தனித்துவம் மிக்க தத்துவ அறிஞர் தோழர் சீத்தாராம் – க.கனகராஜ்

தோழர் சீத்தாராம் யெச்சூரி என்றதும் கூடவே நினைவுக்கு வருவது அவரது தனித்துவமிக்க பல அம்சங்கள்: 

1 சோவியத் யூனியன் வீழ்ச்சி, சோசலிச முகாம் பின்னடைவு, அதையொட்டி தாராளமயக் கொள்கைகள் அமலாக்கம் உலகம் முழுவதும் தீவிரமாக செயல்படத் துவங்கிய காலம். “தனி யார்மயம், தாராளமயம், உலகமயம் என்பதிலி ருந்து யாரும் தப்பித்து விட முடியாது; ஏனெனில் அதற்கு மாற்றே கிடையாது (There Is No Alternative – TINA)” என்று முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும், ‘நடுநிலையாளர் களும்’ பேசிக் கொண்டிருந்த காலம். கணிச மான இடதுசாரி இளைஞர்கள் மத்தியில் ஒரு குழப்பம் பரவியிருந்த போது தோழர் சீத்தாராம் தனது பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஒரு கருத் தாக்கத்தை முன்வைத்தார். அது எதிர்வாதம் என்பதாக அல்லாமல் காரண காரியங்களுடனான உறுதியான விளக்கமாக நிறுவப்பட்டது. அது தான், “சோசலிசமே மாற்று (Socialism Is The Alter native – SITA)” என்கிற முழக்கம்.  உலக வரலாறே முட்டுச் சந்தில் நின்றபோது அதை தகர்த்தெறிந்த விளக்கமாக – கருத்தாக்கமாக ‘TINA’ என்பது உண்மையல்ல ; சோசலிசமே மாற்று என்பது திகழ்ந்தது; நம்பிக்கையை விதைத்தது.

2 உலகமய காலத்தில் சோசலிசத்திற்கு எதிர் காலம் உண்டா, சோசலிசம் காலாவதியாகி விட்டதா என்பது போன்ற கேள்விகள் சோச லிசத்தின்பால் அக்கறை உள்ளவர்கள் மத்தியிலும், இடதுசாரி ஆதரவாளர்கள் மத்தியிலும் கூட எழுப்பப்பட்டன. முதலாளித்துவ அறிஞர்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா போன்றவர்கள், ‘வர லாற்றின் முடிவு’ என்று கொக்கரித்தார்கள். அதா வது, சமூக வளர்ச்சியில் இறுதிக் கட்டம் முத லாளித்துவம் தான்; அதற்குமேல் சோசலிசம், கம்யூ னிசம் என்பதெல்லாம் கிடையாது என்று, சோசலிச முகாம் தகர்வை முன்வைத்து கொக்கரித்தார். அந்த காலக்கட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் இயக் கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.கந்தய்யா நினைவு சொற்பொழிவில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உரையில், சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு நான்கு காரணங்களை முன்வைத்தார்.

1.    சோசலிச அமைப்பு முறையில் அரசின் வர்க்கத் தன்மை குறித்து தவறான மதிப்பீடு

2.    சோசலிச ஜனநாயகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள்

3.    சோசலிச பொருளாதாரக் கட்டமைப்பு முறை பற்றியதவறான புரிதல்

4.    தத்துவார்த்த உணர்வு நிலையை அலட்சியப்படுத்தியது

– இவற்றை சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் முன்வைத்தார். எதிர்காலம் சோச லிசத்திற்கே; சோசலிசத்தால் மட்டுமே மனித குலம்  முழுமைக்கும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறையிலி ருந்தும் விடுதலையை அளிக்க முடியும் என்பதை நிறுவுவதில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

