பத்திரிக்கை செய்தி
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஜனநாயகத்திற்கும், மாநில மக்களுக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 2006ல் உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட காங்கிரஸ் அரசு, மாநில தேர்தல் ஆணையர் பணியிடத்தை நிரப்பிடவில்லை. 2011ல் ஆட்சிபொறுப்பேற்ற என்.ஆர். காங்கிரஸ் அரசும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மூன்று முறை அவகாசம் அளித்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாறாக தேர்தலை தடுத்து நிறுத்தும் சதி முயற்சியால் என்.ஆர். காங்கிரஸ் முற்பட்டது. அதன் வெளிப்பாடாக என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தேர்தல் நடக்கும்போது நடக்கும் என்று மாநில முதல்வர் பேசியதும், 26.11.2012ல் உள்ளாட்சித் அமைப்புகளுக்கு 270 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்திட இயலும் என என்.ஆர். காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் போட்டது உட்பட மாநில அரசின் விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளன.
இந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைபோடும் மனு மீதான வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி தன்னையும் இணைத்துக் கொண்டது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞ்சர் திரு ஸ்டாலின் அபிமன்யு ஆஜரானார் விசாரணையில் மனுதாரரின் தடைகோரும் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மனுதாரரக்கு ஆதரவாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் தொகுதி மறுசீரமைப்பு காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் அளித்துள்ளதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு 1951ல் பொதுதேர்தலுக்கான தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. அதன் பிறகு 2005ல்தான் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் 2005 தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையில் 2006 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என வாதிடப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கு தடையில்லை என்றும், 2013 ஜனவரி 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திடவும், கட்டளை மனு மீது 10 தினங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிடுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவு ஜனநாயகத்திற்கும், மாநில மக்களுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும்
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடந்து மாநிலத தேர்தல் ஆணையம் 3 கட்ட தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, அமைதியாக நடைபெற மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எப்படியேனும் தேர்தலை தள்ளிப்போட முயலும் முயற்சியை என்.ஆர். காங்கிரஸ் அரசு கைவிட வேண்டும். மேலும் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட மாநில மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகிறது.
வெ . பெருமாள்
பிரதேச செயலர்.
04.12.2012