நாம் அறியாத நம்ம புதுச்சேரி

Pondy Montageபுதுச்சேரியின் 500 ஆண்டுக் கால அடையாளமே காலனி ஆதிக்கம்தான். 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு வரத் தொடங்கினாலும், 1521-ல் முதலில் கால்பதித்து வணிக வளாகங்களை அமைத்தது போர்த்துக்கீசியர்கள்தாம்.

1699-ல் ரிஸ்விக் ஒப்பந்தத்தின்படி, டச்சுக்காரர்களிடம் 16,000 பகோடா நாணயங்களைக் கொடுத்து துறைமுக நகரமாக விளங்கிய புதுச் சேரியைப் பெற்ற பிரெஞ்சுக்காரர்கள், மூன்று பெரிய பஞ்சாலைகளை அமைத்து துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தனர். 1954-ம் ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது வரை ஏறத்தாழ 280 ஆண்டுகள் துணி ஏற்றுமதி வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தது புதுச்சேரி. ஆனால் தற்போதைய பாஜக ஒன்றிய ஆட்சியால் புதுவையின் அடையாளமான பஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு முடக்கப்பட்டுவிட்டன.

இந்தியாவிற்கே முன்னோடியாக தொழிலாளர் உரிமைகள் பெற்றவர்கள்

ஆசிய பகுதியில் புதுச்சேரியில்தான் முதன் மூதலில் தொழிலாளர்கள் பல உரிமைகளை போராடி பெற்று சாதனைப் படைத்தனர். குறிப்பாக 8 மணிநேர வேலை, கூடுதல் வேலைக்கு கூடுதல் சம்பளம், வார விடுமுறை என 1936ல் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இந்த உரிமைகள் வென்று எடுக்கப்பட்டது

300 ஆண்டு பழைமையான நேரு வீதி…

300 ஆண்டுகளுக்கு முன்பு சிறு வியாபாரிகளுக்கான திறந்தவெளிச் சந்தையாக விளங்கிய இடம்தான், தற்போது நேருவீதி மற்றும் காந்திவீதி சந்திப்பில் சுமார் 600 கடைகளுடன் பெரிய மார்க்கெட்டாக இயங்கி வருகிறது. புதுச்சேரியின் முன்னாள் மேயர் மற்றும் முதல்வரான ‘எதுவார் குபேர்’ பெயரில் இயங்கிவரும் இந்த மார்க்கெட் புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தின்கீழ் வருகிறது. புதுச்சேரி மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வது இந்த மார்க்கெட்தான்.

புதுச்சேரி சந்தை..

பெரிய மார்க்கெட் சந்தை என்பது புதுச்சேரி மட்டுமல்லாமல், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இந்த மார்க்கெட்தான் வணிகத்தளமாக இருந்து வருகிறது அதற்குக் காரணம், இங்கு கிடைக்கும் தரமான பொருள்கள். துணிக்கடைகள், மளிகைக்கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், தேங்காய் கடைகள், வெற்றிலைக் கடைகள், கத்தி, அரிவாள்மனை உள்ளிட்ட பொருள்கள் விற்கும் இரும்புக் கடைகள், மிட்டாய்க் கடைகள், ஆட்டுக்கறி கடைகள், கோழிக்கறி கடைகள், மிட்டாய்க் கடைகள், ஆட்டுக்கறி கடைகள், கோழிக்கறி கடைகள், பூக்கடைகள், கீரைக் கடைகள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வரிசைகளில் கடைகள் அமைந்திருக்கின்றன. 

ஊட்டியிலிருந்து கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள், பெல்லாரியில் இருந்து வெங்காயம், சிம்லாவிலிருந்து ஆப்பிள், நாக்பூரிலிருந்து கமலா ஆரஞ்சு என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காய்கறி லோடுகள் அன்றாடம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதால், காய்கறி மொத்த வியாபாரத்தில் இந்த மார்க்கெட்தான் முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரியில் அனைத்துத் தரப்பினருக்கும் இங்கிருந்துதான் காய்கறிகள், பழ வகைகள் சப்ளை செய்யப்படுகின்றன” என்றார்.

எலெக்ட்ரானிக் சாதனங்களும் கிடைக்கும்…

புதுச்சேரி வணிகத்தின் இதயப் பகுதியாக விளங்கும் நேரு வீதியின் இருபுறமும் துணிக்கடைகளே ஆதிக்கம் செலுத்தினாலும், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கும், வீடு மற்றும் விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் மின் மோட்டார் வகைகளுக்கும், பாத்திரக் கடைகளுக்கும் பஞ்சமில்லை.

