பாஜக ஆட்சியைத் தூக்கியெறிவோம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம், ஜனவரி 28-30 தேதிகளில் திருவனந்தபுரத்தில்  உள்ள இஎம்எஸ் அகாடமியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை:

அயோத்தி கோவில் திறப்பு

2024 ஜனவரி 22 அன்று அயோத்தி யில் ராமர் கோவில் திறப்பு விழா என்பது உண்மையில் மதச்சார்பின்மைக்கும், மதத்தை அரசிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் அரசியலிலிருந்தும் தனித்தே  வைத்திருக்க வேண்டும் என்கிற வரையறைக்கும் சாவு மணி அடித்திருக்கிறது. ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் அர சால் பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர், உத்தரப்பிர தேச ஆளுநர் மற்றும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் நேரடியாகவே பங்கு கொண்டு நடந்திருக்கிறது. குடியர சுத் தலைவரும், துணைத் தலைவரும் பிரதமருக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பி, அவரை “உறுதிமொ ழியை மீட்டவர்” என்றும் மற்றும் பல்வேறுவிதங்களி லும் வானளாவப் புகழ்ந்து வாழ்த்துச் செய்திகள் அனுப்பி இருக்கிறார்கள்.

நடைபெற்ற ஒட்டுமொத்த விழாவும், உச்சநீதிமன் றத்தால் திரும்பத் திரும்ப கூறப்பட்டதுபோல் அரசாங் கம் என்பது எந்தவொரு மதத்துடனும் தன்னை சம்பந் தப்படுத்திக்கொள்ளக்கூடாது அல்லது தனிச் சலுகை  அளிக்கக்கூடாது என்கிற- அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கை நேரடியாக மீறப்பட்டே நடந்துள்ளது.

தேர்தல் ஆதாயத்திற்காக…

இந்த நிகழ்வு வரவிருக்கும் தேர்தலில் அரசி யல் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துட னேயே நடந்துள்ளது. இந்த நிகழ்வையொட்டி நாடு தழுவிய அளவில் ஆர்எஸ்எஸ்/பாஜக மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இந்த விழா நாடு முழுவதும் பல இடங்களில் மிகப்பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அன்றையதினம் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்த நிகழ்வில் ஊழி யர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மதியம் 2.30 மணிவரை ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன. இதே போன்றே வங்கிகள் உட்பட பொதுத்துறை நிறுவ னங்களும் மூடப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலி ருந்தும், நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் கோவிலுக்கு மக்களை அணிதிரட்ட திட்டமிடப்பட்டி ருந்தது. தேர்தல் நடைபெறும் வரையிலும், அதாவது மார்ச் 24 வரையிலும் ராமர் கோவிலுக்குச் செல்வ தற்காக மக்கள் அணிதிரட்டப்பட இருக்கிறார்கள்.

1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் படி, அயோத்தியைத் தவிர மற்ற இடங்களைப் பொறுத்தவரை 1947 ஆகஸ்ட் 15 அன்றிருந்த நிலை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இப்போது நீதித்துறையைத் தங்களுக்கு உடந்தையாக மாற்றி, காசி மற்றும் மதுரா விலும் அயோத்தி போன்று பிரச்சனைகளை மீண்டும் உருவாக்கிட திட்டமிட்டிருக்கிறார்கள். அயோத்தி குறித்து உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்புக்கு மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு

மத நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட தெரிவு என்பதும் அவர்களின் மத நம்பிக்கையை மதித்திட வேண்டும் என்பதுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கொள்கையாகும். ஒவ்வொருவரும் அவர்களின் மத நம்பிக்கையைப் பின்பற்றிட ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் உயர்த்திப்பிடித்து வந்திருக்கிறது. ஆனால் அதே சம யத்தில், மக்களின் மத நம்பிக்கையைத் துஷ்பிரயோ கம் செய்வதற்கான முயற்சிகளையும், அதனை அரசி யல் ஆதாயத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவ தையும், அரசுடன் மதத்தை இணைப்பதையும் உறுதி யுடன் எதிர்த்தே வந்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்கள்

சமீபத்தில் நடைபெற்ற இரு சுற்று சட்டமன்றத் தேர்தல்களில்- பாஜக மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கரில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி கர்நாடகா, இமாசலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக-வின் வெற்றிகள் பிரதானமாக, கேடுகெட்ட சுரண்டலுடன் சாதி உணர்வுகளுடன் இந்துத்துவா மதவெறி வாக்குகளை ஒருங்கிணைத்ததன் விளைவாக பெறப்பட்டவை ஆகும்.

