புதுச்சேரி மின்துறை தனியார்மயத்தை கண்டித்து தீவிரமாகும் போராட்டம்.

புதுச்சேரி மின் துறையை 100 சதம் தனியார்மயமாக்க என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு செப்டம்பர் 27ல் தனியார் நிறுவனங்களுக்கான டெண்டர் நோட்டீசை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் 28 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 6 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

30 மாதமாக போராடிவரும் புதுச்சேரி

பாரதிய ஜனதா (BJP) கட்சியின் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள் நம்ம ஊரு உட்பட அனைத்து யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மின் துறைகளையும் விற்க போகிறோம் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தது முதல் புதுச்சேரி அரசு மின்துறை ஊழியர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பிஜேபி கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் மின் துறையை தனியார் மயமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று தீரமிக்க போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் 28ஆம் தேதி நமது கட்சி அலுவலகத்தில் நமது கட்சியின் முன்முயற்சியில் மின்துறை தனியார்மய நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கான எதிர்ப்பு இயக்கம் தொடர்பாக இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின் ஊழியர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சுமார் 1500 பேர் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டமாக நடைபெற்றது. நமது கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர் தோழர் ஏ.கே.பத்மநாதன் அவர்கள் இந்த போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

இருளில் முழ்கிய புதுச்சேரி

மின் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு காரைக்கால், மாகே, புதுச்சேரி, ஏனாம் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் நமது கட்சி அணிகள் வீதியில் இறங்கி புதுச்சேரி அரசின் மின்துறை தனியார்மய நடவடிக்கைக்கு எதிராகவும் மின் தடைக்கு எதிராகவும் போராடினர். தொடர்ந்து மூன்று நாட்கள் அமைதியாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தை சீர்குலைக்க ஆளுங்கட்சி மின்துறை பாஜக அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தலையீட்டின் காரணமாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போராடக்கூடிய தொழிலாளர்களுக்கு எதிராக பொதுமக்களை திருப்பிவிடும் காரியத்தையும் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் வேலையை அரசாங்கம் மற்றும் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர். இது சம்பந்தமாக போராட்ட குழுவினர் பல்வேறு விளக்கங்களையும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டதோடு அக்டோபர் 1ஆம் தேதி இரவு மின் துண்டிப்புக்கு உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் போராடும் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு துணை ராணுவ படை பிரிவை வரவழைத்து அக்டோபர் 2ந்தேதி இரவு 10 மணி அளவில் மின் துறை தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 700க்கும் அதிகமான ஊழியர்களை கைது செய்து ஒரு நாள் முழுவதும் சிறை வைத்தனர். இந்த தகவல் அறிந்தவுடன் சிபிஎம் கட்சியும் CITU தொழிற்சங்க தலைவர்கள் நேரடியாக சென்று கைது செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 60 ஊழியர்களை சொந்த பிணையிலும் மற்றவர்களை நேரடியாக விடுதலை செய்தது காவல்துறை. அதேபோல் CITU மின் ஊழியர் சங்க தலைவர் தோழர் முருகசாமி அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார் பிறகு நமது தலையீட்டுக்கு பிறகு இரண்டு நாள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுச்சேரி அரசின் இந்த அடாவடி நடவடிக்கை கண்டித்து CITU, விசிக தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மின் தலைமை அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.

பொய் வழக்கு

கடந்த செப்டம்பர் 27ந்தேதி முதல் போலிசாரின் முழு கட்டுப்பாட்டில் பலத்த பாதுகாப்பாக இருக்கும் துணை மின் நிலையங்களில் புகுந்து பியூஸ் கேரியரை பிடுங்கியதாகவும், திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தியதாகவும் பச்சை பொய்யை கூச்ச நாச்சமின்றி கூறி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் போலி புகாரின் அடிப்படையில் புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள் வேறு வழியின்றி மின்துறை ஊழியர்கள் 29 பேரின் ஊழியர்கள் மீது 143 – சட்டவிரோதமாக கூடுதல், 353 – அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், 448 – அத்துமீறி நுழைதல், 149 – கும்பலாக கூடி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

போராடும் ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழக மற்றும் அகில இந்திய தொழிற்சங்கள்.

போராடும் ஊழியர்களுக்கு ஆதரவாக அகில இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு தலைவர் சைலந்தர் துபே, துணை தலைவர் ஜெயந்தி, தேசிய மின்சார பொறியாளர் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் நந்தி சவுத்திரி, இந்திய மின் ஊழியர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் சுப்ரமணி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணை பொதுச் செயலாளர் ரவிந்திரன் உள்ளிட்ட தேசிய மற்றும் தலைவர்கள் புதுவைக்கு வந்து தங்கி நடைபெற்று வரும் போராட்டத்தை வழி நடத்தி வருகிறார்கள். மேலும் புதுச்சேரி மின் துறை ஊழியர்களின் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் பிற மாநில மின் துறை பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.

