ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் – மக்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை!
புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மின்சாரத்தை லாபம் ஈட்டும் வணிகப் பொருளாக மாற்றும் இந்த மக்கள் விரோதத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மின் துறை தனியார்மயமாக்கல் சதித் திட்டம் அம்பலம்!
புதுச்சேரி மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டு முதல் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்துள்ளன. இதன் கீழ், மும்பையை தலைமையிடமாகக் கொண்ட சீன, கனடா கூட்டு தனியார் நிறுவனமான M/s. Apraava Energy Pvt. Ltd-க்கு ரூ. 383.59 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, TOTEX மாதிரியில் சுமார் 4.5 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் புதுச்சேரிக்கு வந்து குவிந்துள்ளன. இது புதுச்சேரியின் சாதாரண மக்களை இருளில் தள்ளும் ஆபத்தான நடவடிக்கை என எங்கள் கட்சி கண்டிக்கிறது.
ப்ரீபெய்ட் மீட்டர்களை எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள்:
• தனியார்மயமாக்கலின் நயவஞ்சகத் துவக்கம் (TOTEX): மின் துறையை நேரடியாக விற்காமல், படிப்படியாக தனியார்மயமாக்கும் நயவஞ்சகத் திட்டத்தின் துவக்கம்தான் இந்த TOTEX (Total Expenditure). இது மின் விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் ஒரு பொருளாதாரப் பயங்கரவாதத் திட்டம். இத்திட்டத்தால், மின் மீட்டர் பொருத்துதல், பழுது பார்த்தல், ஆய்வு செய்தல், மின் கட்டணம் கணக்கிடுதல், வசூல் செய்தல் போன்ற மின் துறை ஊழியர்களின் அனைத்து வேலைகளும் முழுமையாகத் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்படும். இதனால் எண்ணற்ற ஊழியர்கள் வேலை இழந்து, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
• பகல் கொள்ளை: ஸ்மார்ட் மீட்டரின் கொள்முதல், நிறுவல், பராமரிப்புச் செலவு அனைத்தும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும். ஒரு மீட்டருக்கு மாதத்திற்கு ரூ. 90 வீதம் 100 மாதங்களுக்கு வசூலிக்கப்படும். மேலும், நிலைக் கட்டணம் (Fixed Charge) அனுமதிக்கப்பட்ட மின் சுமை (Sanctioned Load) விட கூடுதலாகப் பயன்படுத்தினால் அதற்கான கூடுதல் பணத்தைச் செலுத்த வேண்டும். “Time of Day (ToD) Charge” என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட உடனேயே ToD கட்டணம் அமலுக்கு வரும். மேலும், ரீசார்ஜ் சேவை கட்டணங்கள், ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் எனப் பல வகைகளில் வசூல் செய்வார்கள். இது அப்பட்டமான கொள்ளை!.
• வேலைவாய்ப்பை ஒழிக்கும் முயற்சி: ப்ரீபெய்ட் மீட்டர்கள் பல பேர் செய்யும் வேலையை குறைக்கும் தொழில்நுட்பம் ஆகும். இந்தியாவில் வேலையின்மை தலைவிரித்தாடும் புதுச்சேரியில், படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் அல்லாடி வரும் நிலையில், இத்திட்டம் மின்துறையில் வேலை இழப்பை மேலும் அதிகரிக்கும்.
• பொருளாதார சுமை மற்றும் மின்சார உரிமை பறிப்பு: மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பே பணம் செலுத்த வேண்டும் என்பதால், தினக்கூலி தொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள். மின்சாரம் ஒரு வணிகப் பொருளாக மாறும் என்பதால், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் மின்சார இணைப்பை இழக்க நேரிடும். இது அடிப்படை உரிமையான மின்சாரத்தை மறுக்கும் செயல்.
• தனியார்மயத்தின் கொடூர விளைவுகள்: புதுச்சேரி மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவது மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும், பராமரிப்புச் சேவைகளில் தரம் குறையும், கிராமப்புற மின்சார இணைப்புகளில் அலட்சியம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். இது மக்கள் நலனுக்கு எதிரானது.
• தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பேரிடர் காலங்களில் முடக்கம்: ஸ்மார்ட் மீட்டர்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், மின்சாரம் துண்டிக்கப்பட வழிவகுக்கும். இணைய இணைப்பு இல்லாதது அல்லது பலவீனமாக இருப்பது போன்ற பிரச்சனைகளை நகரப் பகுதிகளில் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் சந்தித்து வருகிறோம். மேலும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் செயலிழந்துவிடும் அபாயம் உள்ளது.
• தரவு தனியுரிமை அச்சுறுத்தல்: ஸ்மார்ட் மீட்டர்கள் தனிப்பட்ட மின் நுகர்வு தரவுகளை சேகரித்து தனியார் நிறுவனத்திற்கு தொடர்ந்து அனுப்பும். இது தனிப்பட்ட தகவல்கள்
திருடுபோகும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
புதுச்சேரி மக்களுக்கு வேண்டுகோள் – அரசுக்கு எச்சரிக்கை!
இந்த மோசடி ப்ரீபெய்ட் மின் மீட்டர்களை தங்கள் வீடுகளில் நிறுவ வரும் தனியார் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. ஆளும் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் அரசு மக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க புரோக்கர் வேலை பார்க்கக் கூடாது! மீறி செய்தால், மக்களைத் திரட்டி மீண்டும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம்.
புதுச்சேரியில் ஏற்கனவே மின்சாரத் துறை தனியார்மயத்திற்கு எதிராக மக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எங்கள் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய திட்டங்களை அமல்படுத்துவது, பொதுமக்களிடையே அதிருப்தியையும், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் போராட்டங்களையும் தூண்டும். இந்த மோசடி மீட்டரை புதுச்சேரியில் அமல்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ஒரு லட்சம் நுகர்வோரிடம் கையொப்பம் பெறப்பட்டு, எங்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களின் கருத்துகளைப் புறக்கணித்து, இத்தகைய மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்துவது அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும்.
மின் துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்.உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். ப்ரீபெய்ட் மின் மீட்டர் மற்றும் மின்துறை தனியார்மயம் ஆகியவற்றை உடனடியாகக் கைவிட வேண்டும்! இந்த மக்கள் விரோத திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
02.08. 2025 இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஆர். ராஜாங்கம், வெ.பெருமாள், தமிழ்ச்செல்வன், சத்யா, பிரபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செய்தியினை தங்களது ஊடகங்களில் வெளியிட்டு, புதுச்சேரி மக்களின் உரிமை குரலுக்கு வலு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்,
(மாநில செயலாளர்.)
தொடர்பு: 9443069075