பெண்கள் தேடிவரும் மார்க்கெட்…

“இந்தியா பிரிட்டிஷ் கட்டுப் பாட்டில் இருந்தபோது புதுச்சேரி பிரெஞ்ச் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 1800 ஆண்டுவாக்கில் மேற்கத்திய உடைகள் இந்தியாவுக்குள் நுழைந்த இடமே புதுச்சேரிதான். அந்த வகையில் மேற்கத்திய உடைகள் இந்தியா முழுவதும் ஊடுருவக் காரணமாக இருந்தது புதுச்சேரி. பிரெஞ்ச் கலாசாரத்தில் கலந்திருக்கும் புதுச்சேரி மக்கள், இங்கிருக்கும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மக்கள், பிரான்ஸிலிருந்து வந்து செல்பவர்கள் என அனைவருமே நவீன வித்தியாசமான உடை களைத்தான் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆண்டு தோறும் புதுப்புது ஆடைகள் புதிய கடைகள் வந்த வண்ணம் உள்ளன.

தங்க நகைகளுக்கு கொசக்கடை வீதி…

கொசக்கடை வீதியில் பெரிய நகைக்கடைகளில் பிளாட்டினம் தொடங்கி வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கலாம். மேலும், நெல்லுமண்டி சந்தில் இருக்கும் நகைக்கடைகள் முழுவதும் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பங் களின் தேர்வாக இருக்கும்.

ஏற்றுமதியாகும் ஊதுவத்தி…

புதுச்சேரியில் தயாரிக்கப்படும் தோல் மற்றும் கைவினைப் பொருள்கள் பிரான்ஸ், அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. அதேபோல, ஆரோவில் பகுதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஊதுவத்தி, பெரிய பெரிய வாசனை மெழுகுவர்த்திகள், கற்களால் தயாரிக்கப்படும் ஆபரணங்கள், பிரம்பு, மரத்தால் தயாரிக்கப்படும் கலைப்பொருள்கள், சுடுமண்ணால் செய்யப்படும் கலைப் பொருள்கள், கை களால் தயாரிக்கப் பட்ட பேப்பர்கள் உள்ளிட்டவற்றை நேரு வீதி மற்றும் செஞ்சி சாலைகளில் வாங்கலாம். 

கோட்டக்குப்பமும் சின்ன முதலியார் சாவடியும்…

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் கலை நயத்துடன் வடிவமைக்கப் பட்ட பழமையான கதவுகள், மரங்களால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணாடிகள், நாற்காலிகள், பெட்டிகள் போன்ற அரிய பொருள்களைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோட்டக்குப்பம், சின்ன முதலியார் சாவடியில் இருக்கும் கடைகளில் மிகக் குறைவான விலைகளில் அள்ளிச் செல்லலாம்.

1500 கடைகள் கொண்ட சண்டே மார்க்கெட்… 

புதுச்சேரியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று சண்டே மார்க்கெட். சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள மகாத்மா காந்தி வீதியில் இயங்கும் இந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே இயங்கும். 1974-ம் ஆண்டு எண்ணிக்கையில் 40 கடைகளுடன் தொடங்கிய இச்சந்தை தற்போது 1,500கடைகளாக விரிவடைந்து பிரபலமாக இயங்கி வருகிறது. புதுச்சேரி மட்டு மல்லாமல் விழுப்புரம், சேலம், சென்னை, திருச்சி, திண்டிவனம், பெங்களூரு என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் சண்டே மார்க் கெட்டில் கடைகள் வைக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை சண்டே மார்க்கெட் களைகட்டும்.  அனைத்து நாட்டின் தபால் தலைகள், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் இங்குக் கொட்டிக் கிடக்கும் என்பதால் அவற்றைச் சேகரிப்பவர் களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். 200 முதல் 500 வருடங்கள் பழைமையான பொருள் களைக்கூட இங்கே சர்வ சாதாரணமாகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் வெளிநாட்டவரும், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்த வீதியில் நடந்து கொண்டிருப்பார்கள். மிகவும் பழைமையான புத்தகங்கள், அச்சில் இல்லாத புத்தகங்கள் மற்றும் மருத்துவம், பொறியியல் சார்ந்த புத்தகங்களைப் பாதி விலைக்கு வாங்கலாம். புதுச்சேரியில் உள்ள சந்தைகள் அனைத்தும் உயிர்ப்புடன் உள்ளன!

வாரச் சந்தையில் ஆடு, மாடு, கோழிகள்..!

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் ஆடு, மாடு, கோழிகள் மற்றும் வாத்துகள் தொடங்கி மீன், கருவாடு, காய்கறிகள் போன்றவையும், எலிப்பொறி, சொரடு, பெரிய, சிறிய வகைக் கரண்டிகள், மாடுகளுக்கான கயிறுகள், கழுத்துப் பட்டைகள், மணிகள், கொம்புச் சலங்கைகள் எனச் சகலவிதமான பொருள்களும் கொட்டிக்கிடக்கின்றன. சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகளில் இருக்கும் மக்களும் ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.அன்றைய ஒருநாள் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்கின்றனர் வியாபாரிகள். அதேபோல, புதுச்சேரி- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் முள்ளோடை என்ற பகுதியில் வியாழக்கிழமை தோறும் சந்தை நடைபெறுகிறது.

Leave a Reply