எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும் தமிழகம், புதுச்சேரியில் தாமரை மலராது: கே.பாலகிருஷ்ணன்

எத்தனை கோடிகள் கொட்டினாலும், எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் – புதுச்சேரியில் தாமரை மலராது. வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று சிபிஎம் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க நிதியளிப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரி மதகடிப்பட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழக மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், பெருமாள் ஆகியோர் பேசினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் சார்பில் வசூலிக்கப்பட்ட நிதி ரூ. 5.1 லட்சம் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.பின்னர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

புதுச்சேரியில் நான்கரை ஆண்டு காலம் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டை போட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை மத்திய பாஜக அரசு முடக்கியுள்ளது. இதே நிலைதான் கேரள இடது முன்னணி அரசுக்கும் நேர்ந்தது. ஆனால், அந்த அரசு மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை அவ்வப்போது எதிர்த்து வந்தது. அதனால்தான் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.

ஐந்தாண்டு காலம் இலவச அரிசி திட்டம் நிறுத்தம், நியாயவிலைக் கடைகள் மூடு விழா எனப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் ஒரு ஆளுநரால் முடக்கப்பட்டுள்ளன. பாஜகவின் ஆட்சி புதுச்சேரியில் அமைந்தால் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் நம் முன் எழுந்துள்ளது. எனவேதான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ள அனைவரையும் வருகின்ற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.

நாட்டில் 23 அத்தியாவசியப் பண்டங்களைப் பதுக்கக் கூடாது என்று சட்டத்தில் உள்ளது. ஆனால், தற்போது நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பதுக்கலை நியாயப்படுத்தும் வகையில் சேமிப்பு என்று மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் தானியங்கள் பற்றாக்குறை ஏற்படும்போது விலையைத் தானாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் உயர்த்துவார்கள். ஒரு கிலோ 200 ரூபாய் கொடுத்து அரிசி வாங்கக்கூடிய அவலம் ஏற்படும். இச்சட்டத்தை அதிமுக அரசு தடுத்து இருந்தால் இது அமலுக்கு வந்திருக்காது. இதற்கான முழுக் காரணத்தை அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பாஜக பல மாநிலங்களில் மக்கள் ஆதரவைப் பெற முடியாமல் தோல்வி அடைந்தன. அதனால்தான் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். எத்தனை கோடிகள் கொட்டினாலும் எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் – புதுச்சேரியில் தாமரை ஒருபோதும் மலராது.

வருகிற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வி அடையும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்களுடைய பேராதரவைப் பெற்று தமிழகம் புதுச்சேரியில் ஆட்சியமைப்பது உறுதி”இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply