மது, போதை ஒழிப்பு, ரேஷன் கடை திறப்பு குறித்து முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

பெறுதல்                                                                                                                                                                    15.07.2024
மாண்புமிகு, முதல்வர் அவர்கள் புதுச்சேரி அரசு, புதுச்சேரி

பொருள்: 2024 -25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் பேரவை   கூட்டத் தொடரில் இடம்பெற வேண்டிய மக்கள் பிரச்சனைகளை   தங்களின் கவனத்திற்கு கொண்டு வருதல்- தீர்வு காண     கோருதல் தொடர்பாக.

மதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

புதுச்சேரியின் 15வது சட்டசபையின்  8வது கூட்டத்தில் 2024.-25 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளீர்கள். மேற்படி நிதிநிலை அறிக்கையில் முன்னுக்கு வந்துள்ள மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சனைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம். கீழ்க்கண்ட அம்சங்களை பரிசீலித்து நிதிநிலை அறிக்கையில் இடம் பெற செய்யவும் ,சிலவற்றை கூட்டத் தொடரில் வலியுறுத்தி செயல்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.

பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துக

2014இல் ஒன்றிய ஆட்சியில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பின்பு 2015 செப்டம்பர் முதல் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன மாநில அரசின் இலவச அரிசி திட்டமும் நிறுத்தப்பட்டு பணப் பரிமாற்றத் திட்டமாக மாற்றப்பட்டன.

இது மக்களின் உணவு பாதுகாப்பை மிகக் கடுமையாக பாதித்துள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்” ஒன்றிய அரசுடன் பேசி ரேஷன் கடைகள் திறக்கப்படும், மானிய விலையில் அரிசி ,பருப்பு ,சமையல் எண்ணெய், சர்க்கரை சிறு தானியங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தீர்கள்”.

2023-24 பட்ஜெட் கூட்டத் தொடரில் 27.03.2023 ல் ரேஷன் கடைகள் திறக்கப்படும், வெள்ளை அரிசி, அட்டைக்கு தலா, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ கோதுமை மற்றும் சிறுதானியங்கள் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்த போதிலும் ரேஷன் கடைகள் மூடியே இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. போதிய உணவு ஊட்டச்சத்து இல்லாமையால் ஏழை மக்கள், பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் வளர்ச்சி குன்றியும் எடை குறைந்தும் காணப்படுகிறார்கள்.

ரேஷன் கடைகளை திறந்து மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கிட கோரி மக்கள் பங்கேற்போடு தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. 18வது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக 2024 பிப்ரவரி 19-22 வரையில் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் கட்சி சார்பில் நடந்தது. போராட்டத்தின் போது 20.02.2024 இல் தங்களை கட்சி சார்பில் நேரில் சந்தித்து ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தினோம் தாங்கள் ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, ரவை , சமையல் எண்ணெய் ஆகிய ஆறு பொருட்கள் மானிய விலையில் வழங்குவதாக உறுதி அளித்தீர்கள்.   2024ல் நடந்த இடைக்கால சட்டமன்ற கூட்டத்தில் ரேஷன் கடை திறப்பு பற்றி அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு ஈடுடேறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களை அறிவீர்கள். ஆகவே மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்திட ரேஷன் கடைகளை திறந்து தாங்கள் உறுதி அளித்தவாறு உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்கிட வேண்டுகிறோம்.

ரேஷன் கடை ஊழியர்களின் நலன்

பல ஆண்டுகளாக ரேஷன் கடைகள் பயன்பாடு சேவை நிறுத்தப்பட்டதால் ரேஷன் கடை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். சிலர் தற்கொலை  செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமானது. எனவே ரேஷன் ஊழியர்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமையாகும். கடந்த (2023-24) பட்ஜெட்டில் ரூபாய் 7.9 கோடி நிதி ஒதுக்கிஐந்து மாத நிலுவை ஊதியம் மட்டும் வழங்கப்பட்டன. நடப்பு பட்ஜெட்டில் (2024-25) நிலுவை சம்பள பாக்கியில் மூன்றில் ஒரு   பகுதிக்காவது நிதி ஒதுக்கிட வேண்டுகிறோம் .

