பத்திரிக்கைச் செய்தி 22.01.2008
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் அவர்கள் கலந்து கொண்டு இன்றைய அரசியல் சூழ்நிலைகளையும் தமிழ்மாநில செயற்குழு முடிவுகளையும் விளக்கிப் பேசினார். தா.முருகன், வெ.பெருமாள், வெ.கு.நிலவழகன், கோ.ராமசாமி, ல.கலிவரதன், சு.ராமச்சந்திரன், க.முருகன், கு.சாந்தி, பெ.உலகநாதன் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முந்தைய பா.ஜ.க அரசு கடைபிடித்த மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றி வருகிறது. இதன் விளைவாக இந்திய விடுதலைக்குப்பிறகு எப்போதுமில்லாத அளவில் விலைவாசி உயர்வு மக்களை வதைக்கிறது. ஆனால் விலைவாசி மற்றும் வறுமையில் மக்கள் படும் துன்பங்களை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. மாறாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொன்டிருக்கிறது. உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இந்திய முதலாளிகள் இடம் பிடித்துள்ளார்கள் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள் .
நாட்டின் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. விளைந்த பொருட்களை அரசு கொள்முதல் செய்யத் தவறியதால் பொதுவினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மறு புறத்தில் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் தானியங்களை வாங்கி பதுக்கி வைத்துள்ளன. இதன் மூலம் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி பதுக்கிய பொருளின் மீது விலையை உயர்த்தி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறன. உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயவிலை அளிக்க மறுத்து இருமடங்கு விலைவைத்து வெளிநாட்டிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனாலும் விலைவாசி குறையும் அறிகுறி தென்படவில்லை. ஆகவே, விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யவும், பதுக்கலை கையகப்படுத்தவும், பொதுவினியோக முறையை வலுப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பா.ஜ.க ஆட்சிகாலத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை சர்வதேச சந்தை விலையோடு இணைக்கப்பட்டது. இந்த நடைமுறையை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அப்படியே பின்பற்றி வருகிறது. தற்போது பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் ஒரு சுற்று உயர வழிவகுக்கும் . இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். “சுண்டைக்காய் கால் பணம், சுமப்பதற்கு முக்கால்பணம்”; என்பது போல பெட்ரோலியப் பொருட்கள் மீது வரிகள் மூலம் விலைகள் உயர்த்தப்பட்டது. இதனால். மத்திய அரசு எதிர்பார்த்ததைவிட வரிகள் மூலம் 40 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதை மூடிமறைப்பது நியாயமல்ல. ஆகவே, வரிவிதிப்பு முறைகளை மாற்றி அமைத்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைகளை குறைத்திட வேண்டும்.
புதுச்சேரி மாநில அரசும் விலைவாசி உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி திட்டம் ஓராண்டு முடிந்த நிலையில் வறுமையில் உள்ளவர்களுக்கு மட்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இத்திட்டத்திற்கு உரியநிதி ஒதுக்கீடு இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
மேலும் ரேஷனில் 6 அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலைக்கு வழங்கப்படும் என்ற அரசு சட்டமன்றத்தில் அறிவித்தது. ஆனால் வெளிச்சந்தை விலைக்கே சில ரேஷன் கடைகளில் மட்டும் வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணமளிக்காது. வெளிச்சந்தை விலையை கட்டுப்படுத்த உதவாது. கேரளத்தில் ரேஷன் பொருட்கள் 22 மூ மாநிய விலையிலும், தமிழகத்தில் பருப்பு , எண்ணெய் உள்ளிட்ட ஆறு பொருட்கள் 15மூ மானிய விலையிலும் வழங்கப்படுவதைப்போல புதுச்சேரி அரசு ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் மற்றும் மளிகைப்பொருட்களை 25மூமானிய விலையில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஷ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ஆகவே, மத்திய, மாநில அரசுகளின் விலைவாசி உயர்வு கொள்கையை எதிர்த்து , பொதுவினியோக முறையை பலப்படுத்தவும் புதுச்சேரி முழுவதும் பிரச்சார இயக்கமும் , பிப்ரவரி 5 ல் ஐந்து மையங்களில் மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களும் பங்கேற்க வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகிறது.
இவண்
( வெ.பெருமாள்)
செயலாளர்