இந்துத்துவா மதவெறி ஒருங்கிணைப்பை நேர்மை யான முறையில் எதிர்கொள்ள வேண்டும். ஆர்எஸ் எஸ்/பாஜக-வின் கொடிய இந்துத்துவா மதவெறிக்கு எதிராக, மென்மையான இந்துத்துவா நிலைப்பாட்டை எடுப்பது என்பது இந்துத்துவா வெறியர்களையே மேலும் வலுப்படுத்திடும். இவ்வாறு மென்மையான இந்துத்துவா போக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அனைத்து இந்துத்துவா அமைப்புகளையும் சிறு பான்மையினருக்கு எதிராக சமூகத்தை மதவெறி உணர் வூட்டுவதற்கு மேலும் வாய்ப்புகளை அளித்திடும்.

அயோத்தியை மையப்படுத்தி, மக்களின் மத உணர்வுகளைத் துஷ்பிரயோகம் செய்துவந்த போதிலும்; சமீபத்தில் சில மாநிலங்களில் வெற்றி பெற்றிருந்தபோதிலும், 2024 மக்களவைத் தேர்தலின் வெளிப்பாடு குறித்து பாஜக நிச்சயமற்று இருப்பதுபோலவே தோன்றுகிறது. எனவே பாஜக மக்களவையில் தன் நிலையை மேம்படுத்திக்கொள்வதற்காக, எதிர்க் கட்சிகள் மத்தியில் கட்சித் தாவலைத் தூண்டுவதற்காகவும், தன் முன்னாள் கூட்டாளிகளுடன் உடன்பாடு  வைத்துக்கொள்வதற்காகவும் அமலாக்கத்துறையையும், பண பலத்தையும் வெட்கக்கேடான முறையில் துஷ்பிரயோகம் செய்யும் காரியங்களில் இறங்கி இருக்கிறது.

நிதிஷ் குட்டிக் கரணம்

இதேபோன்று முன்பு மகாராஷ்டிராவில் செய்தது, பின்னர் கர்நாடகாவில் செய்தது, இப்போது பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மிகப்பெரிய அளவில் குட்டிக் கரணம் போட்டு சாதனை புரிந்துள்ளது. நிதிஷ்குமார் தற்போது பீகாரின் முதலமைச்சராக ஒன்பதாவது முறை, பாஜக-வின் ஆதரவுடன், தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறார். இம்மாநிலங்களில்  பாஜகவைத் தோற்க டித்த மக்கள், இப்போது மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து சட்டையை மாற்றிக்கொண்ட பேர்வழிகளுக்குச் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

2019 டிசம்பருக்குப் பின்னர், மோடி அரசாங்கம் இந்தச் சட்டத்தின் கீழான விதிகளை இன்னமும் உரு வாக்கிடவில்லை. இப்போது, பொதுத்தேர்தல் வரு வதையொட்டி, மதவெறித் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் தேர்தல் ஆதாயம் பெறுவதற்காக, இதனை அமல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது.

‘இந்தியா’ கூட்டணி

இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சென்றுவிட்டபோதிலும், அது பாஜகவுடன் கூடிக் குலாவியபோதிலும், அரசமைப்புச் சட்டத்தின் கீழான குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சங்களைப் பாதுகாப்பதற்காக, பாஜகவை முறியடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்திடும், தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டிடும்.

மாநில அளவில் தொகுதி உடன்பாடுகளை மேற் கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பின்னர் முக்கியமான பிரச்சனைகள் அடிப்படை யிலும், அரசமைப்புச்சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகவும் மக்களிடம் செல்ல திட்ட மிடப்பட்டிருக்கிறது

கேரளா

கேரளாவில் மிகவும் வெற்றிகரமான முறையில் நவ கேரள சங்கம விழாக்களை நடத்தியமைக்காக கேரள மக்களுக்கும், இடது ஜனநாயக முன்னணிக் கும் மத்தியக் குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொள்கிறது. இது, நாட்டில் வேறெந்த மாநிலமும் மேற்கொள்ளாத நிகரற்ற திட்டமாகும்.

