தரமற்ற சாப்பிடவே முடியாத மதிய உணவை வழங்கும் தனியார் நிறுவனத்தை ரத்து செய்து.
தரமான மதிய உணவை அரசு வழங்க வேண்டும் என
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவை 1930ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு சுதந்திரம் பெற்றது முதல் புதுச்சேரி அரசு தனது நேரடி பொறுப்பில் வீட்டில் சமைக்கப்படும் உணவு போன்று பள்ளியிலும் வழங்கி வந்தது.
ஒன்றிய ஆட்சிக்கு பாஜக கட்சி வந்த பிறகு கிரண் பேடி வழியாக 2018ல் ‘இஸ்கான்’ என்ற மத அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்கி வரும் ‘அட்சய பாத்திரா அறக்கட்டளை’ என்ற தனியாரிடம் மாணவர்களின் உணவு உரிமையை ஒப்படைக்க ஒப்பந்தம் செய்தபோதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்த்தது. அரசு செய்யவேண்டிய வேலையைத் தனியார் செய்கிறது. இதற்கு, அரசு துணை நிற்கிறது. கல்விக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், ஒரு தனியார் அமைப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவது சரியானதா என கேள்வி எழுப்பப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் -பிஜேபி கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது மிகவேகமாக நடைமுறை படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது தயாரித்து வழங்கக்கூடிய சாப்பாடு தரம் இல்லாத, சாப்பிடவே முடியாத சுவையற்ற ,கெட்டு போன உணவாகவே உள்ளதுடன் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சத்தான வெங்காயம், பூண்டு, முட்டை மற்றும் காய்கறிகள் சேர்க்கப்படவில்லை.
இது எப்படி சத்தான உணவாக இருக்க முடியும். பூண்டுக்குத் தனியாக மருத்துவ குணங்கள், பயன்கள் இருக்கின்றன. அதேபோலத்தான் வெங்காயத்துக்கும் இருக்கிறது. உணவிலிருந்து இதை நீக்கிவிட்டால், அது முழுமையான சத்தான உணவாக இருக்காது. வட இந்திய மக்கள் சாப்பிடும் உணவு முறையில் நமது குழந்தைகளுக்கு பிடிக்காத ருசியில் , தயிர், சாம்பார் மற்றும் தக்காளி சாதம் என்ற முறையில் உணவு வழங்கப்படுகிறது. இஸ்கான் மதவாத நிறுவனத்தின் பிற்போக்குவாதிகள், உரிமையாளர்கள் தங்களது உணவில் பூண்டு, வெங்காயம் மற்றும் முட்டை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக நமது மாணவர்களும் இவைகளை தவிர்க்க வேண்டும் என கூறுவது சட்டவிரோதமான எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல்.
இதனால் நமது பள்ளி மாணவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது இத்தகைய போக்கு நமது மாணவர்களின் உணவு உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டதோடு கொஞ்ச நஞ்சம் கிடைத்து வந்த ஊட்டச்சத்துள்ள உணவும் தட்டி பறிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் தனது சொந்த செலவில் உணவு வழங்குவதை போன்ற ஒரு பிம்பத்தை துணைநிலை ஆளுநரும், பாஜகவினரும் கட்டமைத்து வருகின்றனர். உண்மையில் இந்த நிறுவனம் புதுச்சேரி அரசிடம் இருந்து பெருமளவு நிதியினை பெற்றுள்ளது.
குறிப்பாக புதிய சமையல் கட்டிடம் அமைக்க அரசு இன்சூரன்ஸ் ,சில தனியார் நிறுவனங்களிடமிருந்து பல கோடி பெற்று உள்ளது. இதைத் தவிர புதுச்சேரி அரசும் திட்டத்திற்கு பெரும் நிதியை வழங்கி உள்ளது .
முக்கியமான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் கடமையை கூட அரசே செய்யமுடியாதபோது ஆட்சி செய்யும் தகுதியை ஆளும் பாஜக என், ஆர் காங்கிரஸ் அரசு இழந்து விட்டது. இப்படி அனைத்திலும் தனியாரை அனுமதிப்பதை ஒட்டுமொத்தமாகக் கல்வியிலிருந்து அரசு விலகிக்கொண்டு, கல்வித் துறையை சந்தையாக்கும் ஏற்பாடாகத்தான் பார்க்கிறோம் இதை அனுமதிக்க முடியாது. புதுச்சேரியில் பல்வேறு மத, இன மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதத்தை பரப்பும் தனியார் அமைப்பிடம் கொடுத்து தரமற்ற ,சுவையற்ற உணவு வழங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஆகவே உடனடியாக தரமான சுவையான மதிய உணவை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் சாதிய ,மதவாத இஸ்கான் நிறுவனத்தோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மதிய உணவு வழங்கும் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பணி வழங்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு.
ஆர்.ராஜாங்கம், செயலாளர், புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்