மதுபான வணிகத்தை கட்டுப்படுத்துக

புதுச்சேரி மாநிலத்தில் 16.05.1979ல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் துணைநிலை ஆளுநரால் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டது. 1980ல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. சிறிய மாநிலத்தில்  மதுபான கடைகள் அதிகமானதால்,  சமூக குற்றங்கள் பெருகுகின்றன இந்நிலையில் 12.06.1989ல் மாநில அரசு தனிநபர்களுக்கு மது கடை உரிமம் வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பிறகு வந்த ஆட்சியாளர்கள் முந்தைய அரசின் உத்தரவை ரத்து செய்து 22.02.2010ல் G.O.M.S.no.-1 எண்யிட்ட உத்தரவு மூலம் புதியதாக 90 மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்க முடிவெடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2010ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணையில் மாநில அரசு தனிநபர்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்காது என உறுதியளித்தது. மாநில அரசின் உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. கடந்த 32 ஆண்டுகளில் தனி நபர்களுக்கு புதிய மதுபான விற்பனை உரிமம் அளிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் மாநிலத்தில் வகை தொகையின்றி ரெஸ்ட்ரோபார்,  ரெஸ்ட்ரோ, பப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் 6  மதுபான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் மேலும் 6 தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை விட மதுபான தொழிற்சாலை அதிகமாகி விட்டது மாநிலத்தின் பாரம்பரிய அடையாளத்தை இழந்து மதுச்சேரியாக மாநிலம் மாறி உள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணவனை இழந்த பெண்கள் விகிதம் புதுச்சேரியில் 19 சதம் ஆகும். சாலை விபத்துகள்,  பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது, குடும்பம் என்ற அமைப்பு முறையே பலவீனப்படுத்தப்படுகிறது ,இது சமூக சீரழிவை ஏற்படுத்தி வருகிறது.

ஆகவே மாநில அரசு மதுபான வணிகத்தை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும், கல்வி நிறுவனங்கள்,  கோயில்கள், குடியிருப்புகள் அருகில் உள்ள மதுக்கடை மற்றும் ரெஸ்டோர்பார்களை உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக் கொள்கிறோம்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழித்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு, நாள் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா போதை ஸ்டாம்ப் என போதை பொருட்கள் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து விநியோகம் செய்யப்படுகிறது. பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. முத்தியால்பேட்டையில் சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்து கொலை செய்தது நாட்டு மக்களை அதிர்ச்சியிலும், துன்பத்திலும் ஆழ்த்தியதை அறிவீர்கள்.

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்தாலும் போதைப்பொருள் வணிகம் குறையவில்லை, நாளுக்கு நாள் அதிகரிப்பதும், புதியவர்கள் தொழிலில் ஈடுபடுவதும் தொடர்கிறது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், காவல் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் பின்புலத்தில் போதை பொருட்கள் வணிகம் நடைபெறுவதை உணர முடிகிறது. ஆகவே மாநில அரசு அரசியல் உறுதியுடன் பாரபட்சமின்றி போதை பொருள் விற்பனையை முற்றாக ஒழிக்க வேண்டும். போதை ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கவும், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய சிகிச்சை மூலம் மீட்டெடுக்கவும் வேண்டுகிறோம்.

மின்விநியோகத்தை தனியாருக்கு விற்பதை கைவிடுக.

புதுச்சேரி அரசு மின்துறை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டுகிறோம். மேலும் 2024 இல் அறிவிக்கப்பட்ட புதிய மின் கட்டண உயர்வை நிறுத்தி வைத்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் 70 கோடி ரூபாய் லாபத்தில் மின்துறை உள்ளபோது மின் கட்டண உயர்வு பொருத்தமற்றது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகளை மீறி மின்துறை கோரிக்கையை விட கூடுதல் கட்டணம் நிர்ணயித்துள்ளது. நுகர்வோர்களின் எந்த ஒரு ஆட்சேபனைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை.

ஒழுங்குமுறை ஆணையத்தில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த, மாநில மொழி அறிந்த பிரதிநிதி ஒருவரை ஆணையத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஆகவே விதி முறையை மீறிய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண நிர்ணய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மேலும் மேற்படி ஆணையத்தில் புதுச்சேரி பிரதிநிதி ஒருவரை இணைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

நல சங்கத்தை வாரியமாக மாற்று தல் மற்றும் குறைந்தபட்ச கூலிச் சட்டம் அமல்படுத்தல் தொடர்பாக.

(அ)மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும்,  வேலையின்மையும் , விலைவாசி உயர்வும், வாழ்க்கை நெருக்கடிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி கூலி நிர்ணயம் செய்யப்படுவதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

22.08.2022இல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. கட்டுமானம், போக்குவரத்து, அச்சகம் ஆகிய தொழிலாளர்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச கூலி அறிவிக்கப்பட்டுள்ளது .சுமார் 20க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு கோப்புகள் தயாரிக்கப்படும் அவைகள் கிடப்பில் உள்ளதாக அறிய வருகிறது. ஆகவே மாநில அரசு நிலுவையில் உள்ள 20  தொழில்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணய உத்தரவை விரைந்து வெளியிட்டு அவைகளை செயல்படுத்த வேண்டுகிறோம்.

