மக்கள் சந்திப்பு சைக்கிள் பிரச்சார இயக்கம்

30.03.2007
பத்திரிக்கைசெய்தி

கட்சியின் பிரதேசக்குழு கூட்டம் 27.03.2007 ல் தோழர் எல்.கலிவரதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங்,மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.தா.முருகன், பிரதேச செயலாளர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜாங்கம், எஸ்.ராமச்சந்திரன், வே.கு.நிலவழகன், ஜி.இராமசாமி, கே.முருகன், கே.சாந்தி உட்பட பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

புதுச்சேரி அரசு துறைமுகம் துணைநகரம் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிலங்களை கையகப்படுத்துவதால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் குடியிருப்பு பகுதிகள் அப்புறப்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. துறைமுகம் விரிவாக்கத்தால் கடல் அரிப்பு குடிநீர் ஆதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அறிவியல் இயக்கம் சார்ந்தவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். மீன்பிடித்தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என மீனவர்களும் தேங்காய்திட்டு பகுதி குடியிருப்பு அப்புறப்படுத்தும் என அப்பகுதி மக்களும் அஞ்சுகிறார்கள். ஆனால் புதுச்சேரி அரசு இதுகுறித்து உண்மை நிலையினை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

துறைமுகம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் “மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் அனுமதி பெறுவது பொது விசாரணை நடத்தி கருத்தறிவது நிலவிற்பனையில் ஈடுபடக்கூடாது என்ற 3 நிபந்தனைகளை உத்தரவாக வழங்கியுள்ளது.. ஆனால் புதுச்சேரி அரசு நீதிமன்ற உத்தரவுகளை மீறி கட்டுமான பணியை அனுமதிப்பது முறையற்றதாகும்.

மாநிலத்தின் வளர்ச்சித்திட்டங்களை எதிர்ப்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கமல்ல. புதிய தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் முயற்சிகள் தேவை. அதே நேரத்தில் மக்கள் விருப்பமில்லாமல் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. . ஆகவே புதுச்சேரி அரசு துறைமுகம் துணைநகரம் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பிற வளர்ச்சித்திட்டங்கள் குறித்து உண்மை நிலையினை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த தொழில் நுட்ப சாத்தியக்கூறுகள் தொடர்பாக வல்லுனர்கள் குழு அமைத்திட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி கருத்தறிவது பொதுவிசாரனை நடத்தி மக்கள் கருத்தறிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கட்சி பிரதேசக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள பருப்பு, உளுந்து  உள்ளிட்ட 6 பொருட்களுடன் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் அடக்கவிலையில் 25மூ விலையை குறைத்து நியாய விலை கடைகள் மூலம் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு மட்டும் இலவச அரிசி 20 கிலோவாக உயர்த்துவது, வேலையில்லா கால நிவாரணம் வழங்கும் திட்டத்தில் உள்ள வருமான வரம்பு உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை தளர்த்தவும் 8, 9,10 ம் வகுப்புவரை படித்து பதிவு செய்துள்ளவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் . தனியார் மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் 50மூ அரசு ஒதுக்கீடு மற்றும் கல்வி கட்டணம் குறித்து சட்டம் இயற்றவும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயிற்று மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும். தமிழில் எழுதக்கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் , விளைநிலங்களை குடிமனைகளாக மாறுவதை கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்த பிரதேசக்குழு தீர்மானித்துள்ளபடி. ஏப்ரல் 10 முதல் 13 வரை தேதிகளில் புதுச்சேரி முழுவதும் மக்கள் சந்திப்பு சைக்கிள் பிரச்சார இயக்கம் நடைபெறஉள்ளது . மேற்படி இயக்கத்திற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

இவண்

(ஏ.பெருமாள்)
செயலாளர்

Leave a Reply