”ரேஷன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் மக்களைத் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவோம்” என்று புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமக்கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.
மாகே, காரைக்கால், ஏனாம் ஆகிய புதுச்சேரி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாகேவில் சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மூடிக் கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும், மீன்பிடி துறைமுகத்தை செயல்படுத்த வேண்டும் மின் துறையில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் மற்றும் தனியார் மைய நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பிள்ளை தோட்டம் பெரியார் சிலையிலிருந்து துவங்கிய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம், மாகே கமிட்டி செயலாளர் சுனில் குமார், பல்லூர் இடைக்கமிட்டி செயலாளர் சுரேந்திரன் காரைக்கால் மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். புதுச்சேரியின் முக்கிய வீதிகளை கடந்து சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமைந்தபோது, புதுச்சேரியில் மூடி கிடக்கும் ரேஷன் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுப்போம். அதேப்போல் மூடிக் கிடக்கின்ற பஞ்சாலைகளைத் திறக்க ஒன்றிய ஆட்சியில் இருந்து போதிய நிதியை பெறுவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்கள். அன்றைக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசும்போது நடமாடும் ரேஷன் கடைகளை புதுச்சேரியில் திறப்போம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்.
அக்கூட்டணி அரசு அமைந்து இன்றைக்கு மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் ரேஷன் கடைகளைத் திறக்கவில்லை. இன்றைக்கு அரிசி விலை கிலோ விலை ரூ.75-க்கு விற்கும்போது ஏழை மக்கள் எப்படி அரிசியை வாங்குவார்கள். அண்டை மாநிலமான கேரளம், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை புதுச்சேரி அரசு திறக்கவில்லை என்றால், மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி தலைமைச் செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம்” என்று குறிப்பிட்டார். அதையடுத்து, முதல்வர் ரங்கசாமியை பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு தரப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > ஊடக அறிக்கை Press release > புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்றால்…” – ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்றால்…” – ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை
posted on