பிரஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான V. ராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி விடுதலைக்காக ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திவந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான அடக்குமுறைகளை பிரஞ்சு அரசாங்கம் ரவுடிகளையும், கைக்கூலிகளையும் கொண்டு நடத்தி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் “சுதந்திரம்” அச்சகத்தில் ஊழியராக அப்போது தோழர் ராமமூர்த்தி பணியாற்றி வந்தார். அப்பொழுது “சுதந்திரம்” அச்சகம் அடித்து நொறுக்கப்பட்டது. இத்தகைய தாக்குதலை கம்யூனிஸ்ட் இயக்கம் மக்கள் சக்தியோடு வலுவாக சந்தித்தது.
இக்காலத்தில் தோழர் ராமமூர்த்தி மீது பிரஞ்சு அரசாங்கம் கொலை வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்து சிறையில் அடைத்தது. 1950 முதல் 1954 வரை சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் பிரஞ்சு இந்திய விடுதலைக்குப்பிறகு விடுதலை செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அவரது மகன் முருகன் தீக்கதிர் நிருபராக பணியாற்றி வருகிறார். 83 வயதான தோழர் V.ராமமூர்த்தி கடந்த ஓராண்டு காலமாக அவ்வப்போது உடல்நலம் குன்றியிருந்தார். கடந்த ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை இயற்கை எய்தினார். மறைந்த தோழர் V. ராமமூர்த்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழு தனது இரங்கலை தெரிவிக்கின்றது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான ராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். மாநில செயற்குழு உறுப்பினர்களான தோழர் செல்வசிங், என்.சீனுவாசன், என்.குணசேகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினரான தோழர் சுதா அவர்களும் இரங்கலை தெரிவித்துள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு தோழர்கள் மறைந்த தோழர் ராமமூர்த்திக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.