புதுச்சேரி, ஜூன் 27, 2025: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்அவுட்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை ஜூலை 2-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகப் பத்திரிகைகள் வாயிலாக அறிகிறோம். இந்த உத்தரவை நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (ஜூன் 27, 2025) புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அளித்துள்ளது.
மாவட்டம் ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த கடிதத்தின் சுருக்கம்:
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட, விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து அரசியல் மற்றும் சமூகப் பணியாற்றி வரும் முன்னணி அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகும். எங்கள் கட்சியும், எமது வழிகாட்டுதலில் இயங்கும் தொழிற்சங்க அமைப்புகளும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள கொடிக்கம்பங்களை நிறுவுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். எமது அமைப்பின் கொடிக்கம்பங்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அடங்கிய தகவல் பலகைகள் காவல்துறை அனுமதியுடன், போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, எங்கள் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்யப்பட்டு இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொருந்தும். மேலும், இந்த வழக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளைக் கலந்து பேசிய பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே நிறுவப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றுவது சட்டத்திற்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் அனைத்து உத்தரவுகள் மற்றும் வழிகாட்டு விதிமுறைகளையும் மீறி பல இடங்களில் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகள் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தும், புதுச்சேரியில் அது மீறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புகார் அளித்திருக்கிறது. ஆனால், மது வியாபாரிகளை ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். தடையாணை இருக்கும்போது, சுய விளம்பரத்திற்காக பேனர்கள் வைப்பதாலும், அதனால் உருவாகும் உயிரிழப்புகள், விபத்துகளைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்கும் புதுச்சேரி அரசு, அனுமதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கு உத்தரவிடுவது, அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளில் தலையிடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
ஆகவே, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தங்கள் உத்தரவை நிறுத்தி வைக்குமாறும், மறுபரிசீலனை செய்யுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்,
செயலாளர், புதுச்சேரி