(ஆ) முறைசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நல வாரியமாக மாற்றிடவும்  அவற்றுக்கான விதி முறைகளும் 2020இல் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரையில் நல சங்கத்தை வாரியமாக மாற்றிட நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. ஆகவே நலச்சங்கத்தை வாரியமாக மாற்றிவிடவும்,  நடப்பு பட்ஜெட்டில்  நலச் சங்கத்தின் கடனை தீர்க்கவும், எதிர்கால செயல்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கவும் ஆவண செய்ய வேண்டுகிறோம்.

 கோயில் சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் கோயில் நிர்வாக அலுவலர்களை நியமித்தல் தொடர்பாக

புதுச்சேரி மாநிலத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவது அன்றாட செய்தியாக மாறி வருகிறது இதில் அரசு மக்களின் நம்பிக்கை மற்றும்,  கோயில் சொத்துக்களை பாதுகாத்திட உறுதியான தலையிட்டை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது.

தாங்கள் தாக்கல் செய்த 2021-2022, 2022–2023 மற்றும் 2023-2024 ஆகிய பட்ஜெட்டுகள் அனைத்திலும் கோயில்களின் கடவுள் சிலைகள், தங்கம்,  வெள்ளி , ஆபரணங்கள் மற்றும் இதர அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மின்னணு முறையில் மாற்றி மக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என குறிப்பிடீர்கள். ஆனால் அசையா சொத்துக்களான நிலம் வீடு மற்றும் வணிக வளாகம் உள்ளிட்டவை நில அளவை செய்து பாதுகாக்கப்படும் என்றும் படும் என்று மட்டும் குறிப்பிடுவது பொருத்தமற்றது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் மின்னணு முறையில் ஆவணப்படுத்திட வேண்டும் .வீடு மற்றும் கடைகள் உள்ள வற்றில் இருப்பவர்களுக்கு வாடகையை ஒழுங்குப்படுத்தி வரும் வாடகை பணத்தை கொண்டு கோயில் பூஜை மற்றும் பராமரிப்பு செய்வது சரியானதாகவே கருதுகிறோம் ஆகவே கோயில் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி கோயில் அறங்காவலர் குழுவை , கோவில் நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டுகிறோம் கோயில் அறங்காவலர் குழு பல கோயில்களில் பல ஆண்டுகளாக தொடர்கிறார்கள். இதனால் பல்வேறு முறைகேடுகளுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது .இந்த நிலைமையை அகற்றிட வேண்டுகிறோம்.

(ஆ). பெத்துச்செட்டிபேட்டை மைதானத்தை அரசு ஏற்றெடுக்க வேண்டும்.
லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள பெத்துச்செட்டிபேட்டையில் கொல்லிமேடு மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டிலும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி  ஆலய திருவிழா கால பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. இவ்விடத்தை தனிநபர் பெயரில் பதிந்து வேறு நபருக்கு கைமாற்றும் முயற்சி நடக்கிறது. நிலத்தின் மூலத்தை ஆய்வு செய்தால் பல உண்மைகள் புலப்படும், இதற்கு தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டால் பல சொத்துக்களின் விவரம் தெரிய வரும். ஆகவே பல ஆண்டுகளாக கோவில் தேவஸ்தானத்தின் பராமரிப்பிலும் ,மக்கள் பயன்பாட்டிலும் உள்ள கொல்லிமேடு மைதானத்தை அரசு பொறுப்பில் ஏற்க வேண்டும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கொள்ளை போவதை தடுத்திட வேண்டும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குக

ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் வேலைவாய்ப்புகள் வெகுவாக சுருங்கி விட்டதை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஏற்கனவே வேலையின்மையால் தவித்துவரும்  புதுச்சேரி இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு நிர்வாகத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டுகிறோம். மேலும் சுகாதார துறையில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் கோவிட் காலத்தில் ஒப்பந்த முறையில் பணிக்கு அமர்த்திய செவிலியர்களை சிறப்பு விதிவிலக்கு பெற்று  பணியமர்த்திட வேண்டுகிறோம்.

மாநிலத்தின் பாரம்பரியமும், விவசாய தொழிலுடனும் தொடர்புடைய சுதேசி, பாரதி, ரோடியர், ஸ்பின்கோ, ஜெயப்ரகாஷ் நாராயணா , கூட்டுறவு சர்க்கரை ஆலை , ஆகியவற்றை புரணமைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க விரிவான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் நிதி உதவி பெற்று மேற்படி தொழில்களை நவீனப்படுத்தி செயல்படுத்த வேண்டுகிறோம். மாநிலத்தின் நீடித்த, நிலைத்த பொருளாதாரத்தையும்,  மற்றும் மாநிலத்தின் சொந்த முதலீட்டு வருவாயை பெருக்கிட உதவும் என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது .

மேலும் ஐடி பார்க் மாநிலத்தில் துவங்க ,விமான போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்ட வளர்ச்சிக்கு உகந்த கொள்கைகளை உருவாக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள,
இரா.இராஜாங்கம்

 

Leave a Reply