புதுச்சேரி, டிச. 17. 2015
சிறுமி பாலியல் புகாருக்கு ஆளான புதுச்சேரி நகரமைப்புக்குழும முன்னாள் தலைவர் கேஎஸ்பி. ரமேஷை கைது செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மக்கள் நலக்கூட்டியக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.மழை நிவாரணத் தொகையாக ரூ.10,000 உயர்த்தி வழங்க வேண்டும், சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்துக்கான பேரிடர் காலநிதி ரூ.500 கோடியை உடனே விடுவிக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தர வேண்டும். பாலியல் புகாருக்குள்ளான ஆளுங்கட்சி பிரமுகர் கே.எஸ்.பி ரமேஷை கைது செய்ய வேண்டும்.
சிறுமிகள் பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி அண்ணா சிலையில் இருந்து போராட்டக்குழுவினர் நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையம் அருகே பேரணியாகச் சென்ற போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அங்கு ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள், தா.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலர் தேவ.பொழிலன், அமைப்புச் செயலர் அமுதவன், மதிமுக பொறுப்பாளர் சந்திரசேகரன், ஆர்எஸ்பி லெனின் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.தடுப்புகளை மீறி ஆளுநர் மாளிகையை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 81 பெண்கள் உள்பட 489 பேர் கைது செய்யப்பட்டனர்.