தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக்கொள்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பத்திரிக்கைச் செய்தி 09.7.2022                        புதுச்சேரி அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் – சிபிஎம்.

புதுச்சேரி ஆட்சியாளர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் – சிபிஎம்.

நீட் தேர்வின் கீழ் வராத கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பேரா மெடிக்கல் சயின்ஸ், பொறியியல் சட்டம் மற்றும் விவசாயக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை திட்டமிட்டுத் தாமதமாகத் தொடங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத்தில் நீட் அல்லாத உயர் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றபோது. புதுச்சேரியில் மட்டும் வினோதமான முறையில் நீட் தேர்வையும், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வராததைக் காரணம் காட்டி உயர் படிப்புகளுக்கான அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 15 நாட்களுக்கு மேலாக தாமதப்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வந்த உடன், உடனே புதுச்சேரியில் நீட் தேர்வின் கீழ் வராத உயர் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டது மேலும் புதுச்சேரியில் உள்ள இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தையும் நடத்தியபோது அதிகாரிகள் மேற்கண்ட நீட் தேர்வை காரணமாகக் கூறினர். எங்கள் கட்சியின் சார்பில் உயர்கல்வித்துறை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்தவுடன் தற்போது சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை புதுச்சேரி அரசு செய்துள்ளது.

இதன் பின்னனியில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் நடப்பதாக தெரிகிறது. குறிப்பாக அரசு கல்லூரிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பிஏ , பிஎஸ்சி, பி.காம் போன்ற படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணம் மிக மிகக் குறைவு. ஆனால் இதே படிப்புகளைத் தனியார் கல்லூரிகளில் ரூபாய் 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை ஆண்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அரசு கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தாமதப்படுத்த பட்டதால் தங்கள் குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ தனது பிள்ளைகள் விரும்பும் பாடம் கிடைக்காமல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மற்றும் ஏழை எளிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்கேயாவது கடன்வாங்கி நகைகளை விற்றுத் தங்கள் குழந்தைகளுக்கான கல்லூரி இடத்தை உறுதிப்படுத்த பாடாய்படுகின்றனர். குறிப்பாகப் புதுச்சேரியில் உள்ள சில தனியார் கல்லூரியில் பிகாம் படிப்பிற்கு வருடத்திற்கு 80 ஆயிரம் கட்டணமும், 25000 நன்கொடையும் செலுத்தி தான் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து உள்ளதாகப் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.

இப்படித் தனியார் கல்லுாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுதின் மூலம் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாகப் பேசப்படுகிறது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பிஜேபி கூட்டணி அரசுக்கு ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியோ தரமான கல்வி பெற வேண்டும் என்பதைப் பற்றியோ சிறிதும் அக்கறையில்லை என்பது தெளிவாகி உள்ளது. திட்டமிட்டு, சொத்தையான காரணங்களைக் காட்டி, அரசு கல்லூரிகள் திறக்கப்படாமல் பார்த்துக் கொண்டு, தனியார் கல்லூரிகள் கொள்ளையடிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய புகார்கள் குறித்தும் தனியார் கல்லூரிகளில் இருந்து பணம் பெற்ற கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மை சொல்ல வேண்டும் மேலும் தற்போது தனியார் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள மாணவர்கள் அரசு சென்டாக் மூலம் அரசுக் கல்லூரியில் சேர்ந்தால் அந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் கட்டி உள்ள பணத்தைப் புதுச்சேரி அரசே திரும்ப வாங்கிக் கொடுக்கவேண்டும் இதற்கு என்று தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

இவன்,
ஆர்.ராஜாங்கம்,

புதுச்சேரி மாநில செயலாளர் சிபிஐஎம்

Leave a Reply