மாணவரின் மரணத்திற்கு அரசே பொறுப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

பத்திரிக்கை செய்தி

அரசின் இதயம் இயங்காததால் பறிபோகும் புதுச்சேரி மக்களின் உயிர்கள்- மாணவரின் மரணத்திற்கு அரசே பொறுப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

புதுச்சேரியில் உள்ள அனைத்துறைகளையும் செயல்படாமல் செய்து ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களையும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றனர் மத்திய- மாநில ஆட்சியாளர்கள்.

பொது போக்குவரத்தை கூட முறைப்படுத்த திராணியில்லாத ஆட்சியாக என்.ஆர். காங்கிரஸ் –பாஜக கூட்டணி அரசு உள்ளது. இதனால் தினமும் மரண ஓலம் புதுச்சேரி முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வெறும் வாய்ப்பந்தல் போடும் அரசாகவும். துணை நிலை ஆளுநர், முதல்வர், பாஜக கட்சியினர், அரசு உயர் அதிகாரிகள் என நான்கு வகையான அரசு நிர்வாகம் நடைபெறுவதால் புதுவையில் உள்ள அனைத்து துறைகளும் செயலிழந்து கிடக்கிறது.

பொறுப்பற்ற செயல்பாட்டினால் சாலை மரணங்கள் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது விழுப்புரம் சாலையில் பேருந்து ஏறி பள்ளிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் நேற்றும் மட்டும் அதே பகுதியில் மூன்று சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இதற்குக் காரணமான புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

புதுச்சேரி ஆட்சியாளர்கள் ஊழல் மற்றும் பேரம் போன்றவற்றில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதால் பேரம் படியும் வரை எந்தப் பணியும் தூங்குவது கிடையாது.

போக்குவரத்து காவல்துறையில் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது இதை நிரப்ப நடவடிக்கை இல்லை மேலும் 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது இப்படி இருக்கும்போது எப்படி அரசு நிர்வாகம் சரியாக செயல்பட முடியும்.

தனியார் பேருந்துகள் பெரும்பாலும் ஆளும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சொந்தமானது என்பதால் இவர்களின் அத்துமீறலை காவல்துறையினர் கண்டுகொள்வது இல்லை.

தனியார் பேருந்துகள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாகச் செல்கின்றன அவைகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இந்திரா காந்தி சிலை முதல் அரும் பார்த்தப்புறம் வரையிலான சாலை விரிவாக்கப் பணி ஆரம்பிக்கப்படாமல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி விழுப்புரம் சாலையைப் பயன்படுத்துவோர் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக அரும்பார்த்தபுரம் பகுதியில் இருந்து முதலியார் பேட்டை ஜான்பால் நகர் வரையிலான 4.5 கிலோமீட்டர் 100 அடி புறவழிச் சாலை அடிக்கல் நாட்டப்பட்டுப் பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாரத்திற்கு இரண்டு சாலை விபத்து மரணங்கள் நிகழ்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை போன்ற நிர்வாகங்கள் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முறையான ஏற்பாடுகள் செய்வதில்லை இதற்கு எல்லாம் ஆளும் அரசுதான் பொறுப்பு.

புதுச்சேரி முழுவதும் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழிம்மாக பயணிக்க லாயக்கற்ற சாலைகளாக மாறி உள்ளதால் ஏராளமான சாலை விபத்துகள் நடத்த வண்ணம் உள்ளன.

எனவே இதுபோன்ற சாலை விபத்துகள் நடக்காமல் இருக்க ஆளும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் ஆட்சியை விட்டு விலக வேண்டும்.

பொது போக்குவரத்தை அதிகப்படுத்தவேண்டும் அதற்கு அரசு பேருந்துகளை அதிகப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை விபத்தில் மரணம் அடைந்த மாணவனின் குடுப்பத்திற்கும் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் இதே போன்று பலியான அனைவருக்கும் புதுச்சேரி அரசின் சார்பில் இழப்பீட்டு நிதி வழங்கவேண்டும்.

சாலை விபத்தில் பாதிக்கப்படுவார்களுக்கு முதல் உதவி சிகிச்சைக்கு என்று அனைத்து நவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்ட தனியான மருத்துவ பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேல் சிகிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் அரசே முழு செலவையும் ஏற்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இத்தகைய சாலைவிபத்து சம்பங்கள் தொடர்கதையானால் இதர கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயலிழந்த புதுச்சேரி அரசைக் கண்டித்துத் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக எச்சரிக்கிறோம்.

இவன்,
ஆர்.ராஜாங்கம், மாநில செயலாளர்,

Leave a Reply