இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் புதுச்சேரிக்கு தனியாக விடுதலை தினமா என்ற கேள்வி பலருடைய மனதுக்குள் எழலாம். இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த பகுதிகள் மட்டுமே விடுதலை அடைந்தன. பிரெஞ்சியர் வசம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம், சந்திரநாகூர் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை பெறும்போதே புதுச்சேரிக்கும் பிரெஞ்சியரிடம் இருந்து விடுதலை பெற ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையா தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டத்தை நடத்தினர்.
இதனால், ஆங்கிலேயரிடம் இருந்த இந்திய பகுதிகளுக்கு விடுதலை கிடைத்த பிறகு, பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் விடுதலை போராட்டங்கள் தீவிர ஆகியன. ஆனால், தங்களுடைய காலனி ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவோ அல்லது இந்தியாவில் இருந்து வெளியேறவோ பிரெஞ்சியருக்கு துளியும் விருப்பமில்லை. அதனால் தான், இந்திய சுதந்திரத்துக்கு பிறகும் கூட, 1948ம் ஆண்டு அக்டோபரில் வழக்கம்போல பஞ்சாயத்து தேர்தலை பிரான்ஸ் அரசு நடத்தியது.
இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, ‘பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுடன் முதலில் இணைந்த பகுதி சந்திர நாகூர். தற்போது, மேற்கு வங்காளத்தில் ஒரு மாநகராட்சியாக அந்த நகரம் உள்ளது. சந்திர நாகூரில், 1949 ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுடன் 1951ல் அந்த நகரம் இணைந்தது.
அதன்பிறகு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விடுதலை போராட்டம் வலுவடையத் தொடங்கியது. உண்மையில் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு தான் புதுச்சேரியில் வலிமையான சுதந்திர போராட்டம் நடைபெற்றது. அதை திலகர் வழியில் நடத்தியவர் வ.சுப்பையா. அதிகார வர்க்கத்துடன் பேச்சு நடத்தி முன்னெடுத்து சென்றவர், குபேர் போன்றோர்.
அந்த சுதந்திரப் போராட்டத்தை அடக்க பல வழிகளிலும் பிரான்ஸ் அரசு தீவிரம் காட்டியது. வ.சுப்பையா நாடு கடத்தப்பட்டார். அதாவது, புதுச்சேரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், தமிழக எல்லையான காலாப்பட்டில் இருந்த படி போராட்டத்தை தீவிரமாக நடத்தினார். இதற்கிடையே, தனது ஆளுகையில் இருந்த இந்தோசீனா (வியட்நாம்) பகுதியில் இருந்து ராணுவத்தை பிரான்ஸ் வரவழைத்தது. ஆனால், புதுச்சேரி மக்களின் விருப்பத்தை அறிந்திருந்த சுதந்திர இந்தியாவும், தனது ராணுவத்தை புதுச்சேரியை சுற்றி நிறுத்தியது. மேலும், புதுச்சேரி பகுதியை சுற்றிலும் சுங்கச் சாவடிகளை அமைத்து அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தை மிகக் கடுமையாக கட்டுப்படுத்தியது.
இந்த காலகட்டத்தில், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்வதற்கு தனியாக பாஸ்போர்ட் முறையும் அமலில் இருந்திருக்கிறது. இந்தியாவுக்குள் சிதறிக் கிடந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கப்பரப்புக்குள் செல்ல அந்த பாஸ்போர்ட் தேவை. அது இருந்தால் தான் புதுச்சேரியில் இருந்து காரைக்கால், மாகே, ஏனாம் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
இவ்வளவு கெடுபிடிகளுக்கு பிறகு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஏற்கனவே தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் இணைவது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தவர், அப்போது இந்திய அரசின் பிரதிநிதியாக புதுச்சேரியில் இருந்த கேவல்சிங். தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள கீழுர் என்ற இடத்தை வாக்குப்பதிவு மையமாக தேர்வு செய்தனர்.
1954ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதற்கு 170 பேர் ஆதரவு தெரிவித்தனர். 8 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி வரலாற்றின் போக்கை மாற்றிய இந்த வாக்குப்பதிவை நினைவு கூறும் வகையில் கீழுர் பகுதியில் இன்றும் கூட அதற்காக நினைவிடம் அமைந்துள்ளது. அந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன.
கீழுர் வாக்கெடுப்பு முடிந்ததும் பெரும்பான்மை கருத்து அடிப்படையில், விடுதலை ஒப்பந்தம் தயாரானது. டெல்லியில், புதுச்சேரி உள்ளிட்ட பிரெஞ்சு ஆதிக்க பகுதிகளுக்கு விடுதலை அளிக்கும் விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் புதுச்சேரிக்கு விடுதலை அளிக்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது.
ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே புதுச்சேரிக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவும் இல்லை. முழுமையாக இந்தியாவுடன் இணையவும் இல்லை. பிரெஞ்சு அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பிரெஞ்சு சட்டங்கள், இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நிறுவனங்கள் வெளியேற கால அவகாசம், பிரெஞ்சு மொழியில் உள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பது என பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண அவகாசம் கேட்டது, பிரான்ஸ். இதனால், அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) கையெழுத்தாகவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 1956ம் ஆண்டு மே மாதத்தில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பிறகு, அந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற 6 ஆண்டு காலம் பிடித்தது. இறுதியாக, 1962ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிறைவேறியது. பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஆட்சி பரப்பு அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) முழுமையாக அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தான், இந்தியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் புதுச்சேரி வந்தது. பிரெஞ்சு சட்டங்கள் நீக்கப்பட்டு இந்திய சட்டங்கள் அமலுக்கு வந்தன.
ஏற்கெனவே, கேரளா பகுதியில் உள்ள மாகே, ஆந்திரா பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பிராந்தியங்களும் புதுச்சேரி, காரைக்கால் போலவே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவுடன் இணைய தனித்தனியாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தன. எனவே, அந்த பகுதிகளையும் உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை இந்தியா உருவாக்கியது. அதாவது, இந்தியா சுதந்திரம் பெற்று 7 ஆண்டுகள் கழித்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த போதிலும், அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்தே ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைந்தது. பின்னர், பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு தனிச்சட்டம் இயற்றப்பட்டு 1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரியில் முதல் சட்டப்பேரவை அமைந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > மாவட்டங்கள் > ஏனாம் > புதுச்சேரி இந்தியா இணைப்பு தினம்
புதுச்சேரி இந்தியா இணைப்பு தினம்
posted on
You Might Also Like
தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழஞ்சலி செலுத்திய புதுச்சேரி
September 14, 2024
பாகூர் பகுதி சிபிஐ(எம்) கட்சி வரலாறு
September 9, 2024