இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு
பத்திரிக்கை செய்தி:
வணக்கம். காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மதவாத, நடவடிக்கைகளுக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
புதுச்சேரி, காரைக்காலில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி, RSSன் கூடாரமாக மாறி வருவது கவலையளிக்கிறது.
2008ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் உயர்தர தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.ஆனால், தற்போது NIT காரைக்கால், சங் பரிவாரங்களின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருப்பது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது.
தற்போது இயக்குனராக இருக்கும் திரு கங்கரேக்கர் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் சங்பரிவாரங்களின் தலைநகரான நாக்பூர் வாசிகளுக்கு வேண்டியவர். அவர் பணிக்கு சேர்ந்ததுமே காரைக்காலில் நிறுவனத்தின் முகம் மாறத் தொடங்கியது. காரைக்காலின் சங் பரிவாரங்களின் கேந்திரமாக இந்நிறுவனம் மாறியது. அவர்களின் முழு கட்டுப்பாட்டிற்கு இந்நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது.
அனைத்துத் துறைகளிலும் ஆசிரியர், பணியாளர்களுக்கான விளம்பரம் வெளிவந்தது
விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 28.03 .2025 .தகுதி உள்ள 500 விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் 29.03. 2025-ல் இணையதளத்தில் இயற்பியல்/ இசிஇ என்ற இரண்டு துறைக்கு மட்டுமே குறிப்பாக அஜய் குமார் மிஸ்ரா.டாக்டர் அனிருத் கன்ஹே ஆகிய இருவருக்கு மட்டுமே பதவி உயர்வு அளித்து தேர்வு செய்ய இணையதளத்தில் அறிவிப்பு வந்தது. இவர்கள் இந்த பதவி உயர்வுக்கு தகுதியானவர்களா என்பது தனிக்கதை. ஆனால் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதற்கு அடிப்படைக் காரணம் ‘சிந்தனை இந்தியா’ (திங் இந்தியா)என்ற பெயரில் சங்பரிவாரங்களில் மாணவரணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு இவர்களே மையப் புள்ளிகளாக இயங்கினர். பதவி உயர்வு பெற்றனர்.
ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளில் இட ஒதுக்கீட்டு விதிமுறைகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. ‘சுழற்சி முறை விளம்பரம்’ என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவரின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. மேலும், இந்து சூடன் ரமேஷ் என்ற ஆய்வு மாணவர், ‘சிந்தனை இந்தியா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவது கண்டிக்கத்தக்கது.
இதோடு மட்டுமல்லாமல், “ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலய கைங்கர்ய சபா டிரஸ்ட்” என்ற பெயரில் கோவில் கட்டுவதற்காக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடம் கட்டாய வசூல் நடைபெற்று வருகிறது. மத்திய கல்வித்துறை இணையமைச்சர் வருகையின்போது இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்நிறுவனம், மதவாத நடவடிக்கைகளிலும், மூடநம்பிக்கைகளைப் போதிப்பதிலும், கோவில் கட்டுவதிலும் ஈடுபடுவது அதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது. இது மாணவர்களிடையே நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, காரைக்கால் NIT நிர்வாகம் இதுபோன்ற பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு, தொழில்நுட்பக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
புதுச்சேரி மாணவர்களுக்கு தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்கி, தேசத்தின் வளர்ச்சிக்கு இந்நிறுவனம் பங்காற்ற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறோம்.
நன்றி,
எஸ். ராமச்சந்திரன்
செயலாளர், புதுச்சேரி.
31.03.2025