மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் மறுக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரவைக் கூட்டம் முத்தியால்பேட்டை சோலை நகர் சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகுழு செயலாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டி.கே ரங்கராஜன் பங்கேற்று முத்தியால்பேட்டை தொகுதி வேட்பாளர் ஆர். சரவணன் அறிமுகப்படுத்தி பேசியதாவது:
“மத்திய பாஜக அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரங்களை பறித்து வருகிறது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டது. அதையொட்டி தற்போது ஆளுநருக்கு தான் அதிகாரம் என்ற நிலையில், இதே பாணியை டெல்லியில் அரங்கேற்றுவதற்காக ஒரு மசோதாவை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசு இருக்கும், ஆனால் அனைத்து அதிகாரங்களும் துணைநிலை ஆளுநருக்கு தான் என்று தாக்கல் செய்த மசோதவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அரசுகளின் அதிகாரங்களும் மத்திய பாஜக அரசு தன் கை வசப்படுத்தும் நிலையை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியை ஒரு முன்னோட்டமாக எடுத்து, இத்தகைய நிலையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கு தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா, தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், பெருமாள், பிரதேச செயலாளர் ராஜாங்கம், மூத்த பிரதேச தலைவர் முருகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.