அந்த வீடியோ உலகை அதிர்ச்சிக்குள்ளாகியது. பார்த்தவர்கள் அய்யோ என பதைத்தனர். கூட்டமாய் வெறிபிடித்தவர்கள் மத்தியில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அது. மேலும் இரண்டு பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொன்ற செய்தி அனைவரையும் பதற்றமடைய வைத்தது, சூரசந்த்பூரில் உள்ள கல்லூரியில் பி.ஏ. புவியியல் படித்து வருபவர் ஹங்லால்முவான் வைபேய் என்ற 21 மாணவனை வன்முறை கும்பல் நீதிமன்றம் செல்லும் வழியில் அடித்தே கொலை செய்துள்ளது. ஒரு இளம்ப் பெண்ணை கோடாளியால் மண்டையை பிளந்து போட்டு அதை வீடியோ எடுத்து ரசிக்கும் கூட்டத்தை என்ன செய்வது? சுமார் 350 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், 7000 த்திற்கும் அதிகமான வீடுகள், 150 கிராமங்கள் எரிகின்றன, 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட, ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக அலைபாய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவைகள் எல்லாம் 76 நாட்களுக்கு அதாவது இணையதள முடக்கம் நீக்கப்பட்ட பின்னரே வெளி உலகத்திற்கு வருகிறது. இன்னும் வராத கொடுமைகள் பலவும் இருக்கக்கூடும். மணிப்பூர் பற்றி எரிகிறது. தேசத்தின் மன்னன் பன்னாட்டு ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறான். அவலம் நிறைந்த தேசமாய் இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. காலகாலமாக படையெடுப்புகளிலும், போர்களிலும், கலவரங்களிலும் ஆண்களின் வெற்றியை நிலைநாட்ட பெண்களின் உடல்களே தேவைப்படும் அவலம், செயற்கை நுண்ணறியை நேக்கி பயணப்படும் இந்த நாளிலும் அப்படியே நிலைத்திருப்பதுதான் கேவலத்தின் உட்சம்.
கேடுகெட்ட இரட்டை என்ஜின்:
மத்தியிலும் மாநிலத்திலும் எங்களை தேர்ந்தெடுத்தால் இரட்டை என்ஜின் பலத்துடன் உங்கள் வாழ்க்கை முன்னேறும் என பிரச்சாரம் செய்தனர். மணிப்பூரில் இரட்டை என்ஜின் ஆட்சிதான். ஒன்றிய மோடி – மணிப்பூர் பாஜக அரசுகள் அந்த மாநிலத்தை ஆனால் ஒரு என்ஜின் முன் பக்கமும், இன்னொரு என்ஜின் பின் பக்கமும் இழுக்கும் கொடூரத்தை செய்கின்றன. அங்கே உள்ள பல்வேறு இனக்குழுக்களின் அடையாளங்களை அங்கீகரிப்பதற்கு மாறாக, பாஜக அரசு அந்த மக்களை தனித்தனியாக பிரிவினை செய்து, அணிதிரட்டுவதற்கு முயற்சி செய்கிறது.
நாட்டின் பல பகுதிகளில் இந்து – முஸ்லிம் என பிரிவினை செய்து, கலவரங்களை தூண்டி வாக்காளர்களை தனித்தனியாக அணிதிரட்ட முயற்சித்ததோ அதேபோல மணிப்பூரில் இந்து – கிறித்தவர் என பாகுபாடு செய்து அணி திரட்ட முயல்கிறது. அப்படி வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே மத மற்றும் இனரீதியாக வெறுப்புணர்வையும், பகைமையையும் உருவாக்கி அணிதிரட்டியதன் விளைவாகவே இன்று மணிப்பூரில் ஒரு பயங்கரச் சூழல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் இன்றைக்கு, இந்தியாவின் கூட்டாட்சி மீதும் இந்தியாவின் பன்மைத்தன்மை மீதும் பாஜக அரசு நடத்துகிற கொடிய தாக்குதலின் அடையாளமாக மாறியிருக்கிறது.
அடிப்படை என்ன ?
மணிப்பூரின் மக்கள்தொகையில் 53 சதவீதம் மணிப்பூர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தி சமூகத்தை சேர்ந்த மக்கள். இம்மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையே இனக் கலவரத்திற்கான உடனடி தூண்டுதலாக இருந்தாலும், தங்களை இந்துக்கள் என நம்பும் மெய்தி சமூகத்தின் வாக்குகளை வாங்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என அவர்களை வெறியேற்றியதும் மலைவாழ் கிறிஸ்தவ மக்கள் மீதான பாஜகவிப் வெறிபேச்சும் முக்கிய காரணமானது.
