மக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார் – சிபிஎம்

அரிசி அரசியல் மக்களை அலைக்கழிக்கிறது.

வெ. பெருமாள்ஒற்றை அவியல் அரிசி மாநில மக்களின் விருப்பமான உணவாகும். ஆகவே, மாநில அரசின் இலவச அரிசி திட்டம் தொடர வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் விருப்பம் இயல்பானதுதான். துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடியின் அதிகார அஸ்திரமும், மாநில அரசின் அதிகாரமில்லாத கையறுநிலையும் அரிசி வழங்குவதில் இழுபறி நிலை தொடர்கிறது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜக, ஆளுநர்கள் மூலம் குறுக்குவெட்டு அரசியல் செய்கிறது. இதனால் புதுச்சேரியில் பல மாதங்களாக மக்களுக்கு அரிசி வழங்காத நிலை கவலையளிக்கிறது.

இலவச அரிசி வழங்குவதற்கு ஆளும் கூட்டணி அரசு உறுதியான அணுகுமுறை மேற்கொண்டது. இது 17வது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பேரவை இடைத்தேர்தல்களில் ஆளும் கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் மோடி ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தி உள்ளிட்ட அரசியல் காரணங்கள் இருந்த போதிலும் இலவச அரிசி திட்டம் தேர்தலில் முக்கிய பங்காற்றியது. கடந்த காலங்களில் தமிழகம், ஜார்க்ண்ட் போன்ற மாநிலங்களில் அரிசி அரசியல் அதிகாரத்தை வசப்படுத்த உதவியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் இலவச அரிசி வழங்கல் புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் நிலைபாடு

புதுச்சேரி அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் இலவச அரிசி வழங்கல் தொடர்பாக வினையாற்றி வருகின்றன. பாஜக அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வலியுறுத்துகிறது. அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், அரிசி வழங்கப்படாத மாதங்களுக்கு பணம் வழங்கிடவும், அதன் பின் தொடர்ந்து அரிசி வழங்கிடவும் வலியுறுத்தின. திமுக மற்றும் சிபிஐஎம், சிபிஐ, சிபிஐ(எம்.எல்) ஆகிய இடதுசாரிகள் அனைவருக்கும் தரமான அரிசி வழங்கிட வலியுறுத்தின. அமமுக மக்கள் விருப்பப்படி அரிசி (அ) பணமோ யார் யாருக்கு என்ன தேவையோ அதன்படி வழங்க வலியுறுத்தியது. பொருளாதார பேராசிரியரும், மேனாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.மு.ராமதாஸ் அவர்கள் உள்ளூர் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு டோக்கன் முறையை முன்மொழிந்தார். அதாவது மக்கள் விரும்பும் கடைகளில் அரிசி வாங்கிக் கொள்ளவும், வணிகர்களுக்கு அரசு பணத்தை வழங்கவும் வலியுறுத்தினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கள ஆய்வு மூலம் மக்களின் விருப்பமான இலவச அரிசி வழங்கிட வலியுறுத்தியது.

2013ல் உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தின் கீழ் பொதுவிநியோகத் திட்டத்தில் நேரடி பணப்பரிமாற்றத்தை (Direct Benefit transfer) கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. இத்திட்டத்தை இடதுசாரிகள் மிக கடுமையாக எதிர்த்தன. தற்போது பெருவாரியான மக்களின் உணர்வுகள் ஏற்படுத்தியுள்ள பௌதீக மாற்றம் தான் இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற நிலைக்கு காங்கிரஸ் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வினியோகத் திட்டத்தில் இடதுசாரிகளின் தொடர் தலையீடும், மக்களின் நடைமுறை அனுபவமும் பண பரிவர்த்தனை முறைக்கு எதிராக மக்களை நிறுத்தியுள்ளது. பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் முறையை எதிர்த்தன. தரமான ஒற்றை அவியல் அரிசி வழங்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தையே பிரதிபலித்தன.

