சாலையோர வியாபாரிகளை துன்புறுத்தினால் போராட்டம் மா.கம்யூ.,

பத்திரிக்கை செய்தி: 7.10.2022

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியும், ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை.

மத்தியில் பாஜக ஆட்சி இருந்தும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த எந்த திட்டத்தையும் கொண்டு வராத நிலையில், நேர்மையாக வாழ வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சுயமாக வேலை வாய்ப்பை உருவாக்கி சாலை ஓரங்களில் ஏதேனும் ஒரு வேலை செய்த பிழைக்கும் சாலை ஓர வியாபாரிகள், சிறு வணிகர்கள், தொழிலாளர்களை குறி வைத்து புதுச்சேரி ஆட்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

புதுச்சேரியை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற ஏதோ படையெடுப்பை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள். புல்டோசர்கள் மற்றும் காவல்துறை புடை சூழ அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழி இல்லாத விளிம்பு நிலை மக்களை அச்சுறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்தி உள்ளனர்.

வாங்கும் சம்பளத்திற்கும் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கும், எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத வகையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ள புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் இது போன்ற இரக்கமற்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள்.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு என்று ஒரு திட்டத்தை வகுத்ததுடன், அதனை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டனர். நாடு முழுவதும் உள்ள சுமார் 4 கோடிக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் சம்பந்தமாக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கவும், குறிப்பாக சாலையோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் வகையில் மின் இணைப்பு, குடிநீர் வசதி அமைத்து தருதல், நிழற்குடைகளை ஏற்படுத்துதல், வங்கிக் கடன் உதவி செய்தல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றைக் கூட புதுச்சேரி ஆட்சியாளர்கள் நிறைவேற்றாமல் எதற்கெடுத்தாலும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற ஒரு பெயரை வைத்துக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.

உண்மையிலேயே புதுச்சேரியின் மக்களின் நலனில் இவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால் சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் நகராட்சிக்கு சொந்தமான மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலங்களை யார் கையகப்படுத்தி இருக்கிறார்கள் என்பது மாவட்ட ஆட்சியர் உட்பட முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் அனைவருக்கும் நன்கு தெரியும், குறிப்பாக முதலியார் பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நகராட்சிக்கு தகுந்தமான வானொலி திடல் பூங்கா இன்றைக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கோவிந்தசாலை பகுதியில் சதுர்த்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நகராட்சி இடம் சூறையாடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆட்சியாளர்களின் கண்ணுக்கு முன்பாகவே அரசு நிலங்களை கபிலிகரம் செய்து வரக்கூடிய நபர்களிடம், சலாம் அளிக்கும் இந்த அரசு சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்றால் எண்ணற்ற துயரங்களைக் கண்ட சாலையோர வியாபாரிகள் தற்போது பண்டிகை நெருங்கி வரும் காலங்களில் இது போன்ற அரசின் நடவடிக்கை சாலையோர வியாபாரிகளின் உயிரையும் பறிக்கக் கூடியதாக இருக்கிறது.

எனவே புதுச்சேரி அரசு உடனடியாக சாலையோர வியாபாரிகளை துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்ந்தால் , அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.

இவன், ஆர்.ராஜாங்கம்,
மாநில செயலாளர், சிபிஎம், புதுச்சேரி

Leave a Reply