இன்னும் ஒரு முக்கிய காரணமும் உள்ளது. மணிப்பூர் மலைப்பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை பழங்குடியினர் ஆக்கிரமிப்பு செய்வதாக, பாஜக முதல்வர் கடுமையாக குற்றம் சாட்டி அம்மக்களை வெளியேற்ற முயல்கிறார். மலைபகுதியில் வாழ்பவர்கள் போதை பொருளை உற்பத்தி செய்கின்றனர் என பிரச்சாரம் செய்து திசை திருப்புகிறார்.
பழங்குடியின கிராமங்களில் மக்கள்தொகை அதிகரிக்கும் போது, அவர்கள் தங்கள் வரலாற்று மற்றும் மூதாதையர் உரிமையாக கருதும் சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்கு பரவ முயல்வது இயல்பு. மலையும் மலை வளங்களும் மலைவாழ் மக்களில் உரிமை என்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், பிஜேபி அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரத்தில், பள்ளத்தாக்குகளில் வசிக்கும் மெய்தி, மலைப்பகுதிகளில் குடியேறவோ அல்லது நிலம் வாங்கவோ அனுமதி கொடுத்தது. மாநிலத்தின் மலைப் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளின் மீதான எல்லை பிஜேபி அரசால் விரிவு செய்யப்படுகிறது.
புதிய கிராமங்களை எவ்வாறு அங்கீகரிப்பது என்பது குறித்து அரசாங்கத்திடம் உண்மையான கொள்கை எதுவும் இல்லை. மணிப்பூரில் வெளிப்படையான வனக் கொள்கையும் இல்லை. எனவே பாஜக ஆட்சி வைப்பதுதான் சட்டம என்றானது.
வெளியேற்றப்படும் கிராமங்கள்
ஏப்ரல் 11, 2023 அன்று, லாங்கோல் ரிசர்வ் வனப்பகுதியில் உள்ள 26 வீடுகளில் இரண்டு வீடுகள் இடிக்கப்பட்டன. பிப்ரவரி 21, 2023 அன்று, சுராசந்த்பூரில் உள்ள கே. சாங்ஜாங் கிராமத்தில் வசிப்பவர்கள் 2020 ஆம் ஆண்டில் கூகுள் மேப்ஸ் படம் அப்பகுதியில் குடியேறவில்லை என்பதைக் காட்டியதால் வெளியேற்றப்பட்டனர். சூராசந்த்பூரில் உள்ள 38 கிராமங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து வனத்துறை நவம்பர் 2022 இல் அறிவிப்பை வெளியிட்டது. நானி மாவட்டங்கள், அவை சுராசந்த்பூர்-கௌப்பும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வந்ததாகக் கூறுகின்றன. கிராமங்களில் குடியேற்றத்திற்கான அனுமதியை தகுதியற்ற அதிகாரி ஒருவர் வழங்கியதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் குக்கிகளின் கூற்றுப்படி, 38 கிராமங்கள், தலா 1,000 பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்டவை, கடந்த 50-60 ஆண்டுகளாக உள்ளன என்பதுதான். மணிப்பூரில் உள்ள குக்கிகளின் உச்ச அமைப்பான குக்கி இன்பி மணிப்பூர் அல்லது KIM, முதல்வர் பிரேன் சிங்கின் அறிக்கை தவறானது என்றும், மணிப்பூரில் உள்ள “சர்வாதிகார ஆட்சிக்கு” எதிரான பழங்குடி சமூகங்களின் அதிருப்தியில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டியது.
பிஜேபி நடத்தும் மாநில அரசாங்கத்தின் “தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு” எனக் கருதும் குக்கி சமூகத்தில் உள்ள கோபம் தற்போதைய எதிர்ப்பு ஊர்வலத்தின் போதும் பரவி, வன்முறைக்கு வழிவகுத்தது.