கபட நாடகம்

இலவச அரிசி விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மாறுபட்ட கருத்து நிலவியது. இது விஷயத்தில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்க ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டது. மறுபுறத்தில் மத்திய அரசின் முடிவுக்கு முன்பாகவே ஆளுநர் பணம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அச்சமயம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் இலவச அரிசி தொடர்பான ஆய்வு அடிப்படையில் மனுவோடு துணைநிலை ஆளுநரை சந்தித்தனர். அரிசி வழங்க வலியுறுத்தினார்கள். கோரிக்கையை நிராகரித்த துணைநிலை ஆளுநர் போராட்டம் நடத்துங்கள் உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மாதர் சங்கம் ஏற்கவில்லை. இந்தப் பின்னணியில் பாஜகவினர் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க போராட்டம் நடத்தினர். 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் 5 மாதங்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என கவர்னர் அறிவிப்பு செய்தார். 19.12.2019ல் சிவப்பு அட்டைக்கு ரூ. 3000ம், 20.12.2019ல் மஞ்சள் அட்டைக்கு ரு.1500ம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அமைச்சரவையின் முடிவை நிராகரித்தது. துணைநிலை ஆளுநர் பரிந்துரையை ஏற்று அரிசிக்கு பதிலாக பணம் வழங்க 20.12.2019ல் உத்தரவிட்டது. இலவச அரிசி விவகாரத்தில் கபட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

  • கவர்னர் எதன் அடிப்படையில் அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
  • மக்கள் சந்திப்பு மற்றும் பொதுநிகழ்ச்சிகளின் போது அரிசி வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை ஏன் கவர்னர் கவனத்தில் கொள்ளவேயில்லை.
  • பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கருத்துக்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை?
  • மாநில உரிமை சார்ந்த இலவச அரிசி திட்டத்தில் பணம் தான் வழங்க வேண்டும் என்று எந்த சட்டம் அல்லது விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது?
  • சட்டம் மற்றும் கொள்கை விதி மீறல்களுக்கு உட்படாத மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட என்ன முகாந்திரம் இருக்கிறது?
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா அல்லது கண்காணிப்பில் உள்ள அமைப்பா என மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுகின்றன.

ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள்

மோடி-1 ஆட்சியில் பொதுவினியோகத் திட்டமும் தப்பவில்லை. உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் கீழ் மத்திய அரசு உணவுப் பொருளுக்குப் பதிலாக பணம் பரிமாற்ற முறை செயல்படுத்தியது. இத்திட்டம் புதுச்சேரி, சண்டிகர், தாத்ராநகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது 2016 செப்டம்பரில் இத்திட்ட முறை அமலாக்கப்பட்டது. இத்திட்டம் அமலாக்கத்தின் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதார பேராசிரியர்கள் கார்த்திக் முரளிதரன், பால் நிகாஸ் மற்றும் சந்திப் சுக்தன்கர் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இவர்கள் மகாராஷ்டிரா மாநில அரசுடன் இணைந்து மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் பொதுவினியோகத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணப்பரிமாற்ற முறை அமலான ஒவ்வொரு 6 மாத கால முடிவிலும் 3 முறை ஆய்வுகள் நடத்தப்பட்டன. புதுச்சேரி உள்ளிட்டு 3 யூனியன் பிரதேசங்களில் நடந்த முதல் ஆய்வில் 99 சதவீத பயனாளிகளுக்கு பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன. ஆனால் 20% பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை என தெரிவித்துள்ளனர் என்றாலும் 3ல் இரு மடங்கு குடும்பத்தினர் பணப் பரிமாற்ற முறையை வரவேற்றனர்.

இரண்டாவது சுற்று ஆய்வில் மக்களிடம் ஊசலாட்டமும், நடைமுறை சிரமங்கள் இருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளனர். மூன்றாவது சுற்று ஆய்வில் அதாவது 18 மாதங்களின் முடிவில் மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் பகுதியினர் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் பொருள் தான் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் குறைந்த விலையில் அதிகமான உணவு தானியங்கள் கிடைப்பதால் பொதுவினியோக முறையை மக்கள் விரும்புகிறார்கள் என்பதாகும்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில அரசின் இலவச அரிசித் திட்டம் குறித்து மக்களிடம் ஆய்வுகளை நடத்தியது. 1400 குடும்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 90 சதவீத குடும்பத்தினர் அரிசி வேண்டும் என விரும்புவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2020 ஜனவரியில் தலித் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் தீண்டாமை வடிவம் குறித்து கள ஆய்வு நடத்தியது. ஆய்வு நடந்த 30 கிராமங்களிலும் தலித் மக்கள் இலவச அரிசி வழங்க வலியுறுத்துவதாக ஆய்வில் தெரிய வந்தது. மேலும் வழங்கப்படும் பணம் உணவுக்காக பயன்படவில்லை. பெரும்பாலும் மதுவிற்காக செலவிடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளன.

பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை 2019ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் பட்டினி பட்டியலில் (Global Hunger index) இந்தியா மிகமிக மோசமான நிலையில் உள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டில் பட்டினி பட்டியலில் 113 நாடுகளில் இந்தியா 83வது இடத்தில் இருந்தது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில், 2019ல் உலக பட்டினி பட்டியலில் 117 நாடுகளில் 102வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

அண்டை நாடுகளான இலங்கை (66), மியான்மர்(69), நேபால்(73), பங்களாதேஷ்(88) மற்றும் பாகிஸ்தான்(94) ஆகிய வளம் குன்றிய நாடுகளை விட இந்தியா பட்டினி நாடுகள் பட்டியலில் மிக கீழான நிலையில் உள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20.8% எடைக்குறைவு, 37.9% வளர்ச்சி குறைவு ஆகிய பாதிப்பு உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இது ஆபத்தான எச்சரிக்கையாகும்.

பொருளாதார அறிஞர்களின் சமூக நீதி பார்வை டாக்டர் அமர்த்தியா சென், டாக்டர் ஜான் டிரீஸ் எழுதியுள்ள நிச்சயமற்ற பெருமை – இந்தியாவில் முரண்பாடுகள் நூலில் (An Uncertain Glory-India and its Contradictions)  பொதுவினியோகத்திட்டம் வெறும் வருவாய் ஆதரவு மட்டுமல்ல. இதன் கீழ் பருப்பு, சமையல் எண்ணெய், செறிவூட்டிய உப்பு போன்ற ஊட்டச்சத்துள்ள பொருட்களை பல மாநிலங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன. இது ஏழை குடும்பங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து அளிப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

1.பொருளுக்கு பதிலாக பணம் வழங்குவது தவறாக பயன்படுத்தப்படும். மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமப்பங்கீடு நிராகரிக்கப்படும். குழந்தைகள், பெண்கள் நலன் புறந்தள்ளப்படும்.
2.வழங்கப்படும் பணம் சந்தை விலையை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்காது.
3.பொதுவினியோகத் திட்டம் நல்ல முறையில் செயல்படும் இடங்களில் மக்களிடம் பணப்பரிவர்த்தனைக்கு ஆதரவில்லை
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு மற்றும் வரலாற்றியல் போக்கில் எழுதப்பட்ட நூல் விளிம்பு நிலை மக்களின் அதிகாரம் மற்றும் உரிமைக்காக பேசுகிறது.

ஆகவே, பணப்பரிவர்த்தனை முறைக்கு மாறுவது பொறுத்தப்பாடற்றது. மிகப் பெரிய தவறில் போய் முடியும் ஆபத்து உள்ளது. பணம் தான் வேண்டும் என்ற அழுத்தம் மக்களிடமிருந்து எழவில்லை. பொதுவினியோக முறையை வலுப்படுத்துவது அவசியம். ஏழை மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக நீதியல்ல, பயனுள்ள கொள்கையுமல்ல. தங்களின் ஆய்வுகள் மூலம் சமூக பொறுப்புணர்வை அழுத்தமாக தெரிவுப்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசால் கைவிடப்படும் பொதுவினியோகத்திட்டம்

விடுதலைக்கு முன்பும், பின்பும் இந்தியா பல உணவு பஞ்சங்களை, கடும் வறட்சியை சந்தித்திருக்கிறது. உணவு தானியத்திற்கு மேலை நாடுகளை சார்ந்திருந்த நிலையும் இருந்தது. 1968-69களில் துவங்கிய பசுமைப்புரட்சி திட்டத்தால் உணவு உற்பத்தி பெருகியது. ஆனாலும் ஏழைகள் வறுமை, பட்டினியால் துன்புறுவது தொடர்ந்தது. இவ்வாறான வரலாற்று பின்புலத்தில் தான் வறுமை ஒழிப்பு, மக்களின் உணவு நுகர்வு மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டை இலக்காக கொண்டு பொதுவினியோகத்திட்டம் உருவாக்கப்பட்டன. இத்திட்டம் வறுமை ஒழிப்பை குறிக்கோளாக கொண்டிருந்த போதிலும் சமூகப் பொருளாதார வளர்ச்சியும் உள்ளடக்கியிருந்தது. குறிப்பாக,

• மக்கள் வாங்கும் சக்திக்கேற்ற விலையில் உணவுப் பொருட்களை வழங்குவது
• இத்திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை நேரடியாக கொள்முதல் செய்வது. விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்குவது
• வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயராமல் கட்டுப்படுத்துவது
என்பதாகும்.

