* அப்பாவி பாலஸ்தீன மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து…
* போர் வெறியை வளர்த்து ஆதாயம் தேடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து…
* பாலஸ்தீன மக்களை ஆதரிக்கும் நமது பாரம்பரியமான வெளியுறவு கொள்கையிலிருந்து ஒன்றிய அரசு மாறுபடாமல் இருக்க கோரி…
உரிமைக்காக போராடும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆர்ப்பாட்ட போராட்டம் இன்று 25-10-2023 காலை சுல்தான்பேட்டை ரயில் நிலையம் எதிரில் நடைபெற உள்ளது அனைவரும் வருக.
பாலஸ்தீனத்தின் மீது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன் இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் 700 பாலஸ்தீன குழந்தைகள் உட்பட 7000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு தீர்மானங்களை மீறி பாலஸ்தீனர்களை அழிப்பதை
இஸ்ரேல் வழக்கமாக கொண்டுள்ளது. சர்வதேச போர் விதிகளை மீறி காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவ படை நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுகணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் பாலஸ்தீன மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்துக்கொண்டுள்ளனர். இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் வாழ்வது போல் வாழ்ந்துக் கொண்டுள்ளனர். குடிநீர், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார கழகத்தின் பாலஸ்தீன வட்டார இயக்குநர் குடிநீர், மருந்தின்றி பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கூறியுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அதை பாதிக்கப்பட்ட நாடாகவும் சித்தரித்து வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நமது இந்திய நாட்டின் பாரம்பரியமான வெளியுறவு நிலைபாட்டிற்கு எதிராக. தற்போதைய ஒன்றிய அரசு இஸ்ரேல் நாட்டை ஆதரிக்கிறது.
இத்தகைய கடும் நெருக்கடியான சூழலில் பாலஸ்தீன மக்களோடு துணை நின்று இஸ்ரேல்
நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை நிறுத்த செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். எனவே, அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளை நிறுத்திடவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறி தூண்டுதலை தடுத்திடவும், நமது பாரம்பரியமான வெளியுறவு கொள்கையை கடைபிடித்து பாலஸ்தீன மக்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவு அளித்திட வலியுறுத்தியும் நடைபெறும் ஆர்பாட்ட போராட்டத்தில் அனைத்து மக்களும் பங்கேற்று அமைதிக்கான குரலை ஓங்கி ஒலித்திட செய்வோம்.