பத்திரிக்கை செய்தி
புதுச்சேரி,
தேதி; 26-11-2024
புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை 300 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தில் இயங்குவதாக மாண்புமிகு மின்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டு இருந்தார்
புதுவை மின்துறை நஷ்டத்தில் இயங்குகிறது மேலும் அதனை புனரமைக்க நிதி தேவைப்படுகிறது என்கிற காரணத்தை கூறி அந்த துறையை தனியார் மயப்படுத்தினால் சிறப்பாக செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய மின்துறை அமைச்சர் கடந்த மாதம் புதுவை வந்து சென்றதின் நோக்கம் என்ன. புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை மற்றும் துறைமுகம் போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைக்க புதுச்சேரி அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது அதன் வெளிப்பாடு தான் தற்போது மின்துறை அமைச்சர் அவர்கள் கூறி இருக்கும் காரணம்.
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுவை உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார கம்பெனிகளை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் சம்மந்தப்பட்ட துறை அல்லது நிறுவனம் சார்ந்த அதிகாரிகள் திறம்பட செயல்படாத காரணத்தால் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்திருந்தார்
என்பதை இத்தருளத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
புதுவை மின்துறையில் 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. மின்சார ஊழியர்களுக்கான சம்பளம் மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது ஆண்டிற்கு ரூபாய் 75 கோடி அளவிற்கு பணியிடங்கள் நிரப்பாத காரணத்தால் பணம் மிச்சமாகின்றது.
புதுவை அரசு அந்த சம்பள பணத்தை என்ன செய்கிறது.
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சொற்ப அளவிலான கூடுதல் பணி நேரத்திற்கு வழங்கப்படும் ஹானரோரியம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
ரூபாய் 465 கோடிக்கு மேல் புதுவை அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக கடந்த 05-11-2024 அன்று Principal Accountant General (Audit-II) ஆல் Audit செய்யப்பட்டு அதன் தகவல் மின்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை வசூலிக்க மின்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலே போதுமானது. மின் துறையில் நஷ்டம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் துறையின் அமைச்சர் அவர்கள் தவறான தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
ரூபாய் 300 கோடி நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணம் அதற்கான முழு விவரத்தை மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும்
புதுச்சேரி அரசாங்கத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது மேலும் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் புதுச்சேரி அரசு உள்ளது ஆகவே புதுச்சேரி சட்டமன்றத்தை கலைத்துவிட்டு புதுச்சேரியை தனியாரிடம் ஒப்படைத்து விடலாமா என்பதை மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
மின் துறையில் இளநிலை பொறியாளர் பதவி மற்றும் கட்டுமான உதவியாளர் பதவி காலியாக உள்ளது குறிப்பாக மின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு கட்டுமான உதவியாளர்கள் 200-க்கும் மேற்பட்ட பதவிகள் காலியாக உள்ளதால் உடனுக்குடன் அப்பணிகளை செய்ய முடியாது சூழ்நிலை உள்ளது
ஒரு நிறுவனத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தால் நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்லும் மத்திய நிதி அமைச்சர் அவர்கள் அந்த துறையை தனியார் மயப்படுத்துவதை விடுத்து திறம்பட செயல்படக்கூடிய அதிகாரிகளை நியமித்து அந்த துறைகளை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் அதை விடுத்து அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார் மயப்படுத்துவது என்பது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் செயலாகும். இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
மின்துறையில் பல ஆண்டுகளாக வாரா கடன்களை Revenue Recovery Act மூலம் வசூலிக்கப்படாமல் உள்ளது. அதனை வசூலித்தாலே பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் அதனை செயல்படுத்த புதுவை அரசு தயங்குவது ஏன்?
ஆங்காங்கே நடைபெறும் மின்திருட்டை தடுக்க புதுவை அரசு மற்றும் மின்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
புதுவை மின்துறையில் உள்ள மின்துறை தனியார் மய மற்றும் கார்ப்பரேஷன் மய எதிர்ப்பு போராட்டக் குழுவோடு கலந்து பேச துறை தலைவருக்கும் நேரமில்லை துறை செயலருக்கும் நேரமில்லை. பிரச்சனைகளை பேசி தீர்க்க துறை சார்ந்த அமைச்சருக்கும் நேரமில்லை.
புதுவை மின்துறையில் ரூபாய் 400 கோடி அளவில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்துவது மற்றும் மின்சார கட்டமைப்புகளை புனரமைப்பது புதிதாக துணை மின் நிலையங்களை உருவாக்குவது போன்ற பணிகளை செய்து அதனை மத்திய அரசு சொல்லுகின்ற நிறுவனத்திடம் தனியாரிடம் ஒப்படைப்பது என்கிற நிலையில் புதுவை அரசு செயல்பட்டு வருகிறது அனைத்தையும் சரி செய்த பிறகு அதனை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது
30 KW மேல் மின் இணைப்பு கோரும் மின் சந்தாதாரர்களிடமே மின் கட்டமைப்புகளை உருவாக்க சொல்லுகின்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேலும் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தும் ஒழுங்குமுறை ஆணையம் ஏன் மின்துறையை தனியார் மயப்படுத்த பொது மக்களிடம் எவ்வித கருத்துக்களையும் கேட்காமல் தன்னிச்சையாக புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை தனியார் மயப்படுத்த ஒப்புதல் வழங்கியதற்கான காரணம் என்ன?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்த போதிலும் மற்ற மாநில மின்சார கழகங்கள் மற்றும் மின்துறையை காட்டிலும் சிறப்பாக புதுவை மின்துறை செயல்பட்டு வருகிறது மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட புதுவை மின்துறையில் 24 மணி நேரத்திற்குள் மின்தடை சரி செய்யப்பட்டு மின்சாரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
குறைந்த நேரத்தில் மின் தடையை சரி செய்து மற்ற மாநிலங்களை காட்டிலும் விரைவாக மின்சாரத்தை வழங்கி புதுவை மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது அனைத்து பொது மக்களுக்கும் தெரியும் மேலும் மின் இழப்பு என்பது மிக குறைவாகவே உள்ளது
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும் அரசு துறைகளையும் தனியார் மயப்படுத்தி வருவது பொது மக்களையும் இலவச மின்சாரத்தை நம்பி உள்ள ஏழை விவசாயிகளையும் அடித்தட்டு மக்களையும் வெகுவாக பாதிக்கும் செயலாகும் எனவே புதுவை அரசும் மற்றும் மத்திய அரசும் புதுவை அரசு மின் துறையை தனியார் மயப்படுத்த உள்ள நடவடிக்கைகளை கைவிட்டு புதுவை அரசு மின் துறையை அரசு துறையாகவே செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை மின்துறை தனியார்மய/ கார்ப்பரேஷன் மய எதிர்ப்பு போராட்ட குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இச்செய்தியனை தங்களது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
பு. வேல்முருகன்
பொதுச்செயலாளர்
புதுவை மின்துறை தனியார்மய மற்றும் கார்ப்ரேஷன் மய எதிர்ப்பு போராட்ட குழு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > நம் புதுவை > புதுச்சேரி > மின்துறை குறித்து தவறான தகவல் அளித்து வரும் நமச்சிவாயத்திற்கு தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழு பதில்
மின்துறை குறித்து தவறான தகவல் அளித்து வரும் நமச்சிவாயத்திற்கு தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழு பதில்
posted on
You Might Also Like
மாநாட்டு அழைப்பிதழ்…!
November 28, 2024
புதுச்சேரியின் புல்டோசர் ஆட்சிக்கு கடும் கண்டனம்
November 25, 2024