்மவர்’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டு அது சாதிய சக்தி களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது. இந்த நம்மவர் வேறு யாருமல்ல, பாஜக வேட்பாளர் நமச்சிவா யம் அவர்கள் தான். உயர்கல்வி நிறுவனங்களின் சீரழிவிற்கும், ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பாமைக்கும், பள்ளிகள் மூடு விழா காணுவதற்கும், ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுடைய கல்விக் கனவுகள் சிதைவதற்கும் முழுக் காரணம் உயர்கல்வி அமைச்ச ரும், உள்துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான நமச்சிவாயம் தான் காரணம்.
புதுச்சேரி ஆன்மீக நகரமா? ஆர்.எஸ்.எஸ். நகரமா?
புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளை கவர்கிற பல அம்சங்களைக் கொண்ட நகரம். ஆனால் சமாதிகளை யும் வழிபாட்டுத் தலங்களையும் மனதில் வைத்து யோகா தியானப் பயிற்சி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் சாகாக்களை நடத்த தொடங்கினர் பா.ஜ.கவினர். இந்திய இலக்கியத் திருவிழா என்ற பெயரில் இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ் குருமார்களை புதுச்சேரியில் திரட்டி னார்கள். அதில் பிரெஞ்சு ஆய்வு நிறுவனங்கள், அலை யன்ஸ் பிரான்சிஸ், அரபிந்தோ சொசைட்டி போன்றவை களும் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் உள்ளூர் கலை இலக்கிய அமைப்புகள், முன்னணி எழுத்தாளர்கள் இதை புறக்கணித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் இவர்களின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டது. இதனால் இவர்களால் இணைக்கப்பட்ட நிறுவனங் களும் பின்வாங்கினர். இவர்கள் அம்பலமாயினர். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் யோகா பயிற்சி என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் அரங்கேறின. 2022 அக்டோபர் 02 அன்று ஆர்.எஸ்.எஸ். வெறியனால் கொலையுண்ட அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் புதுச்சேரியில் வெளியூர் களிலிருந்து சங்கிகள் திரட்டப்பட்டு சாகா நிகழ்த்தப்பட்டது. அகண்ட பாரதம், இந்துராஷ்டிரத்திற்கான உறுதிமொழியை எடுத்தனர் சங்கிகள். இதில் பங்கேற்று முன்னணியில் நின்றார் புதுச்சேரி உள்துறை அமைச்சர், தற்போதைய பாஜக வேட்பாளர் நமசிவாயம்.
புதுச்சேரி சுற்றுலா நகரமா? போதை நகரமா?
தற்போது புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் யார்? என்ன நோக்கம்? இங்கே அவர்களுக்கு சாதகமாக இருப்பது என்ன? புதுச்சேரியில் பள்ளி மாணவர்களிலிருந்து இளைஞர்கள் வரை கஞ்சா போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்திய அளவில் முதன்மையான இடத்தை பெறுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. நள்ளிரவு வரை இயங்கக்கூடிய மதுபானக் கடைகள் (ரெஸ்ட்ரோபார்கள்) அதிக எண்ணிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் திறக்கப் பட்டு இருக்கின்றன .2019இல் இந்த பார்களின் எண்ணிக்கை 101. 2024இல் இதன் எண்ணிக்கை 209. இது அனுமதி பெற்ற எண்ணிக்கை. இதைத் தவிர வார இறுதி நாட்களில் மதுபானங்கள் புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் ஆறாக ஓடும். பாஜக – என்.ஆர்.அரசு புதுச்சேரியை சுற்றுலா நகரமாக மாற்றவில்லை. போதை நகரமாக மாற்றி இருக்கிறது. புதுச்சேரி மதுச்சேரியாக மாறியிருக்கிறது. இதற்கு ஆட்சியாளர்களே பொறுப்பு.
