28.03.2007
பத்திரிக்கைச்செய்தி
புதுச்சேரி மாநில முதல்வர் (28.03.2007ல்) தாக்கல் செய்துள்ள 2007-2008 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் புதிய வளர்ச்சி திட்டங்கள் ஏதுமில்லை. ஓரிரு அம்சங்களைத் தவிர ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் மீண்டும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கம், அங்கன்வாடி குழந்தைகளுக்கு 2 முட்டை வழங்குதல், சென்டாக் மூலம் பொறியியல் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் வழங்குதல், நெசவாளர்களுக்கு ஓய்வூதிய கூடுதல் தொகை ரூ 250, ஏழு ஹோமியோபதி மருத்துவ மையங்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு மாதம் இரண்டு கிலோ கோதுமை….. தவிர புதிய வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.
வீடுகட்ட மானியம் ஒரு லட்சம், இலவச வண்ணத்தொலைக்காட்சிபெட்டி, துவரம்பருப்பு உள்ளிட்ட 6 பொருட்கள் நியாயவிலைக்கடைகளில் வழங்குதல் உள்ளிட்டவை கடந்த பட்ஜெட்டிலும் சட்டமன்றத்திலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள். இந்த பட்ஜெட்டில் தான் நடைமுறைக்கு வருகிறது. இவை தவிர ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய தொழிலாளர் மாத ஓய்வூதியம் ரூ 750, நிலமற்ற தலித்துகளுக்கு நிலங்களை கொள்முதல் செய்து வினியோகித்தல், விவசாய தொழிலாளர் நலச்சங்கம் உள்ளிட்ட பலத்திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.
விவசாயத் தொழிலை பாதுகாக்க தேசிய வேளாண் ஆணையம் குறிப்பிட்டுள்ள விவசாய விளைபொருளுக்கு நியாயவிலை தீர்மானிப்பது- அரசே கொள்முதல் செய்வது 4 சதவீத வட்டிக்கு புதிய பயிர்க்கடன் அளிப்பது, விதைஉரம் ஆகியவற்றிற்கு மானியம் வழங்குதல் …. ஊள்ளிட்ட சிபாரிசுகள் பட்ஜெட்டில் தெளிவாக பிரதிபலிக்கவில்லை. வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
விவசாயம் நட்ட தொழிலாக மாறியுள்ள காரணத்தால் விளைநிலங்கள் விவசாயம் சாராத பயன்பாட்டிற்கு திருப்பி விடப்படுகிறது. எப்போதுமில்லாத அளவிற்கு நிலவிற்பனை துரித கதியால் மிகக்கடுமையாக விலை உயர்ந்துள்ளது இது விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதுடன் சாதாரன குடிமகன் வீட்டடி மனை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விளை நிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை இல்லை.
தனியார் மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு- கல்விக்கட்டணம் குறித்து அரசின் கொள்கை அறிவிப்பு ஏதும் இல்லை.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் வழங்காமல் அதிகாரம் வழங்குவது குறித்து குழு அமைப்பது என்ற அறிவிப்பு நியாயமற்றதாகும். ஊள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
துவரம் பருப்பு உள்ளிட்ட 6 பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விலைவாசி உயர்வில் இருந்து மக்களை முற்றாக பாதுகாக்க உதவி செய்யாது. தற்போது வழங்கப்பட உள்ள 6 பொருட்களுடன் அனைத்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும். வழங்கப்படும் பொருளின் விலையில் அரசு 25 சதவீத விலையை குறைத்து மானிய விலையில் வழங்கவும் நடவடிக்கைன எடுக்க வேண்டும்.
துணைநிலை ஆளுநரின் உரை 11 வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் வறுமை வேலையின்மைக்கு தீர்வு காணவும் ஐந்தாண்டு ஆட்சி முடிவில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. ஆனால் முதல்வரின் பட்ஜெட்டில் பொருளாதாரவளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் பிரதிபலிக்கவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.
இவண்
(ஏ.பெருமாள்)
செயலாளர்