கார்ப்பரேஷன் இல்லாததால் அரசுக்கு ஆண்டுதோறும் ₹2 ஆயிரம் கோடி இழப்பு. பலகோடியை ஏப்பம் விடும் தனியார்.
புதுவையில் மதுபான கொள்முதலுக்கு கார்ப்பரேஷன் இல்லாததால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி லாபமடைந்து வருகின்றன.
சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் பல வரலாற்று பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இருப்பினும் தற்போதைய சூழலில் புதுச்சேரி என்றவுடன் மயக்கும் மதுதான் பலரின் கண்முன்னே வந்து நிற்கிறது.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை சுற்றுலா இடமாக இருப்பதால் மதுப்பிரியர்களை புதுச்சேரி தன்னை நோக்கி இழுத்து வருகிறது.கடந்த கால புதுச்சேரி தன்னுடைய வருவாய்க்கும், புதுச்சேரி மக்களின் மேம்பாட்டுக்கும் 3 பஞ்சாலைகள், கைத்தறி நெசவு தொழில், சர்க்கரை ஆலைகள், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருந்தது. நகரமயமாதலின் விளைவாகவும், ஆலைகள் பலவும் மூடப்பட்டதால், வணிகம், சுற்றுலா, கலால் ஆகியவை மாநில அரசின் வரி வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதுச்சேரியில் மொத்த மதுபானம், சில்லறை கடைகள், ரெஸ்ட்டோ பார்கள் என மூன்று கேட்டகிரியில் மது விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரியில் 40 மொத்த விற்பனை மதுபான கடைகள், 154 சில்லறை கடைகள், 189 ரெஸ்டோ பார்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. காரைக்காலில், 14 மொத்த விற்பனை கடைகள், 39 சில்லறை விற்பனை, 20 ரெஸ்டோ பார்கள், மாகேவில் 26 மொத்த விற்பனை, 33 சில்லறை விற்பனை கடைகளும், 2 ரெஸ்டோ பார்களும் உள்ளன. ஏனாமில், 7 மொத்த விற்பனை, 10 சில்லறை விற்பனை கடைகள், 2 ரெஸ்டோபார்கள் என மாநிலத்தில் மொத்தம் 534 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. மேலும் புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன. இதே போல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன.
ஆனால் 1989ல் இருந்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகளுக்கு புதிதாக அனுமதி கொடுக்கப்படவில்லை. புதுச்சேரி சுற்றுலாப்பகுதி என்பதால் வெளி மாநிலத்தவர், வெளிநாட்டவர்களும் அதிகம் வருகை தருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கக் கூடிய மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய உணவகங்களுக்கு (ரெஸ்டோ பார்கள்) மட்டுமே தற்போது உரிமம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மீண்டும் தமிழகம் – புதுச்சேரி விலை வித்தியாசம் அதிகரித்துள்ளது.
மதுக்கடைகள் தரப்பில் விசாரித்தபோது, மதுபானங்கள் விலை தற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ள சூழலில் தமிழக எல்லையோரம் உள்ள புதுச்சேரி மதுபானக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணமாக சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளிலும் அதிகளவு கூட்டம் உள்ளது என்றனர்.
இது போன்ற சூழலில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான வியாபார உரிமங்களும் தனியார் மயமாகவே உள்ளது. புதுச்சேரியில் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.மதுபான உற்பத்தியாளர்களே விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். கலால்வரி வசூல் செய்வது, வரி ஏய்ப்பை தடுப்பது போன்ற பணிகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது.
