இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பத்திரிக்கை செய்தி
தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தி வரும் பொறுப்பு துணைநிலை ஆளுனரே புதுச்சேரியை விட்டு வெளியேறு!
————
தேவையான ரேஷன் கடைகளைத் திறக்காமல்… தேவையற்ற மதுக்கடைகளை திறந்து வைத்து புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைக்கும் துணைநிலை ஆளுனரே புதுச்சேரியை விட்டு வெளியேற கோரி புதுச்சேரி காரைக்கால் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வரும் 20 .01. 2023, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் (புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி, இடம்: அண்ணா சிலை அருகில் பழைய பஸ் ஸ்டாண்ட் நடைபெற உள்ளது.)
புதுச்சேரி மக்களுக்காகவே அவதாரம் எடுத்து வந்து, அன்னந்தண்ணி ஆகாரம் கூட எடுக்காமல், அல்லும் பகலும் அவர்களுக்காகவே சதா சிந்தித்து உழைப்பதாக காட்டிக்கொள்ளும் பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள்.
ஆளுநர் மாளிகையில் நடத்திய பொங்கல் விழாவில்” புதுச்சேரியில் இனி ரேஷன் கடைகள் திறக்கப்படாத சூழலே நிலவுகிறது; திறப்பது பற்றி ஏதும் கூற இயலாது என்றும், நேரடி பணப்பட்டு வாடாவைத்தான் மக்கள் விரும்புவதாக கூச்சம் இல்லாமல் பொய் பேசி உள்ளார்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் திரு என்.ரங்கசாமி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சூழ்ந்து கொண்டு ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்துகின்றனர். அவரும் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்து விட்டு வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தும் போது எல்லாம் துறை அமைச்சர் திரு சாய் சரவணன் அவர்கள் அவ்வப்போது ரேஷன் கடைகளை திறக்க மத்திய அரசுடன் பேசி உள்ளதாகவும் விரைவில் தரமான உணவுத் தொகுப்பு, ரேஷன் கடைகளை திறந்து, வழங்கப்படும் எனவும் அறிக்கை விடுகிறார் .ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களின் கூற்றுக்கு முரணாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்து எதிராக ஒன்றிய பாஜக அரசின் ஏஜென்டான தமிழிசை ரேஷன் கடைகளை திறக்க வாய்ப்பில்லை என அறிவிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிட முதல்வர் அவர்கள் ஆளுநருக்கு குத்தகை விட்டுள்ளாரா? வழக்கம் போல இதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் முதல்வர் அவர்கள் என்.ஆர் அவர்கள் மௌனம் சாதிப்பது மக்கள் நலனை ஆளுநருக்கு அடகு வைப்பது ஆகாதா? திரு என்.ரங்கசாமி அவர்கள் மௌனம் கலைந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் புதுச்சேரி உணவு வழங்கல் அமைச்சர் திரு சாய்சரவணன் அவர்கள் ரேஷன் கடைகளை திறக்க ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கின்றன, உணவு தொகுப்புகள் வழங்கப் படுகின்றன. புதுச்சேரியில் மட்டும் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதே ஏன்? என். ஆர்.காங்கிரஸ்- பாஜகவுக்கு ஓட்டு போட்டதை தவிர என்ன குற்றம் செய்தார்கள்? உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு இதுதான் தண்டனையா? என மக்கள் கேட்கிறார்கள். சிவப்பு ரேஷன் அட்டைகளுக்கு, கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் நபருக்கு 5 கிலோ அரிசி வழக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னணியில் புதுச்சேரி ரேஷன் கடைகளை திறக்காமல் முட்டுக்கட்டை போடும் ஆளுநரின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் ரேஷன் கடைகள் மூடப்பட்டு 50 மாதங்களாக ஊதியம் இல்லாத நிலையில் ஊழியர்கள் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அங்கு பணிபுரிந்த 700 ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டுள்ளன.
மதுபானக் கடைகளை/ மதுதொழிற்சாலைகளைத் திறக்க விசேஷ கவனம் செலுத்தும் ஆளுநர் ரேஷன் கடைகளை திறக்க மறுப்பதன் நோக்கம் என்ன? எல்லாவற்றிலும் புதுச்சேரி மக்களின் உணர்வு நிலைக்கு மாறாகவே செயல்படுகிறார் ஆளுனர். மின் துறை தனியார் ஆனால் கட்டணம் உயரும் என பாமரன் கூட ஒப்புக் கொள்வான். ஆனால் ஆளுநர் மின்கட்டணம் குறையும் என்கிறார். ரேஷன் கடைகளை திறந்து உணவு பொருட்கள் வேண்டும் என்கின்றனர் மக்கள். ஆளுநரோ பணம் போடுவதைத்தான் மக்கள் விரும்புவதாக கதை அளக்கிறார். தமிழை அழிக்கும் நோக்கத்தோடு மாநில பாடத்திட்டற்குமாறாக சிபிஎஸ்இ அமுல் படுத்துவது, எந்தவித ஆய்வும் இன்றி EWS அமுல்படுத்துவது உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது, மின்துறையை விற்க துடிப்பது என தொடர்ந்து புதுச்சேரி மக்களை ஏமாளிகளாகவும், புதுச்சேரி மாநிலத்தை சோதனை கூடமாகவும், பிஜேபியின் மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தும் சோதனைக் களமாகவும் ஆளுநர் நினைப்பதை மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது.
எனவே புதுச்சேரியையும் புதுச்சேரி மக்களையும் சீரழித்து சின்னா பின்னமாக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படும் துணைநிலை ஆளுநர் தமிழிசையே வெளியேறு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படும் கண்டன முழக்க போராட்டத்தில் புதுச்சேரி உள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் பொது மக்களும் பங்கேற்று வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
இரா.ராஜாங்கம்,
செயலாளர்,
சிபிஐ(எம்) புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > ஊடக அறிக்கை Press release > பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசையே புதுச்சேரியை விட்டு வெளியேறு- சிபிஎம்
பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசையே புதுச்சேரியை விட்டு வெளியேறு- சிபிஎம்
posted on