புதுச்சேரி காவல் நிலைய சித்திரவதைகள், மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டுவோம்!

புதுச்சேரி, ஜூன் 6, 2025: புதுச்சேரி காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜூன் 6, 2025 அன்று மாலை 6:00 மணியளவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள்:
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) விடுதலை
* சிறுத்தைகள் கட்சி
* திராவிடர் விடுதலைக் கழகம்
* மக்கள் உரிமைக் கூட்டமைப்பு
* மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்
* தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள்
* பெரியார் சிந்தனையாளர் இயக்கம்
* புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு
* பீ போல்ட் இயக்கம்.


தவளக்குப்பம் காவல் நிலையச் சித்திரவதை – ஓர் கொடூர நிகழ்வு:
அண்மையில், நல்லவாடு லே-பாண்டி ரீசார்ட்டில் பணிபுரிந்து வந்த நான்கு பெண்கள் பொய்யான புகாரின் பேரில் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் “விசாரணை” என்ற பெயரில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களில் கலையரசி என்ற பெண், இரண்டாம் நாள் நள்ளிரவு ஒரு மணி வரை கொடூரமான சித்திரவதைக்கு ஆளானார். இதைத் தட்டிக் கேட்ட அவரது கணவர் அர்ஜுனன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இந்தச் சம்பவங்களை ஒட்டி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற அமைப்புகள் தலையிட்டுப் போராட்டங்களை நடத்தின. கலையரசி சித்திரவதைக்கு உள்ளானதன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தமே அவரது கணவரின் மரணத்திற்கு வழிவகுத்தது என்பதால், தவளக்குப்பம் காவல் நிலைய அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையின் மனித உரிமை மீறலுக்குப் புதுவை அரசு பொறுப்பேற்று, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு கலையரசி குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.


சபாநாயகரின் செயல் கண்டனத்துக்குரியது:
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில், ஐந்து நாட்களுக்குப் பிறகு அர்ஜுனனின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திடீரெனத் தலையிட்டு, ஹோட்டல் நிர்வாகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், பாதிக்கப்பட்ட கலையரசியின் குடும்ப வறுமையைப் பயன்படுத்தியும் ரூ. 3.5 லட்சம் நிவாரணத் தொகை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதை அவரே பத்திரிகை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். இது அவரது பதவிக்கு அழகு அல்ல. இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் பாதுகாப்பது, தவறு செய்யும் காவல்துறையினரைப் பாதுகாப்பது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் தொடர்ந்து துணை போவது கண்டிக்கத்தக்கது என கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையின் தொடர் மனித உரிமை மீறல்கள்:
காவல்துறையின் இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன.
* தவளக்குப்பம், தானாம்பாளையம் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை: இச்சம்பவத்தில் தவளக்குப்பம் காவல் நிலையத்தின் அதே அதிகாரிகள் குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கிறார்கள்.


* காட்டேரிக்குப்பம் இருளர் பழங்குடியின மக்கள் சித்திரவதை: இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது இருளர் பழங்குடியின மக்கள் பொய்யான புகாரின் பேரில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபணமான பின்னரும், சித்திரவதை செய்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
* கிருமாம்பாக்கம் காவல் நிலையம்: அநியாயத்தைத் தட்டிக்கேட்ட இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக காவல்துறையின் தாக்குதல்களுக்கு உள்ளாகி சித்திரவதைக்கு ஆளானார்.
இதுபோன்ற பல நிகழ்வுகள் வெளியில் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக என்.ஆர். காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் இது ஒரு தொடர்கதையாகி வருகிறது. புதுச்சேரி காவல் நிலையங்கள் அன்றாடம் சித்திரவதைக் கூடங்களாக மாறி வருகின்றன.
போராட்டத்தின் தொடக்கம்: காவல்துறை தலைமையகத்தை நோக்கி பேரணி!
எனவே, கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனையின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:
* பேரணி: வருகிற ஜூன் 11, 2025 அன்று காலை 10 மணிக்கு மிஷன் வீதி – நேரு வீதி சந்திப்பில் கூடி, புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று, காவல்துறை தலைவரைச் சந்தித்து, கோரிக்கைகளை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இது காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும் போராட்டத்தின் தொடக்கமாக, சக்தி மிக்க மக்கள் இயக்கத்தை நடத்துவதற்கான முதல் கட்டமாகும்.
* கோரிக்கைகள்:
   * தவளக்குப்பம் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காவலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, நேர்மையான விசாரணைக்காகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்க. (இடமாற்றல் உத்தரவு தண்டனை அல்ல.)
   * காவல்துறையின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட கலையரசியின் கணவரின் மரணத்திற்கு காவல்துறையின் நிர்வாகமே பொறுப்பு. எனவே குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடுக.
   * தவளக்குப்பம் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான பொய்ப் புகார் அளித்த லே-பாண்டி ரிசார்ட் நிர்வாகம் மற்றும் இதை முறையாக விசாரிக்காமல் சித்திரவதையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை சம்பந்தப்பட்டவர்கள் மீது உயர்மட்ட விசாரணை வேண்டும்.
   * புதுச்சேரி காவல் நிலையங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும், குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், காவல்துறையை ஒழுங்குபடுத்தவும் உயர்மட்ட கண்காணிப்புகள் தேவை.
   * தானாம்பாளையம் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாளாளர் ராமுவின் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
   * போக்சோ சட்ட அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் தோழர்கள் எஸ். ராமச்சந்திரன், தினேஷ் பொன்னையா, புருஷோத்தமன், தேவபொழிலன், முருகானந்தம், இராமங்கையர் செல்வன், பஷீர் அகமது, சாமிநாதன், தீனா, வெ. பெருமாள், ஆர். ராஜாங்கம், என். கொளஞ்சியப்பன், என். பிரபுராஜ், ஆர். சரவணன், விஜயா, அபிராமி, வேலு ஆகியோர் பங்கேற்றனர்.
தோழமையுடன்,
எஸ். ராமச்சந்திரன்,
செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி.

Leave a Reply