அனைத்து கட்சி கூட்டம்

இன்று அக்டோபர் 3ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதசார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் மாநிலங்களவை உறுப்பினர் வி. வைத்தியலிங்கம், திராவிட முன்னேற்றக் கழக எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மின்சார துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்களை மேற்கொள்வது என்றும், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான பொது நல வழக்கை தாக்கல் செய்வது என்றும் பொதுமக்கள் மத்தியில் அரசியல் பிரச்சார இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்துவது மின் ஊழியர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வைப்பது போன்ற முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிக நிறுத்தம்

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வந்தனர். இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர், தலைமை செயலாளர், மின்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மின்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மின்துறை ஊழியர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போராட்டக்குழு மின்துறை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்குழுவினர் கீழ்கண்ட கோரிக்கையினை முன்வைத்தனர்

1. புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதற்கான காரணம் என்ன? புதுச்சேரியில் தான் நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணமும், 11.50 சதவீதம் மட்டுமே மின் இழப்பும், மின் துறை லாபமும் அடைந்து வரும் போது எதற்காக தனியார்மயமாக்க வேண்டும் ?

2. எந்த அடிப்படையில் புதுச்சேரியின் மின்துறை 100% தனியார்மயமாக்கப்படுகிறது, டெல்லி, கிரேட்டர் நொய்டா, தாத்ரா நகர் ஹவேலி டாமன் & டையூ மற்றும் ஒரிசா ஆகிய இடங்களில் 51% அளவில் மட்டுமே தனியார்மயமாக்கப்பட்டது உள்ளது. அப்படி இருக்கம் போது 100% தனியார்மயமாக்கும் செயல்முறை அரசியலமைப்பிற்கு முரணானது.

3. மின் பயன்பாடுகளை தனியார்மயமாக்குவதற்காக, மத்திய அரசு செப்டம்பர் 2020 இல் வரைவு நிலையான ஏல ஆவணத்தை வெளியிட்டது, அது இன்னும் வரைவாகவே உள்ளது. அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நிலையான ஏல ஆவணம் இன்னும் முடிவடையாத நிலையில், எந்த ஆவணத்தின் அடிப்படையில் புதுச்சேரி தனியார் மயமாக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி.

நிலையான ஏல ஆவணத்தில், மின்துறையின் முழு நிலத்தையும் ₹ 1க்கு மட்டுமே குத்தகைக்கு விடுவதற்கான விதிமுறை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது நியாயமா?

சண்டிகரில் மின் துறையின் ரூ.27000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வெறும் ரூ.871 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் மின்துறையின் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் தனியார் நிறுவன தூக்கி எறியும் விலைக்கு வழங்கப்படுமா, புதுச்சேரி மற்றும் பொதுமக்களின் நலன் காக்கப்படுமா?

4. மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022 ஆகஸ்ட் 08 அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடாளுமன்றம் அதை மின்சார விவகாரங்களுக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது. நிலைக்குழு அறிக்கை இன்னும் வரவில்லை. இந்த புதிய மின்சார சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் அறிக்கைக்காக காத்திருக்காமல் புதுச்சேரி ஏன் தனியார்மயமாக்கப்படுகிறது. என்ன அவசரம்?

5. வரைவு மின்சாரம் (திருத்தம்) விதி 2022 ஆகஸ்ட் 2022 இறுதியில் வெளியிடப்பட்டது. இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

6. புதுச்சேரியின் மின் துறை மின்சாரத் துறையில் முன்மாதிரித் துறை. நிலையான ஏல ஆவணத்தை இறுதி செய்யாமல், மின்சார (திருத்த) மசோதா 2022க்கான நிலைக்குழு அறிக்கையை இறுதி செய்யாமல், மின்சார (திருத்த) விதி 2022ஐ இறுதி செய்யாமல், லாபம் ஈட்டும் புதுச்சேரி மின்துறை அவசர அவசரமாக தனியார்மயமாக்கப் படுவதின் மர்மம் என்ன? அரசுக்கு கார்ப்பரேட் அழுத்தம் உள்ளதா?

6. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. மத்திய அரசின் அழுத்தத்தை நீங்கள் ஏற்கக் கூடாது. எந்த அரசாங்கத்தின் அழுத்தத்தையும் விட மக்களின் அழுத்தம் பெரியது.
எனவே, தனியார்மயமாக்கும் செயல்முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இறுதியாக முதல்வர் இந்த உண்மைகள் எல்லாம் இதுவரை எங்கள் முன் வைக்கப்படவில்லை என்றார். இந்த உண்மைகளின் அடிப்படையில், தனியார்மயமாக்கும் செயல் முறையை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவேன் என்றார். தனியார்மயமாக்கும் செயல்முறையை மறுபரிசீலனை செய்ய புதுச்சேரி அரசு மத்திய அரசை கோரும் என மின்துறை அமைச்சரும் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதனை அடுத்து அக்டோபர் 24ஆம் தேதி வரை இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டால் மீண்டும் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பிஜேபி கூட்டணி ஆட்சியாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாகவும் முதல்வர் ரங்கசாமி தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஊழியர்கள் தொழிற்சங்க தலைவர்கள் முன்வைத்த மாற்று திட்டங்களை பரிசீலனை செய்வதாக வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

அவர்களின் பொய் பித்தலாட்டங்களை நம்பி போராட்டத்தை புதுச்சேரி மக்கள் கைவிட கூடாது மேலும் அரசும் மின்துறை சொத்துக்களை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் முடிவை முழுவதும் கைவிடும் வரை புதுச்சேரி மக்களோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply