புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசும், மாநில என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவை கைவிடக்கோரி காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள், அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளடக்கிய போராட்டக்குழுவினர் புதன்கிழமை முதல் (ஜூன்-8) தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் முன்பு துவங்கிய உண்ணாவிரத போராட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சி. அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, இளங்கோவன், சாந்துராஜன் உட்பட திரளான மின்துறை ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். ஜூன் 14 வரை நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மின்துறையை சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் பணியாற்றும் ஊழியர்கள் தினந்தோறும் கலந்து கொள்கின்றனர்.