முத்தியால்பேட்டை கொடுமை
இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் புதுச்சேரி. இதனுடைய உச்சகட்டம் தான் போதைக்கு அடிமையான வெறியர்களால் முத்தியால் பேட்டை சிறுமி கும்பல் பாலியல் வன்முறைக்கு பலியா னார். இதற்கு எதிராக புதுச்சேரியே போர்க்களமானது. அனைத்து பகுதி மக்களும் பொது வேலை நிறுத்தத்தி லும், தன்னெழுச்சியான போராட்டங்களிலும் ஈடுபட்டார் கள். அவர்களின் ஒரே கோரிக்கை இதற்கு பொறுப்பு ஏற்று, உள்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுநர் உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. உள்துறை அமைச்சர் போதை நகரமாக மாறியதற்கு காரணமாய் இருப்பவர். சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்தவர். முத்தியால்பேட்டை சிறுமி யின் குடும்பத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் நமச்சிவாயம். அவர்தான் பாஜக வேட்பாளர். இந்த தேர்தலில் அவரை தோற்கடித்து, டெபாசிட் தொகையைக் கூட இழக்கும் வகையில் நாம் கடமை ஆற்றுவோம். மேலும், 2023 சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து பெற்றிடுவோம் என்று முழங்கினார். அது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சாத்தியமா? சட்டப் பேரவை அமைத்து 58 ஆண்டுகள் ஆகிறது. 13 முறை மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு செவி சாய்க்க வில்லை. மேலும் நாடாளுமன்றத்திலேயே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதற்கான சாத்தியமில்லை என்று உள்துறை அமைச்சர் அறிவித்துவிட்டார். உரிமை பெற்ற மாநிலங்களையே யூனியன் பிரதேசமாக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் என்பதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தை களும், பகல் கனவுகளுமே. எனவே புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றிடவும், புதுச்சேரி அரசு மின்துறை யை பாதுகாத்திடவும், ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்.
முன்போல் ரேசன் கடைகள்…
கடந்த தேர்தலின் போது ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றார் என்.ரங்கசாமி. ரேஷன் திட்டத்தை நிறுத்திய பாஜக, நடமாடும் ரேஷன் கடைகள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளி யிட்டார். அவர்கள் இருவருமே புதுச்சேரி மக்களை ஏமாற்றிவிட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அண்டை மாநிலங்களைப் போல் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கு மத்திய ஆட்சி மாற வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். ஜனநாயகம் காத்திட, வலுவான உள்ளாட்சி அமைப்புகள் அமைந்திட, நிலைத்த நீடித்த தொழில் வளர்ச்சி ஏற்பட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட, நம்பிக்கை அளிக்கும் விவசாயத் தொழில், முறை சாராத் தொழிலாளர்களின் வாழ்வு நிலையில் மேம்பாடு அடைந்திட, அரசு சார்ந்த நிறுவனங்களை சீரமைத்திட, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாது காப்பு அளித்திட, சுகாதாரமான எழில்மிகு சுற்றுலா நகர மாக உருவாகிட, புதுச்சேரியை போதையின் பிடியி லிருந்து மீட்டெடுத்திட, அனைத்து பிராந்தியங்களிலும் சமச்சீரான வளர்ச்சித் திட்டங்கள் பெற்றிட இந்தியா கூட்டணியின் வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யைச் சார்ந்த வெ.வைத்திலிங்கம் அவர்களை வெற்றி பெறச் செய்து எதிர்கால இந்தியாவையும் புதுச்சேரியையும் காப்பாற்றுவது நமது கடமையாகும். இந்தியா கூட்டணி வெல்லட்டும். புதுச்சேரிக்கு இழந்த உரிமைகள் கிட்டட்டும்.
– எஸ். ராமச்சந்திரன்
கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > தீக்கதிர் > புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்
புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்
posted on
You Might Also Like
தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழஞ்சலி செலுத்திய புதுச்சேரி
September 14, 2024
பாகூர் பகுதி சிபிஐ(எம்) கட்சி வரலாறு
September 9, 2024