இலவச அரிசி: கிரண்பேடி நிபந்தனைக்கு சிபிஎம் கண்டனம்

‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி மநிலத்தில் எந்தக் கிராமம் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படவில்லையோ, அந்தக் கிராம மக்களுக்கு அரசின் அரிசி வழங்கப்படமாட்டாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தான்தோன்றித்தனமாக அறிவித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த அநாகரிக உத்தரவை துணைநிலை ஆளுநர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரிசி போடுவது அரசின் கடமை. குப்பைகளை அகற்றுவது அரசின் வேலை. இந்தியா சுத்தமாக இருக்க வேண்டுமென மோடி சுவச் பாரத் திட்டத்தைக் கொண்டு வந்து விளம்பரத்தில் துடைப்பத்துடன் காட்சியளித்தார். திட்டம் படு தோல்வியானது. கங்கையை சுத்தப்படுத்த 3 ஆயிரம் கோடி செலவழித்தார்கள்.சுத்தப்படுத்த முடியவில்லை. துணைநிலை ஆளுநர் நகரின் மையப் பகுதியில் விரட்டி விரட்டி குப்பை அள்ளினார். தனியார் மூலமாகவும் குப்பையை அள்ளச் சொன்னார்.

ஆனால் குப்பையை அகற்றிய அந்த ஊழியர்களுக்கு பல மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. அகற்றிய குப்பையை கருவடிக்குப்பம் பகுதியில் கொட்டி மேடாக்கினர். அதற்கு யார் காரணம்?

குப்பையை அகற்ற திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும். இது எந்த இடத்திலும் புதுச்சேரியில் இல்லை. திடக்கழிவு இல்லாத சுவச் பாரத் திட்டம் பயனற்றது என்பது ஆளுநர் அறியாததா? குப்பை அள்ளுவது நகராட்சி கிராமப் பஞ்சாயத்தின் வேலை. நகராட்சி கிராமப் பஞ்சாயத்து நிர்வாகமே இல்லை. உள்ளாட்சி தேர்தல் இல்லை.

குப்பைக்கும் வரி போட்ட புதுச்சேரி அரசு இன்று குப்பைகளை மக்களே அள்ள வேண்டும் இல்லை என்றால் ரேஷனில் அரிசி இல்லை என்று சொல்வது மக்கள் விரோதமானதாகும்.

ஆளுநர் தனது உத்தரவை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரும் 30ம் தேதி ஆளுநர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply