அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், நீண்ட காலமாகவும் பணிபுரியும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

*புதுச்சேரி முதலமைச்சருக்கு, காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை.*

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு, அரசு சார்பு, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு துறை ஆகியவற்றில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அனைத்து தினக்கூலி ஊழியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கடந்த பட்ஜெட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ந.ரெங்கசாமி அவர்கள் அறிவிப்பு செய்தார்கள். ஆனால், அறிவிப்பு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் பல துறைகளில் ஏராளமான பதவிகள் காலியாக உள்ளன. குறிப்பாக சொல்லப் போனால் 40% பதவிகள் காலிப் பணியிடங்களாகவே இருந்து வருகின்றன. தற்போது புதுச்சேரி அரசுக்கு இருந்து வரும் நிதி நெருக்கடியில் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய இயலாது என அரசும், அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்பொழுது பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதால் அரசுக்கு கூடுதலான நிதி சுமைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. மேலும், தற்போது தினக்கூலி ஊழியர்களாக
பணிபுரிந்து வருபவர்களில் ஏராளமானோர் வயதான நிலையில் உள்ளவர்களாகவும் , இன்னும் ஒரு சில வருடங்கள் அல்லது மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளவர்களாகவும் உள்ளனர்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தபடி *வேளாண் அறிவியல் நிலையம், மார்க்கெட்டிங் கமிட்டி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து, கான்பெட், ரொட்டி பால், வட்டார வளர்ச்சி அலுவலக MGNREGA, பஜன்கோவா, பொதுப்பணித்துறை வாரிசுதாரர்கள், PPCL, PRTC, அங்கன்வாடி* உள்ளிட்ட பல்வேறு துறை மற்றும் துறை சார்ந்த அலுவலகங்களில் நீண்ட காலமாகவும் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றி வரும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்ய வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவரையும் காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், தினக்கூலி ஊழியர்களின் அவல நிலையை அரசுக்கு எடுத்துக் கூறவும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கை சம்பந்தமாக சட்டமன்றத்தில் வலியுறுத்தவும் வலியுறுத்தி காரைப்பகுதியில் உள்ள அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் ஒன்றிணைத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக காரைக்காலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

இவண்
M.ஷேக் அலாவுதீன்,
பொதுச் செயலாளர்
காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம்

Leave a Reply