புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில்பால் மற்றும் பால் பொருள்களின் விலைகளை உயர்த்தியது. 6 மாத இடைவெளியில் மீண்டும்பால்விலையை ரூ10 உயர்த்தியுள்ளது. அனைத்து பால் பொருள்களின் விலைகளும் உயர்த்தப்படஉள்ளன. மாநில அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. பால்உற்பத்தியாளர்களை காரணம் காட்டி பால் விற்பனை விலை உயர்த்தபட்டதாக பாண்லே நிறுவனம்நியாயப்படுத்துகிறது. ஆனால் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை முழுமையாகவழங்கியதில்லை தரத்தின் அடிப்படையில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பாக பழைய கொள்முதல் விலை ரு.24ல் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்சமாக ரு.20, ரு21 என்ற அளவில்தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புதிய கொள்முதல் விலை 12.5 மொத்த சத்து உள்ள பாலுக்கு ரூ.30 அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 முதல் ரூ.26 வரை கிடைக்கக் கூடும். பால் கொள்முதல் விலை ரூ.6, பால் விற்பனை விலை ரூ.40 உயர்வு என்பது மோசடி நடவடிக்கையாகும்.
2014 பட்ஜெட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிவந்த தீவன மானியம் 50% ரத்து செய்து பால்கொள்முதல் விலையை ரூ.6 உயர்த்த உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய பால்விற்பனை உயர்வு காரணங்களில் ஒன்றான தீவனச் செலவும் சேர்க்கப்பட்டுள்ளது விசித்திரமாக உள்ளது.
மாநிலத்தில் மொத்த பால் உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. உள்ளூர் விற்பனை போக 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டர் பால் தான் பான்லேவிற்கு வருகிறது. மாநிலத்தின் பால் தேவையில் 80% தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆகவே, மாநில அரசின் பால் விலை உயர்வு தனியார் பால் உற்பத்தியாளர்களை கொழுக்க வைப்பதற்கே உதவிடும்.
தேசிய பால் உற்பத்தி ஆணையம் ஒரு இலட்சம் பால் உற்பத்திக்கு 250 பேர் வரையில் ஊழியர்களை நியமனம் செய்ய வழிகாட்டுதல் அளித்துள்ளது. தற்போது பான்லே நிறுவனத்தில் சுமார் 1000 பேர் என்ற தன்மையில் கொல்லைப்புற நியமனங்கள் செய்யப்படுகிறது. இதனால் பான்லே மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் தற்போதைய என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் தவறானகொள்கையால் பாண்லேயின் லாபத்தில் வாங்கிய சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது.பான்லேவின் சொத்து மதிப்பை விட கடன் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆட்சியாளர்களின் தவறானகொள்கையால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யவும், தனியார் பால் உற்பத்தியாளர்கள் கொழுக்கவும்வகைசெய்யும் பால்விலை உயர்வை ரத்துசெய்திட வேண்டும்.
ஆகவே, மாநில அரசு பால் கொள்முதலுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் விலை ரு.6ஐ மானியமாக வழங்கவும், நுகர்வோர்களைப் பாதிக்கிற விற்பனை விலை உயர்வை ரத்து செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 27.1.2014ல் 4 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்துப் பகுதி மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்
{ வெ. பெருமாள் }
செயலாளர்
26/11/2014