ஆண்டு ஒன்றுக்கு 50 லட்சம் ஐஎம்எப்எல் மதுபான பெட்டிகள் புதுச்சேரியில் உள்ள 5 மதுபான தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுதவிர வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 25 லட்சம் மதுபான பெட்டிகள் தருவிக்கப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு ரூ.6,000 கோடியிலிருந்து ரூ.9,000 கோடி வரை இருக்கும். ஆனால், அரசுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி, உரிமைக் கட்டணம் ஆகியவைகளின் மூலம் சுமார் ரூ.1,000 கோடி ரூபாய் அளவில் தான் கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் மதுபானங்கள் டாஸ்மாக் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. விலையை அரசே நிர்ணயம் செய்கிறது. சில்லரை வியாபாரிகள் அரசு நிர்ணயம் செய்த விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர். இதன்மூலம் அரசுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
புதுச்சேரியில் இந்த லாபம் தனியாருக்கு (மொத்த வியாபாரிகளுக்கு) செல்கிறது. இதை தடுக்க புதுச்சேரியிலும் அரசு நிறுவனம் ஒன்றை நிறுவி அதன்மூலம் கொள்முதல் செய்து கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதனால், அரசுக்கு ரூ.1,500 கோடியிலிருந்து ரூ.2 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால் இதனை அரசு செய்ய மறுத்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவியை எதிர்பார்க்கும் மாநில அரசு, வருமானத்தை ஈட்ட வாய்ப்பிருந்தும், அதனை பயன்படுத்தாமல் உள்ளது. எனவே துணை நிலை ஆளுநர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அரசு செய்ய மறுப்பது ஏன்? கார்ப்பரேஷன் ஆரம்பிக்க அரசு தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பெரும்பாலான மதுக்கடைகளை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் நடத்தி வருகின்றனர். மேலும் கார்ப்பரேஷன் ஆரம்பித்தால், தங்களுக்கு வருவாய் தடுக்கப்படும் என்பதால், இதனை கொண்டு வருவதை தடுத்து வருகின்றனர். மேலும் வெரைட்டி மதுபானங்கள் கிடைக்காது என பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேஷன் ஆரம்பிக்காமல் சமாளித்து வருகின்றனர். கார்ப்பரேஷன் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கடினமாக இருந்தால், சாராயக்கடைகளைபோல மதுபான உரிமங்களையும் ஏலத்தில் விடுவதன் மூலமும் அரசுக்கு வருமானம் கிடைக்கும். இதனையும் செய்யாமல் தொடர்ந்து காலம் கடத்துகின்றனர். எனவே புதுச்சேரி அரசு மதுபான கொள்கைகள் முழுவதுமாக மறு சீரமைப்பு செய்து, புதுச்சேரிக்கான வருமானத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
ஓட்டலில் தங்குவது, வெளியே சென்று உணவு சாப்பிடுவது, மது அருந்துவது ஆகிய அனைத்துக்குமான செலவு இங்கே குறைவு. பிரெஞ்சு டவுன் பகுதிகளுக்குச் சென்று உணவு மற்றும் மதுஅருந்த விரும்பினாலும் அதிக பணம் செலவழிக்காமல் அதை மிதமான விலையில் பெற முடிகிறது. இதனால்தான் விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர்.
1300 வகை மதுபானங்கள் புதுச்சேரியில் 2019ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய 5 ஆண்டுகள் வரை சராசரியாக கலால் வரி மூலம் ரூ. 600லிருந்து ரூ. 850 கோடி வரை இருந்தது. கொரோனா காலத்தில் ரூ. 750 கோடியாக குறைந்தது. இதனை ஈடுகட்ட 20 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அது தற்போதுவரை விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதையடுத்து ரூ.1,100 கோடியை எட்டியது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ரூ.1,500 கோடிக்கு கலால்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. புதுச்சேரி ஒரு மலிவான சுற்றுலா நகரம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வருவதற்குக் கரணம் தங்கும் விடுதிகள், உணவுகள் மற்றும் மதுபானங்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 250 வகையான மதுபானங்கள் கிடைக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் 1,300க்கும் மேற்பட்ட வித, விதமான மதுபான வகைகள் கிடைக்கின்றன. இதன்காரணமாக புதுச்சேரிக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ரெஸ்டோ பார்களுக்கு கடிவாளம்மதுபான கடைகள் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அமைத்திருக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் இத்தகைய இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைத்திருக்க வேண்டும். ஆனால் உணவகம் மற்றும் மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய ரெஸ்டோ பார்களுக்கு சில்லறையை மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனை தவிர மேற்கூறிய நிபந்தனைகள் பொருந்தாது. இதன் காரணமாகவே கண்ட இடங்களில் சகட்டுமேனிக்கு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல மக்களுக்கு இடையூறாக ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, பிரச்னை எழுந்துள்ளது.