காங்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டி: புதுவை சிபிஎம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் 4 இடங்களில் தனித்துப் போட்டியிட புதுச்சேரியில் சிபிஎம் திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் -திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனால் சென்னை சென்று இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இச்சூழலில் திமுக, காங்கிரஸுக்குத் தலா 14 இடங்களும், சிபிஐ, விசிகவுக்குத் தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் நிர்வாகிகள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் புதுச்சேரி பிரதேசச் செயலர் ராஜாங்கம், இன்று கூறும்போது, ”புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சிபிஎம் இடம் பெற்றுள்ளது. சிபிஎம் தரப்பில் நாங்கள் போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகளைத் தெரிவித்திருந்தோம். தற்போது தொகுதிப் பங்கீட்டில் மார்க்சிஸ்ட் விடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்துக் கட்சியினருடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

திமுக- காங்கிரஸ் தரப்பில் எங்களை அழைத்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், நாங்கள் திருபுவனை, பாகூர், லாஸ்பேட்டை, டி.ஆர்.பட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம். இதர தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply