கலைச்செல்வி தற்கொலைக்கு காவல்துறையினர்தான் முழுப் பொறுப்பு

காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்தாலும் அலட்சியத்தாலும் பறிபோன உயிர். உரிய விசாரணை நடத்துக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குக. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  வேண்டுகோள்.

புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் பணம், கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக புதுச்சேரி பிள்ளைச்சாவடி கங்கையம்மன் வீதியைச் சேர்ந்த மீனவர் சந்திரன் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த காவல் அதிகாரிகள் இவர்களிடம் கடன் வாங்கிய ஏழுமலை என்பவரை இருக்கையில் அமர வைத்து கடன் கொடுத்த சந்திரனை அவமானபடுத்தி வெளியே போகுமாறு கூறியதாக கூறப்படுகிறது. மேலும் ஏழுமலை, காவலர்கள் முன்னிலையில் உன் பணத்தை கொடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

காவல்நிலையம் வந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற விரக்தியிலும் காவல்துறையின் மோசமான நடத்தையாலும் மனம் உடைந்த சந்திரனின் மனைவி கலைச்செல்வி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் கலைச்செல்வி உடல் முழுவதும் தீ வேகமாக பரவி பற்றி 50 சதவீத அளவுக்கு மேல் கலைச்செல்விக்கு தீக்காயம் ஏற்பட்டு  ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 6:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கலைச்செல்வி தற்கொலைக்குக் காலாப்பட்டு காவல்துறையினர்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவே இந்த கொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை வெளிப்பட்டபோதும் சில காவல்துறையினர் திருந்துவதாக இல்லை. இதனால் காவல்நிலையம் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். கவால்துறையில் நடைபெற்றுவரும் தொடர் கட்டபஞ்சாயித்துகளால் புதுச்சேரி மக்கள் தொடர் துன்பங்களையும் பொருள் இழப்புகளையும் உயிர் இழப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை பல்வேறு வழிகாட்டுதல்கள் நீதிமன்ற உத்தரவுகள் வந்தபோதும் புதுச்சேரி காவல்துறையில் உள்ள சிலர் மாறுவதாக இல்லை. இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசின் ஆதரவே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே புதுச்சேரி அரசு இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு .
இரா.இராஜாங்கம்.
மாநில செயலாளர் சிபிஜ(எம்).

Leave a Reply