புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையில் அரசோடு இணைந்து அதிகார மீறலின்றி ஆளுநர் செயல்பட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎம் பிரதேச செயலர் இரா.இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி துணைநிலை ஆளுநரை மனதில் கொண்டு, அரசியல் கட்சி சார்ந்தவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது என்ற கோரிக்கையை புதுச்சேரி முதல்வர் டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிகிறது.
அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதுச்சேரியின் அரசியல் நிகழ்வு போக்குகள் அமைந்துள்ளன. துணைநிலை ஆளுநர் என்பவர் தன்னுடைய கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பளித்து அவர்கள் மூலமாகத்தான் செயலாற்ற வேண்டும். அமைச்சரவை கூடி முடிவெடுத்து அமல்படுத்த வேண்டியவற்றில் தன்னிச்சையாக வரம்பு மீறி செயலாற்றி வருகிறார்.
ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தின் தலையாய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுயவிளம்பரங்கள் பெற்றுத் தருகின்ற காரியங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி சொல்வதன் மூலமாக பொதுமக்கள் சந்திப்பு, புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வது போன்ற செயல்களை குறை சொல்வதாக எடுத்துக்கொள்ள கூடாது.
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசோடு கலந்து செய்வதை தவிர்த்து, தனியாக அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுவது அதிகார மீறலாகும். புதுச்சேரியில் தொழில்கள், வர்த்தகம், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதன் தொடர்ச்சி யாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அரசு சார்ந்த பல நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. புதுச்சேரியின் வியாபாரம் நலிவுற்று மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் வேலை வாய்ப்பற்றவர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. மாநில அரசின் கடன் சுமை ரூ.6000 கோடியையும் தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய அரசு உதவி செய்திருந்தால் புதுவையின் பாரம்பரிய பஞ்சாலைகளை செயல்படுத்த முடியும். இயற்கை சீற்றங்களால் புதுவை பாதிக்கப்பட்டபோது மத்திய குழுவின் பரிந்துரை செய்த தொகையை கூட மத்திய அரசு வழங்காமல் புறக்கணித்தது. இது போன்ற மாநில நலன் சார்ந்த நட வடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் ஈடுபட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கும்போது, அதில் எவ்வித அக்கறை யும் காட்டாமல் ஆளுநர் செயல்படு கிறார். மக்கள் பிரச்சினைகளில் அரசோடு இணைந்து ஆலோசனை செய்து மாநில வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பதில் துணைநிலை ஆளுநரின் தற்போதைய நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது.
எனவே புதுச்சேரி மாநிலத்தின் மீது மத்திய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறையை மூடி மறைக்கும் செயல்களில் துணைநிலை ஆளுநர் ஈடுபடாமல், புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கையில் அரசோடு இணைந்து அதிகார மீறலின்றி செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.