சிறந்த முறையில் செயலபடுத்திய மாநிலங்களில் இத்திட்டம் மக்களின் வரவேற்பினை பெற்றது. நல்லபலனையும் அளித்தது. தானியங்கள் கொள்முதல், பாதுகாத்தல், வினியோகித்தல், மக்கள் எளிதில் பொருட்களை வாங்கும் வகையில் ரேஷன் கடைகளை பரவலாக்குதல்… போன்ற குறைபாடுகளை ஆளும் வர்க்கம் சீர்செய்ய வரவில்லை. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களில் இந்தியா பெற்ற கடனுக்காக அவர்கள் விதித்த நிபந்தனைகளால் பொதுவிநியோகத்திட்டம் வலுவிழக்க தொடங்கியது.

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தில் வறுமைகோடு கிழித்து பெருவாரியான மக்கள் திட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ரேஷனில் வழங்கிய பொருட்களின் எண்ணிக்கை, அளவுகள் குறைக்கப்பட்டன.

மோடி ஆட்சி-1ல் புதுச்சேரி, சண்டிகர், தாதர் நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் பணப் பரிமாற்ற முறை (2016 செப்டம்பரில்) அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டு மக்கள் வெளிச்சந்தைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சந்தை நிலைமைக்கு ஏற்ப அரசு பணத்தை மானியத்தை உயர்த்தி வழங்காது, வழங்கப்பட்டு வரும் பணமும் ஒரு கட்டத்தில் ரத்து செய்யப்படும் ஆபத்தும் உள்ளது. அனைவருக்கும் உணவு பாதுகாப்பு வழங்க வேண்டிய மத்திய அரசு தன் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்கிறது. உணவு தனிநபர் பிரச்சனையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் மாநிலங்கள் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுவினியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

துணைநிலை ஆளுநரின் கண்ணை மறிக்கும் அதிகாரம்

மாநில மக்களின் எண்ணங்களை காதுகொடுத்து கேட்க மனமில்லாதவராகவே தெரிகிறார். பல்வேறு கள ஆய்வு முடிவுகள், பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் வலியுறுத்தல்கள், பொருளாதார அறிஞர்கள், நோபல் பரிசுபெற்ற டாக்டர் அமர்த்தியா சென் மற்றும் ஜூன் ட்ரீஸ் ஆகியோரின் ஆய்வின் முடிவுப்படி அமைந்த சமூகநீதி கருத்துக்கள், துணைநிலை ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வுகள். இவைகள் எதையும் துணைநிலை ஆளுநர் ஏற்க மறுப்பது துளியும் நியாயமற்றது. புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களில் மாநில அரசின் பெரும் நிதி பங்களிப்போடு ரேஷனில் பொருள்கள் வழங்கப்படுவது குறித்து துணைநிலை ஆளுநர் அறியாததல்ல.

அரிசி வழங்கலில் மோசடிகளை தடுத்து, பயனாளிகள் விருப்பப்படி தேவையான நேரத்தில், தரத்தில் விரும்பும் இடத்தில் அரிசி வாங்கிக் கொள்ள பணம் வழங்குவதாக ஆளுநர் தரப்பில் கூறப்படுகிறது. மிகச் சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் ரேஷன் பொருள்கள் நவீன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. ரேஷன் ஸ்மார்ட் காடுகள் மூலம் கைவிரல் ரேகைகள் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது 1 கோடியே 27 இலட்சம் குடும்ப அட்டை தாரர்களின் போலி கைரேகை அச்சுக்களை தயார் செய்து ரேஷன் கடை உரிமையாளர்களால் பொருட்கள் களவாடப்பட்டுள்ளது. ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக பிரதமர் மோடியின் சகோதாரர் பிரகலாத் மோடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாநில அரசு விசாரணையை மேற்கொண்டுள்ளதே தவிர பொருட்களுக்கு பதிலாக பணம் வழங்கிடவில்லை.

