புதுச்சேரி அரசு மின்துறையை விற்பனை உடனே நிறுத்துக -சிபிஎம்

2

புதுச்சேரி அரசு மின்துறை தனியார்மயம். கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு, நமது வீடுகளை இருட்டாக்கும் முடிவு.

கடந்த 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்தார். தற்போது இருக்கும் ‘மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அப்போதைய காங்கிரஸ் அரசிலும் அமைச்சராக இருந்தார். அவர்களை உள்ளடக்கிய அமைச்சரவை தனியாரிடம் ஒப்படைக்கமுடியாது என்ற கண்டன தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார்கள்,

ஆனால் தற்போது என்.ஆரின் முதுகில் ஏறி ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ளது. மின்துறை தனியார் வசமானால் ஏற்படப் போகும் ஆபத்துகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இயக்கங்களை கட்டமைத்தது. மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகளை இணைத்துப் பிரச்சாரங்கள், வலுவான ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக பிரச்சனையை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று கொண்டு இருக்கிறது.

புதுச்சேரி மின்துறையின் சொத்து மதிப்பு சுமார் 25000 கோடி ரூபாய் புதுச்சேரி மக்களாகிய நம்முடைய வரிப்பணத்தில் உருவான சொத்து. மின்துறையில் சுமார் 3000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது ஒன்றிய அரசின் முடிவின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க புதுச்சேரி அரசு கோருவது வெறும் 300 கோடி.

புதுச்சேரி மக்களாகிய நம்முடைய சொத்தான மின்துறையை பாதுக்காக்க வேண்டியது நமக்காகவும் அடுத்த தலைமுறைக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை. இந்தியாவிலேயே மிகக் குறைவான விலையில் தடையின்றி 24 மணி நேரமும் எழை எளியவர்க்கும் மின்சாரம் அளித்ததும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் என லாப நோக்கில்லாமல் சேவை நோக்கோடு மக்கள் பணி செய்துவருவது நமது புதுச்சேரி அரசு மின்துறை. சுனாமியின் போதும், தானே புயலின் போதும், ஒக்கி புயலின் போதும் சமீபத்திய கஜா புயலின் போதும் மின்சாரதுறை அரசுதுறையாக இருந்ததால்தான் விரைந்து செயல்பட்டு மின் விதியோகத்தை சரிசெய்ய முடிந்தது என்பதை அனைவரும் அறிவோம். எதற்காக அரசுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டதோ அதன் இலக்கை அடைந்து வெற்றி கண்டது புதுச்சேரி மின்துறை. புதுவை மாநிலத்தில் உள்ள 15 லட்சம் மக்களுக்கும் சொந்தமான ஒரு மிகப் பெரிய சொத்து ஆகும்.

பிஜேபி- என்.ரங்கசாமி அரசு லாபத்தில் இயங்கும் மின்துறையை’ நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி உள்ளடி வேலையை செய்து விற்க பார்க்கிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு நமது மக்களோ, அரசு ஊழியர்களோ, வணிகர்களோ, புதுவையில் வளர்ச்சியோ முக்கியமல்ல. அவர்களுக்கு மின்துறையை வாங்கப்போகும் முதலாளிகள் தரும் பணம்தான் முக்கியமாகத் தெரிகிறது.

முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் புதுச்சேரி மக்களின் நலன் பாதுக்கப்படும் ஊழியர்களின் மின்நுகர்வோரின் ஒப்புதல் இல்லாமல் மின்துறை தனியார்மயமாக்குதல் எதுவும் மேற்கொள்ளப்படாது என்று ஜனவரி மாதத்தில் உறுதியளித்தார்கள். ஆனால் 2022 ஏப்ரல் 24ல் அமித்ஷா வருகைக்கு பின் அக்டோபர் மாதத்தில் தனியார் மயத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள் இடையில் நடைபெற்ற அச்சுறுத்தல், பேரம் அவர்களுக்கே வெளிச்சம்!

துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் மின்றுறை தனியார்மயமாக்கும் விஷயத்தில் யாரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் என்கிறார். எப்படி மக்கள் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் என்பதை ஆளுநர் தெரிவிப்பாரா? மக்களின் சொத்துக்களை மக்களின் அனுமதியின்றி தனியாரிடம் தாரை வார்ப்பது மக்கள் பாதிக்கப்படாத செயலா?

ஏற்கனவே சில மாநிலங்கள் மின்சாரம் தனியார்மயத்தில் சிக்கி அல்லல் பட்டு திரும்பியிருக்கிறது. தனியார்மய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறது. புதுச்சேரியிலும் மின்துறை தனியார்மயத்தை தடுத்தி நிறுத்திட அனைத்து இடதுசாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இணைந்து போராட இம்மாநாடு அழைக்கிறது.

புதுச்சேரி மக்களின் சொத்தான மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்று பாஜக என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது.

நவம்பர் 13. 2022ல் கம்பன் கலையரங்கில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். சீத்தாரம்யெச்யூரி பங்கேற்ற புதுச்சேரி மாநில உரிமை சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

தீர்மானத்தை கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர் பிரபுராஜ் முன்மொழிந்தார்.

Leave a Reply