புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டக்குழு அமைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் ஜெயராம் உணவக கருத்தரங்க அரையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சேதுசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பிரதேச செயலாளர் ராஜாங்கம்,மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், நிர்வாகிகள் விசுவநாதன்,சேதுசெல்வம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், மதிமுக மாநில தலைவர் கபிரியேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் உமர் பாரூக், மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் இஸ்மாயில், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுவை மின்துறை லாபத்தில் இயங்கும்நிலையில், தனியார்மயமாக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மின்துறை தனியார்மயத்தை கண்டித்து வரும் 31ம்தேதி புதுச்சேரியில் மனிதசங்கிலி போராட்டமும், ஜூன் மாதத்தில் தமிழகத்திலிருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் புதுச்சேரியில் நடத்தப்படும்.
ஜூன் 2வது வாரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்பி, தமிழகத்திலுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் டெல்லி சென்று மின்துறையை தனியார் மயத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.