அச்சுறுத்தும் டெங்கு வேடிக்கை பார்க்கும் புதுச்சேரி அரசு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாத்திட போர்க்கால நடவடிக்கை எடுத்திடுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள்.

புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (வயது 28). குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழப்பு டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கடந்த ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு 3-க்கும் மேற்பட்டோர் பலியாகி, 1673-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்த வருடம் ரங்கசாமி பிஜேபி அரசும், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்- டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்கத் தவறிய மோசமான போக்கின் விளைவாக, இந்த இருவரின் உயிர்கள் பறிபோயிருக்கிறது.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் முதன்மை வகிப்பதாகவும், திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத மாநிலம், குப்பைகள் இல்லாத தூய்மையான நகரம், பெஸ்ட் புதுச்சேரி என ஆட்சியாளர்கள் வாய்ப்பந்தல் போடுகிறார்கள். தற்போதும் பல இடங்களில் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளின் நகரமாகவே புதுச்சேரி இன்றும் தொடர்கிறது. ஆட்சியாளர்களின் பேச்சுக்களை நம்பி மக்கள் ஏமாறாமல் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


புதுச்சேரி அரசு உடனடியாக டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுக்க வேண்டும் என்றும், தற்போது டெங்கு நோயால் 40க்கும் பாதிக்கப்பட்டுள்ளதோடு நான்கு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வருகிறது இவர்களுக்கு தரமான உயர்தர சிகிச்சை வழங்கி உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் சுகாதாரம், உள்ளாட்சி மற்றும் பொதுப் பணித்துறைகள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் கொசு ஒழிப்பதற்கான மருந்து தெளிப்பது உள்ளிட்ட மேற்படி மூன்று துறைகளும் உள்ளூர் மட்ட அளவில் மக்களோடு இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் பாதிப்பால் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், உயிர் காக்கும் தரமான மருந்துகளை இருப்பில் வைக்கவும் அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கட்சி அணிகளும் பொது மக்களோடு ஆங்காங்கே டெங்கு காய்ச்சல், அதன் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த உள்ளன. பொது மக்களும் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாக கூடியது எனவே, திறந்தவெளியில் சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு .
இரா.இராஜாங்கம்.
மாநில செயலாளர் சிபிஜ(எம்).

Leave a Reply