ஆளுநர் : அந்தப் பதவிக்கே தகுதியற்ற நபர்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் மீதான தொடர்ச்சியான அரசியல் தாக்குதல்கள் மற்றும் மோசமான நடத்தை ஆகியவற்றால் கேரள ஆளுநர் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டார். இதில் சமீபத்திய அவருடைய மோசமான நடவடிக்கை என்பது, கேரளாவில் மிகவும் ஜனநாயக ரீதியாகவும், அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாண வர்களுக்கு எதிராக அவர் தெருவில் அமர்ந்த நிகழ்வா கும். முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இவ்வாறு அவர் அமர்ந்துகொண்டு, மத்திய பாதுகாப்புப் படையி னரை பாதுகாப்புக்காக அழைத்ததாகும். “அரச மைப்புச்சட்ட எந்திரத்தின் சரிவின் தொடக்கம்” என்பது போன்ற அவருடைய அறிக்கைகள் மாநில அரசாங் கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் அச்சுறுத்தல் களை மாநில மக்கள் முற்றிலுமாக நிராகரித்திடு வார்கள்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சியானது, Cpim 2024 Cc அரசாங்கத்திற்கு எதிராகவும், முதல மைச்சருக்கு எதிராகவும் அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை சுமத்திக்கொண்டும், ஒரு எதிர்மறை யான மற்றும் ஜனநாயக விரோத அணுகுமுறையைப் பின்பற்றிக்  கொண்டிருக்கிறது. கேரளாவின் உரிமை கள் மீது ஒன்றிய அரசாங்கம் ஏற்படுத்தி வரும் தாக்கு தல்கள் தொடர்பாக எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறது. இது மாநில அரசாங்கத்திற்கு எதி ராக பாஜக மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகளு க்கு உதவுகிறது. காங்கிரஸ் கட்சியின் இத்தகைய சீர்குலைவு அணுகுமுறையை கேரள மக்கள் நிராகரி ப்பார்கள்.

மேற்கு வங்கம்

மிகப்பெரிய அளவில் கொல்கத்தா பிரிகேட் பரேடு மைதானத்தில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடத்தி, மக்கள் கோரிக்கைகளுக்கான மாபெரும் நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வங்க இளைஞர்க ளுக்கு மத்தியக் குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

திரிபுரா

திரிபுராவில் பாஜக அரசாங்கத்தின் சர்வாதிகாரம், தன்னுடைய பாசிசத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி இருக்கிறது. இதனால் தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுமா என்கிற ஐயங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தடுக்கப்பட்டாக வேண்டும்.

மத்தியக் குழு அறைகூவல்கள்

1. அனைத்து மாநிலக் குழுக்களும் மோடி அரசாங்கத் தின் கொள்கைகளால் அதிகரித்து வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திட வேண்டும்.

2. மோடி அரசாங்கத்தின் கேரளாவிற்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளுக்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்  கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சார்பில் புதுதில்லியில் பிப்ரவரி 8 அன்று தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. அதே சமயத்தில் அனைத்து மாநி லக் குழுக்களும் தங்கள் மாநிலங்களில் கேரள அரசுக்கு ஆதரவாக கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

3. ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் (சம்யுக்த கிசான் மோர்ச்சாவும்), மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடையும் இணைந்து வரும் பிப்ரவரி 16 அன்று நடத்திடும் கூட்டு இயக்கங்களுக்கு கட்சியின் மத்தியக் குழு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

4. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், வாக்குச் சாவடிகளில் உள்ள மின்னணு பிரிவுகள் அனைத்தும், வாக்குப் பிரிவுகள் (voting units), கட்டுப்பாடு பிரிவுகள் (control units) மற்றும் விவி பேட் (VVPAT) அனைத்தும் மறுவரிசைப்படுத்தப்பட வேண்டும் என்று நாடு முழுதும் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும். குறைந்தபட்சம் 50 விழுக்காடு விவிபேட்-கள் கட்டுப்பாடு பிரிவில் உள்ள பதிவுடன் சரிபார்க்கப்பட வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி

Leave a Reply