நிலம் அபகரிப்பு குற்றவாளிகளை கைது செய், பொதுமக்களின் வீடு, நிலம் அபகரிப்பை  தடு- சிபிஎம்

பெறுதல்                                                                                                                                                                            11.07.2023

மாவட்ட ஆட்சியர் அவர்கள்
புதுச்சேரி அரசு
புதுச்சேரி.

பொருள் :காமாட்சி அம்மன் கோயில் நிலம் அபகரிப்பு குற்றவாளிகள் மீது

பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்தல், பொதுமக்களின் வீடு, நிலம்

அபகரிப்பை  தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற கோருதல் தொடர்பாக.

ஐயா,

வணக்கம். புதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வீடு, பிற சொத்துக்கள் போலி பத்திரம் செய்து  பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளின் உதவியோடு நிலம் மோசடி எப்போதும் இல்லாதவகையில் தொடர்ந்து நடைபெற்று வருவது பொது மக்களிடையே பெரும் கவலையையும், அஞ்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய தொடர் நில மோசடிக்கு பத்திரப்பதிவு அதிகாரிகளே நேரடியாக துணை போகிறார்கள் என்றால் தங்கள்துறையின் நிர்வாக சீர்கெட்டை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. மேலும் கவலை அளிக்கிறது. அரசியல் மற்றும் ஆளும் அரசின் அதிகார பின்புலம் இல்லாமல் இந்தகைய மோசடி நடைபெற முடியாது என்பதை காமாட்சியம்மன் கோயில் நிலம் அபகரிப்பு வழக்கு சாட்சியமாகி உள்ளது.

06.03.1935ல் உயில் வழியாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு 64,000 சதுர அடி கொண்ட நிலம் ஒரு குடும்பத்தினரால் வழங்கப்பட்டு மேற்படி நிலம் காமாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருந்து வந்தது. மேற்படி நிலத்தை 1995-இல் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அதிகாரிகள் தலைமறைவாக இருந்து முன்ஜாமின் பெறுவதற்கு மாநில அரசும், காவல்துறையும் துணை நிற்பதாகவே தெரிகிறது.

மேலும் நில மோசடி வழக்கிலிருந்து குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் பத்திர பதிவுதுறையின் இணையதளத்தில் இருந்த கடந்த இரண்டு ஆண்டுகால ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த சதியில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது, அரசு ஆவணங்களை அழித்தல், சதி மோசடி, அரசுக்கு எதிராக துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் தனி வழக்காக பதிவு செய்திட வேண்டுகிறோம்.

இந்த விவகாரத்தில் சுமார் பத்தாயிரம் சதுர அடி அளவு நிலத்தை தனது குடும்பத்தார் பெயரில் வாங்கி ஒரே தேதியில் பத்திரப்பதிவும், பட்டா மாறுதலும் நடைபெற்றுள்ளது மூலம் பணபலம் அதிகாரத்தை வைத்து வளைத்து உள்ளனர் தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் விவிலியன் ரிச்சர்ட். சில மாதங்களுக்கு முன்பு மேற்படி இடம் கோயில் இடம் என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார் திரு. ஜான்குமார் அவர்கள் இதன் மூலம் நில மோசடியில் அவருக்கு தொடர்பு உள்ளதை உறுதிப்படுத்துகிறது ஆகவே பாஜக எம்எல்ஏக்கள் திரு ஜான்குமார், திரு. ரிச்சர்டு ஆகியோரையும் வழக்கில் சேர்த்து சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகும்.

ஆகவே

  1. காமாட்சி அம்மன் கோயில் நில மோசடியில் தொடர்புடைய எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
  2. பத்திரப்பதிவு மற்றும் நில மோசடியில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்து விசாரித்திட வேண்டும்.
  3. 2011 முதல் 2023 வரை பத்திர பதிவுத்துறையில் நடந்துள்ள நில மோசடிகள் குறித்தும், விடுதலைக்குப் பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போது உள்ள நிலங்கள் பற்றிய முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
  4. கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை நில மோசடி, வீடு அபகரிப்பு உள்ளிட்ட சொத்துக்கள் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. அவற்றின் மீது தங்கள்துறையும், புதுச்சேரி அரசும் மேற்கொண்ட விசாரணை முடிவுகள், மற்றும் நடவடிக்கைகள் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
  5. காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை மீட்டு அரசு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
  6. கோயில்களில் உள்ள சிலைகள் தங்கம் வெள்ளி ஆபரணங்கள் நிலம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும் மின்னணு முறையில் ஆவணப்படுத்தவும் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் வேண்டும்.
  7. வீடு, நிலம், சொத்துக்கள், அபகரிக்கப்படுவதை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், குற்றவாளிகள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை தங்கள்துறை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் சொத்துக்கள் மீண்டும் கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட அம்சங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கிற வேண்டுகிறோம்.

இப்படிக்கு

இரா.இராஜாங்கம்

மாநில செயலாளர்

Leave a Reply