3 இந்தியாவில் 1980க்கு பிறகு அரசியல், மதவெறி மயமாவது தீவிரப்பட்டது, 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு பாஜக ஆளும் கட்சியாக மாறியது. இதனால் இந்தியாவில் சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. மத வெறி, குறிப்பாக இந்துத்துவாவின் பிற்போக்குத் தனங்களையும் மனிதகுலத்திற்கு அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் முன்வைப்பதில் அவர் கூடுதல் பங்களிப்பை செய்திருக்கிறார். மனுஸ்மிரு தியை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்துத்துவா எப்படி சாதி ஒடுக்குமுறை, ஆணாதிக்கம், மொழியா திக்கம், இன ஆதிக்கம் ஆகியவற்றை முன் வைக்கிறது என்பதை மிகத் தெளிவாக, விளக்கமாக நிறுவியிருக்கிறார். மதவெறிக்கு எதிரான போ ராட்டத்தை முன்னெடுப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமின்றி இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் அவரது உரைகள் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன.

நவீன தாராளமயக் கொள்கை காலத்தில் உலக மயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெ டுப்பது எப்படி என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக விவாதங்களை முன் னெடுத்தது. 2005 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டில்தான், உலகமய மாக்கல், சர்வதேச மூலதனங்கள், பொதுத்துறை, அந்நியக் கடன், சமூகக் கடமைகளை நிறைவேற்று வதிலிருந்து அரசு பின்வாங்குவது, அரசு சாரா  அமைப்புகள் பற்றி நமது அணுகுமுறை ஆகியவை  விவாதப் பொருளாக முன்வைக்கப்பட்டது. அப்போது, தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என்கிற முறையில் மேற்குறிப்பிட்ட விஷயங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை ஆவணத்தை முன்வைத்தார். இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் இதர பகுதி உழைக்கும் மக்கள் சமூக செயற் பாட்டாளர்கள் நிகழ்காலத்தில் முன்னுக்கு வரும் பிரச்சனைகளின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, அதேசமயம் மார்க்சியத்தின் வெளிச்சத் தில் அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த ஆவணம். மார்க்சியத்தை ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சூத்திரம் போல பயன்படுத்தக் கூடாது; மாறாக இயக்கவியல் அணுகுமுறையில் – குறிப்பிட்ட காலச் சூழலில் நிலைமைகளுக்கு தகுந்தவாறு மார்க்சியத்தைப் பொருத்துவது எப்படி என்பதற்கான மிகச்சிறந்த வழிகாட்டி இந்த ஆவணம்.

5 இதோடு இணைந்தும், தொடர்ச்சியாகவும் இந்துத்துவா என்பது வெறும் சமூகச் செயல் பாடு மட்டுமல்ல; முதலாளித்துவப் பொருளாதா ரத்திற்கான அரசியல் சமூக செயல்பாடும் ஆகும். அந்த வகையில், இந்துத்துவா என்பது நவீன தாராள மயம் தீவிரமாக அமலாவதற்கான இந்திய அணுகு முறையாக இருக்கிறது. எனவே, மதவெறியும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்தே பொதுத் துறை, பொதுச் சொத்துக்கள் ஆகியவற்றை சூறை யாடுகின்றன. உழைக்கும் மக்களின் உரிமைக ளைப் பறிக்கின்றன; ஒடுக்குமுறையை ஏவி விடு கின்றன என்பதை கேட்போர் புரியும்படியும், வாசிப் போர் உணரும்படியும் தெளிவடையச் செய்தவர் தோழர் சீத்தாராம். அவர் தனது உரைகளில் தவறாது பயன்படுத்தும் ஒரு வார்த்தை  ‘கம்யூனல் – கார்ப்பரேட்  நெக்சஸ்.’ அதாவது, ‘மதவெறி – பெரு நிறுவன கூட்டு’. இந்தக் கருத்து, அவரது முக்கிய பங்களிப்புகளுள் ஒன்றாகும்.