காறி உமிழும் ஆளும் பாஜக எம்.எல்.ஏ:
சூரசந்த்பூர் மாவட்டம், சைகோட்டை தொகுதி பாஜக எம்.எல்.ஏ பவோலியன்லால் ஹொக்கிப் ஆவார். இவர் குக்கி பழங்குடியின இனத்தை சேர்ந்தவர், “மணிப்பூரில் இனக்குழுவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடங்கிய பிறகு அதனைப் போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையாக சித்தரிக்க முதல்வர் முயன்றார். இதன் மூலம் மணிப்பூர் வன்முறைக்கு முதல்வர் மறைமுகமாக ஆதரவாக இருப்பது தெளிவாக தெரியும். மேலும் மணிப்பூரில் வசிக்கும் குக்கி இன மக்களை போதைப்பொருள் கும்பல் என சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. தற்போதைய சூழலில், பழங்குடியினரின் நிலத்தை உரிமை கொண்டாடும் போராக இதனை பார்க்க வேண்டும். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், ‘மெய்டெய் லீபுன்’ மற்றும் ‘ஆரம்பாய் தெங்கோல்’ போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளார்.” என பேட்டி அளித்துள்ளார் (2)
முதலைகள் கண்ணீர் வடித்தன:
மணிப்பூர் வன்முறை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, 78 நாட்களுக்கு பிறகே வாய்திறந்தார். 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வந்த பிறகு “மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் கோபம் நிரம்பி இதயம் வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். இந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது’’ என தெரிவித்தார். அதாவது அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய வெளி நாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு வந்து பிறகு கண்ணீர் வடித்தார். அம்மாநில முதல்வர் “பெண்களை கொடுமைப் படுத்தியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார். இது கொடுமை என்று கண்ணீர் வடித்தார். பெரிய கொடுமை இத்தகைய முதலை கண்ணீரைக்கூட அக்கட்சியில் உள்ள பலர் வடிக்கவில்லை என்பதுதான். அதுவும் தமிழகத்தில் பெண்களில் உரிமைகளை பேசும் பாஜக தலைவர்கள் வாயை இறுக்க மூடிக்கொண்டனர்.
இந்தியா:
தேசத்தின் மிக முக்கியமான 26 எதிர்கட்சிகள் இணைந்து பாராளுமன்றத்திம் இரு அவைகளிலும் மணிப்பூர் கலவரங்களை விவாதிக்க மோடி வரவேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். அங்கே வாய் திறக்க மறுக்கும் மோடி வெளியில் எதிர் கட்சிகளின் கூட்டணியை ‘கிழக்கிந்திய கம்பெனி’, ‘இந்தியன் முஜாகிதீன்’, ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ போன்றவற்றிலும் கூடத்தான் ‘இந்தியா’ என்ற பெயர் இருக்கிறது. எனவே, ‘இந்தியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகி விடாது என்கிறார். இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்பதைதான் இப்படி குறிப்பிடுகிறார்.
இந்தியாவும் இந்திய மக்களும் பிரதமரிடம் இதை எதிர்ப் பார்ர்க்கவில்லை. மோடி வாயால் சுட்ட வடை மலை போல குவிந்துள்ளது. வார்த்தை ஜாலங்களால் திசை திருப்பாமல் பற்றி எரியும் மணிப்பூரை அமைதியாக்க சொல்கின்றனர். எங்கள் சகோதரிகள் துகில் உரிக்கப்பட்டு வீதிகளில் காட்சி பொருளாக ஊர்வலம் நடத்தப்படுவதை தடுக்க சொல்கின்றனர். மனித தன்மையற்ற முறையில் நடக்கும் கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த சொல்கின்றனர். இரத்த வாடை வீசும், நெருப்பால் கருகிய வாடை அடிக்கும், எப்போது என்ன நடக்குமோ என தெரியாமல் திக்கற்று அலையும் எங்கள் மணிப்பூரின் உறவுகளை பாதுகாத்திட வேண்டும் என மன்றாடுகின்றனர்.
ஆனால் மதக்கலவரத்தை தூண்டி, மனித உடல்களில் மீது நின்று, கார்ப்ரேட்டுகளுக்கு சேவை செய்யும் ஒரு மனிதனிடம் இந்த கோரிக்கைகள் செவிப்பறைக்குள்ளே நுழையுமா என தெரியவில்லை?
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
(2023 ஆகஸ்ட் மாத இளைஞர் முழுக்கம் இதழில் வெளியான கட்டுரை)
ஆதாரங்கள்:
1. Frontline இதழில் வெளியான What is really behind the violence in Manipur? என்ற Dhiren A. Sadokpam is Editor of The Frontier Manipur எழுதிய கட்டுரை பகுதி.
2. தீக்கதிர் நாளிதழ்