ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிராக செயல்படும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்.

May be an image of text that says 'CPI(M) பத்திரிக்கை செய்தி 23.06.2022 ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிராக செயல்படும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் வெளிப்படைத் தன்மையற்ற ஊழல் மலிந்த தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனரின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதால் அவர் மீது துறை ரீதியான விசாரணையும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஏதேனும் செய்து இருக்கிறாரா என்றும் முறையாக விசாரணை செய்ய வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேச குழு CPIM PUDUCHERRY www.pycpim.in'
முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பாட்டை படிப்படியாக சீர்குலைக்கும் வகையில் திட்டம் போட்டு செயல்படுகிறது தற்போதைய இயக்குனர் நிலையிலான ஜிப்மர் நிர்வாகம். இலவச சிகிச்சை முறையை ஒழித்துக் கட்டுவது, ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்புவது, தனியார்மயத்தை ஏற்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்குவது, சிகப்பு அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் இலவச மருத்துவம் என்ற அறிவிப்பை வெளியிடுவது, இந்தி மொழி கட்டாயம் என்று உத்தரவு போடுவது, மருத்துவமனையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு எதிராக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பெரிய வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றத்தில் வாதிடுவது. என ஏழைகளுக்கு அரசு ஊழியர்களுக்கு எதிரான தடாலடி செயல்கள் அரங்கேறி வருகிறது.
லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் சென்டர் மருத்துவமனையில் ஒரு துறையின் தலைவராக இருந்த ராஜீவ் அகர்வால் அவர்களை ஜிப்மர் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனைக்கு போதுமான தகுதியும் திறமையும் அனுபவமும் இல்லாத அவரை இயக்குனராக நியமனம் செய்தது மத்திய அரசு. அன்று முதல் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனரின் மோசமான நிர்வாக நடவடிக்கை காரணமாக நோயாளிகளும், மருத்துவ மனையின் ஊழியர்களும் எந்த நன்மையும் பெறாமல் இருந்த உரிமைகளையும் இழந்து கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக செயல்படும் இயக்குனர் மக்களிடம் அம்பலபடும்போது எல்லாம் எந்த சம்பந்தமும் இல்லாத துணைநிலை ஆளுநர் மக்கள் பக்கம் நிற்காமல் மேற்கண்ட நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டும் கட்சிகள், அமைப்புகள் பொதுமக்களை ஜிப்மருக்கு எதிரானவர்கள் என்றும் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என்றும் பேசி வருகிறார். பாஜக கட்சிக்கு பாதிப்பு வராமல் இருக்க பிரச்சினைகளை தீர்க்காமல் பூசி முழுகும் வேலையில் ஈடுபட்டுவருகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜிப்மர் இயக்குனரின் செயல்பாடு பற்றியும் அதன் நிர்வாக சீர்கேடுகள் பற்றியும் ஆரம்பத்திலேயே விமர்சனங்களை முன் வைத்த போது தற்போதைய இயக்குனர் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை என்றும், எந்த நிதியையும் திருப்பி அனுப்பப்படவில்லை என்றும், ஜிப்மரில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என தனியார் முதலாளியை போல மறுப்பு அறிக்கை வெளியிட்டார் .
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான நிலையில் ஜிப்மர் உள்ளது என்றும், ஊழியர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன, 80 முதல் 100 வரையிலான மருந்துகளை வெளியில் வாங்க நோயாளிகள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்றும், முக்கியமான இணையவழி சேவை கூட சீர்குலைந்து உள்ளது என்றும், ஜிப்மர் நிர்வாகம் திறமையற்ற செயலற்ற நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது போன்ற குற்றச்சாட்டை முன்வைத்து தற்போது 35 ஆண்டுகளுக்கு மேலாக ஜிப்மரில் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பேராசிரியர் முதல் அனைத்து ஊழியர்களும், ஜிப்மரை பாதுகாக்க வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஆகவே வெளிப்படைத் தன்மையற்ற ஊழல் மலிந்த தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனரின் செயல்முறைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதால் அவர் மீது துறை ரீதியான விசாரணையும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஏதேனும் செய்து இருக்கிறாரா என்றும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் மேலும் உடனடியாக ஜிப்மர் நிர்வாக இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஏழைகளுக்கான மருத்துவமனையாக மீண்டும் ஜிப்மர் செயல்பட மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
இரா.ராஜாங்கம்
புதுச்சேரி பிரதேச செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
பத்திரிகைச் செய்தி -24.06.2022

Leave a Reply