ஊழல் முறைகேடுகளை களைந்திட உறுதியான, வெளிப்படையான வழிமுறைகளோடு ஏழை மக்களின் வறுமை ஒழிப்பு, உணவு நுகர்வு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவது என்ற இலக்கை எய்திட வேண்டும். மக்களின் உள்ளார்ந்த விருப்பங்களை, நலன்களை பாதுகாப்பதே சிறந்த அரசு நிர்வாகத்திற்கு அழகு. ஆனால் துணைநிலை ஆளுநரின் அதிகார போதை தலைக்கேறி உண்மையை கண்டுணர மறுக்கிறது.

மோடி -2 ஆட்சியில் பட்ஜெட்டில் மத்திய பட்ஜெட்டில்{2020-2021) பொதுவினியோகத்திட்ட நிதி ஒதுக்கீடு சுமார் 75000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டம் ஆகியவற்றிலும் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளன. கிராமப்புற 100 நாள் வேலைத்திட்ட நிதி ஒதுக்கீடு 71000 கோடியிலிருந்து 61500 கோடி ரூபாயாக குறைக்கபட்டுள்ளது. ஆனால் இக்காலத்தில் பெருமுதலாளிகளுக்கு 2.15 இலட்சம் கோடி ரூபாய்கள் வரிகுறைப்பு, மானிய சலுகை வழங்குவதில் என்ன நியாயம் – சமூக சமத்துவம் உள்ளது? ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றால் முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டு உழைப்பாளி மக்கள் வேலை இழப்பு, வருவாய் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதிய ஊட்டச்சத்து மிக்க உணவும் எவ்வாறு ஈடு செய்ய இயலும்.

வளரும் தலைமுறையினர் ஊட்டச்சத்து குறைபாட்டால் வயதுக்கு ஏற்ற எடையின்மை, வளர்ச்சி குன்றுதல் ஆகிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களை நோய்கள் எளிதில் தாக்கும் ஆப்த்துள்ளது. இவர்களின் அறிவு ஆற்றல், திறன் ஆகியன பாதிக்கும். மனிதவள மேம்பாட்டில் உண்டாகும் பாதிப்பு பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை உருவாக்கும். இந்த சூழலில் மாநில அரசு வழங்கும் ஒற்றை அவியல் இலவச அரிசி மக்களுக்கு உணவு பாதுகாப்பை வழங்கிடும். ரேஷன் கடைகள் பாதுகாப்பதன் மூலம் எதிர்காலத்தில் பருப்பு உள்ளிட்ட உணவு பொருள்கள் தானியங்களை வழங்க செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாநில அரசு, தேர்தல் வாக்குறுதிபடி சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் வழங்க வேண்டும். இவ்வாட்சியின் இறுதியாண்டில் பொதுவினியோகத் திட்டம் பலப்படுத்திட வேண்டும்.

இனியொரு விதி செய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற மகாகவி பாரதியின் வரிகள் ஆழ்ந்த பொருள் கொண்டது. எவர் ஒருவரும் பட்டினியால் மாண்டு போய் விட கூடாது என்பது மட்டுமல்ல. உறுதியான தோள்கள், ஒளியுடைய கண்கள், நெஞ்சு உறுதி கொண்ட வலிமையான தொரு சமூகத்தை கட்டமைப்பதாகும். மேலும் பசியாற மனிதன் தனது சுயமரியாதை, சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை விட்டுக்கொடுக்காத நிலை வேண்டும் என்பதாகும்.

இந்தியா வளம் மிகுந்த நாடு. ஆனால் ஏழைகள் அதிகமாக வாழும் நாடாக ஏன் இன்னும் நீடிக்கிறது. நாட்டில் உருவாகும் செல்வம், வளர்ச்சியின் பயன் அனைவருக்குமாக பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் கௌரவமான வாழ்க்கை, குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை செய்கிற நல்லாட்சி, அமைவது காலத்தின் தேவையாகிறது.

இலவச அரிசி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இலவச அரிசியா, பணமா என்ற வாத பிரதிவாதங்களுக்கு செல்லவில்லை. ஆனால் குடியரசு தலைவர் அறிவுறுத்தல் படி துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறையும் அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க உத்தரவிட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. அனைவருக்கும் உணவு உரிமை நிலைப்பெறச் செய்திட, மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம் பெற்றிட வலுவான மக்கள் இயக்கத்தை கட்டமைப்பதே தற்போதைய அவசர தேவையாகும். தொடங்கட்டும் புதுச்சேரியில் சமூகநீதிக்கான போராட்டம்.

வெ.பெருமாள்
மாநில செயற்குழு
சிபிஐஎம், தமிழ்நாடு

Leave a Reply