6 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை ஆவணமான கட்சித் திட்டம். அதன் முதல் பத்தி யின் கடைசி வாக்கியத்தில், “இந்தியாவில் சோச லிசம் என்பது வர்க்கச் சுரண்டலற்ற, சமூக ஒடுக்கு முறைகளற்ற சமூகம்” என்று அறுதியிட்டு கூறுகிறது. ஆனாலும், பல நேரங்களில் பொருளாதாரப் போ ராட்டத்தை மட்டுமே பிரதானமாக நடத்துகிறீர்கள் என்ற கருத்து கட்சி மீதான குற்றச்சாட்டாகவும், அவதூறாகவும் சில நேரங்களில் கட்சிக்குள் தவறான புரிதலாகவும் நிலவி வந்த நிலையில், பொருளாதாரப் போராட்டத்தை மட்டும் நடத்து வது ஒற்றைக் காலில் நடப்பதற்கு சமம்; சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் இணையும் போது தான் பாய்ச்சல் வேகத்தில் செல்ல முடியும் என்று, அவர் மீண்டும் மீண்டும் வலுவான முறையில் கட்சி அணிகளின் உணர்வாக மாற்றுவதற்கு முயற்சித் தார்; அதில் வெற்றியும் பெற்றார்.

2004 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தீண் டாமை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாட்டில் தோழர் சீத்தாராம் ஆற்றிய உரை சாதியும் வர்க்கமும் இந்திய சமூகத்தில் பின்னிப்பிணைந்து இருப்பதையும் கம்யூனிஸ்ட்டுகள் சாதி எதிர்ப்புப் போராட்டத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் இணைந்தே எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும், வலுவாக முன் வைத்தது. முன்னதாக, 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை யிலும் “இந்தியாவைப் பொறுத்தவரை வர்க்கத்திற்கு எதிராக சாதி என்று இல்லை. 5000 ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய அமைப்பிற்குள் இருந்துதான் வர்க்க அமைப்பு உருவானது. எனவே, சுரண்டப்படும் வர்க்கங் கள், ஒடுக்கப்படும் சாதிகள் ஒன்றுக்கொன்று எதிரா னவை அல்ல. ஒடுக்கப்பட்ட சாதிகளின் போராட்டமும் வலுப்படுத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே. நாடு முன்னேறிச் செல்ல சமூக ஒடுக்கு முறைக்கும் வர்க்கச் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு விரிவான  போராட்டமாக ஒன்றிணைய வேண்டும். இந்த போராட் டங்களை பலப்படுத்தவும் எழுத்தாளர்களின் பங்க ளிப்பை நான் கோருகிறேன்” என மிகச் சுருக்கமாக ஆனால், முழுமையாக தன் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி யில்,  தனியார் துறையில் இடஒதுக்கீடு என்பதை, காங்கி ரசை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளச் செய்து குறைந்தபட்ச பொதுத் திட்டத்திலும் அதை ஒரு அம்சமாக கொண்டு வருவதில் தோழர் சீத்தா ராம் யெச்சூரியின் பங்கு முக்கியமானது.

கட்சியின் பொதுச் செயலாளர் என்கிற முறையில் மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட் டங்கள்; பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கி ணைக்கவும்; தொடர்ச்சியான நீண்ட போராட் டத்தை நடத்துவதற்கும் இடையறாது அவரது வழி காட்டுதல் மிகமிக முக்கியமானது. வெளிப்படை யாக அல்லாமல் பல்வேறு கருத்தோட்டங்களையும் அரசியலையும் கொண்ட அமைப்புகளை ஒருங்கி ணைத்து, வெல்லற்கரியவர் என்று ஊதிப்பெரி தாக்கப்பட்ட பிம்பத்துடன் இருந்த மோடியை ஓராண்டுக்கும் அதிகமான காலப் போராட்டத்தின் மூலம் மக்களே மகத்தானவர்கள், போராட்டங்களே ஆயுதம் என்பதை நிறுவியதில் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் பங்கு அளப்பரியது.

இப்படி பல வகைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதானமான வழிகாட்டுதல்களில், கருத் தாக்கங்களில் தோழர் சீத்தாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளின் ஊடாக – செயல்பாடுகளின் வழியாக என்றென்றும் நீங்காமல் நிறைந்திருப்பார்.

க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

Leave a Reply