நாட்டிலேயே வேலையில்லா பிரச்சினையில் முதல் மாநிலம் புதுச்சேரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
புதுச்சேரி பிராந்தியத்தில் லாஸ் பேட்டை, திருபுவனை, பாகூர், காரைக்கால் பிராந்தியத்தில் நிரவி திரு பட்டினம் ஆகிய தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் ஆனந்த், கலிவரதன், சிவகாமி, முகமது தமீம் அன்சாரி ஆகியோரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் 48 ஆண்டுகாலமாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆள் மாற்றம் மட்டுமே நடைபெற்றதே தவிர, மக்கள் பிரச்சினைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோர் சுட்டெரிக்கும் வெயிலால் இறந் துள்ளனர். மக்களின் உயிரோடு விளையாடுபவர் தானே ஜெயலலிதா. எனவே தான் மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறார்.
கட்சிகளை கார்ப்பரேட் நிறுவன மாக மாறியவர்கள் திமுக, அதிமுகவினர் தான். திமுகவினர் ஊழல் காரணமாக அவர்களின் குடும்பமே நீதிமன்ற படிகளில் ஏறி இறங்குகிறார்கள். எனவே தான் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். தமிழகத்தில் ஏற்படும் மாற்றத்தை போல் புதுச்சேரியிலும் மாற்றம் வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசியலை பார்த்து முகம் சுழிக்கும் நிலை எற்படுத்தியவர்கள் திமுக, அதிமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர்தான். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் புதுச்சேரி தான் வேலையின்மையில் முதல் மாநிலமாக உள்ளது. 12 லட்சம் மக்கள் தொகையில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியை ஆட்சி புரிந்தவர்கள் எந்தவித வேலை வாய்ப்பையும் எற்படுத்தவில்லை.
கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறும் ரங்கசாமி அரசு, கடந்த பத்தாண்டுகளில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பகுதிகளாக குறைந்துள்ளது. மிகப்பெரிய மாநிலங்களை விட புதுச்சேரியில் 7 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அரசுக்கு கொடுக்க வேண்டிய 50 விழுக்காடு இடம்கூட பெறமுடியாத அரசாக தான் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சி இருந்துள்ளது. இங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கட்டணம் மட்டும் ரூ.90 லட்சம் என்றால் ஏழை எளிய மாணவர்கள் எப்படி படிக்க முடியும்.
எனவேதான் ஊழலை ஒழிக்கக் கூடிய லோக்ஆயுக்தா, மாணவர் களுக்கு உயர்கல்வி இலவசம், சிறு, குறு தொழில்களை பாதுகாக்க உரிய திட்டம் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது, என்றார்.