புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஎம்இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

புதுச்சேரியில் ஆளும் திரு. ரங்கசாமி அரசு திடீரென ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த அரிசிக்குப் பதிலாக மாதம் ரூபாய் 300 வழங்குப்படும் என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வந்த உடனே மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தியது.

திரு ரெங்கசாமி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ரேசன் கடைகளில் மஞ்சள் கார்டுக்கு 15 கிலோ சிவப்பு கார்டுக்கு 25 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படும் எனவும், மளிகைப்பொருட்கள் ரேசனில் வழங்கப்படும் எனவும் தேர்தல்கால வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது. நடைமுறையில் தேற்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவ்வப்போது 10கிலோ அரிசியை மட்டும் வழங்கி வந்தது. இறுதியில் அந்த அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் இந்தத் திட்டம் என்பது ரேசன்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிட்டு, பொதுவிநியோக முறைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும், அரிசி விலையை தாறுமாறாக அதிகரிக்கும் நடவடிக்கையாகும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி அரசுக்கு பலமுறை சுட்டிக் காட்டியது.

இந்நிலையில் அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கும் அரிசிக்கு பதிலாக பணம் என்கிற திட்டத்தை கைவிடக் கோரி மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி மற்றும் அத்தியாவசிய பண்டங்களை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 15 நாட்களாக புதுவை மற்றும் காரைக்கல் பகுதி மக்களை சந்தித்து மீண்டும் அரிசி கோருகின்ற 50,000 மனுக்களை மக்களுக்கு விநியோகித்து 23.4.2015 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெறுகின்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர். கே. பாலகிருஷ்ணன் M.L.A தலைமையில் நடத்துவது என முடிவு செய்து களத்தில் இறங்கியது.

இதற்கிடையில் மேற்படி கோரிக்கையினை வலியுறுத்தும் வகையில் 20.04.2015 அன்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையின் அவசியத்தை வலியுறுத்திக் கூறியது. முதல்வர் பரிசீலிப்பதாகக் கூறினார். இப்போது புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பணம் வழங்குவதை கைவிட்டு மீண்டும் அரிசி மற்றும் கோதுமை வழங்க வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று ரேசன் கடைகளில் மாதம் தோறும் 10 கிலோ அரிசியும் 5 கிலோ கோதுமையும் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. முதல்வர் அவர்களுக்கும் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் பொது மக்களுக்கும் கட்சி நன்றி தெறிவித்துக் கொள்கிறது.

ரேசன் மூலம் பொதுவிநியோக முறை என்பது ஏழை எளிய மக்களுக்கு வாழ்க்கை பாதுகாப்பதாகும் எனவே தேர்தல் காலத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் மஞ்சள் அட்டைக்கு 15 கிலோ சிவப்பு அட்டைக்கு 25 கிலோ மற்றும் கோதுமை, வழங்கவேண்டும். எனவும், பல அறிவிப்புகள் போல் அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் தேர்தல் கால வாக்குறுதிகளான லேப் டாப், வாஷிங் மெஷின், கிரைண்டர், தொலைக்காட்சிபெட்டி, மின்விசிறி ஆகிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது. முதல்வர் நடப்பு கூட்டத்திலேயே அறிவிப்பு செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply