கட்சிகளின் கொள்கை அறிவிப்புகளை முறைப்படுத்துவதோ, மக்களுக்கு அளித்திடும் நலத்திட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல
தேர்தல் நடத்தை விதிகளில் சில திருத்தங்களைச் செய்திட தேர்தல் ஆணையம் முன்மொழிவினை அனுப்பியிருக்கிறது. அரசியல் கட்சிகள், தாங்கள் தேர்தல் அறிக்கையில் நிதி தொடர்பாக அளித்துள்ள உறுதி மொழிகளை நிறைவேற்ற அந்தக் கட்சிகள் எப்படித் திட்டம் தீட்டியிருக்கின்றன என்றும், அந்தத் திட்டங்கள் மாநில அரசாங்கங்களில் அல்லது ஒன்றிய அரசாங்கத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்திடும் என்றும் கோரியிருக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு முற்றிலும் தேவையற்ற நடவடிக்கையாகும்.
அரசமைப்புச்சட்டம், நாட்டில் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றுதான் தேர்தல் ஆணையத்திற்குக் கட்டளையிட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் கொள்கை அறிவிப்புகளை முறைப்படுத்துவதோ மற்றும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு அளித்திடும் நலத்திட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. இவை அனைத்தும் ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் தனி உரிமைகளாகும்.
இதே தேர்தல் ஆணையம், ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் அளித்திட்ட ஓர் உறுதி வாக்குமூலத்தில், ஆணையம் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளை முறைப்படுத்த முடியாது என்றும், அவ்வாறு செய்வது என்பது அதிகார வரம்பு மீறிய ஒன்றாக இருந்திடும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இப்போது அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? மக்களின் பிரச்சனைகள் பற்றிக் கவலைப்படுவதற்கும், அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்க மேற்கொள்ளும் கொள்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற உரிமைகளை ஒழுங்காற்று செய்வதாக கூறுவதையோ அல்லது அவற்றைச் சுருக்குவதற்காக எவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.