பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 6.58% குறைவுக்கு ஆளும் என்.ஆர்- பிஜேபி அரசின் அலட்சியமே காரணம்.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அதில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.88 (மாணவர்கள் – 78.77, மாணவிகள் – 90.94). இது கடந்த ஆண்டை விட 6.58 குறைவு. இது குறித்து முதலமைச்சரிடம் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல. மாணவர்கள், ஆசிரியர்கள் மீது பழிப்போடுவது சரியல்ல.
புதுச்சேரி அரசு கல்வித்துறையின் செயல்பாடுகள் படிப்படியாக அகலபாதாலத்தில் சென்றுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கல்வியாண்டும் துவங்கும்போதும் பாடப்புத்தகங்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், சீருடைகளை வழங்கவேண்டும், மேல்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு அவசியமான மாணவர் பேருந்துகள் இயக்கப்படவேண்டும், ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப வேண்டும், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையினை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பாடங்களையும் நடத்துவதற்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பயிற்றுவித்தல் பணியை தவிர வேறு பணி செய்யக்கூடிய ஆசிரியர்களைப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும், அக்க்ஷயபாத்தரா மூலம் வழங்கப்படும் தரமில்லாத மதிய உணவுத் திட்டத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் போன்ற அடிப்படை வேலைகளில் ஆளும் அரசு சிறிதும் அக்கரையின்றி தான்தோன்றிதமான அலட்சியமாக நடந்து கொள்வதைத்தான் பார்க்க முடிகிறது.
இதற்கு மாறாக எது எல்லாம் புதுச்சேரி மாணவர்களின் நலன்களுக்கு எதிரானதோ! அதை எல்லாம் மிகவும் பொறுப்பாகக் கல்வி அமைச்சர் செய்துவருகிறார். புதுவையின் கல்வி அமைச்சருக்கு ‘காவி அமைச்சர்’ என்ற பெயர் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் முக்கியமான துறையான கல்வித்துறையை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, கல்வித் துறையை முழுவதும் காவி மயமாக்கும் வேலையை மட்டுமே பார்த்து வருகிறார். பள்ளியின் மதிய உணவுத் திட்டத்தை அட்சய பாத்திரம் நிறுவனத்திடம் ஒப்படைத்து காவிமயமாக்குதல், அறிவியல் நீக்கம் செய்யப்பட்ட பாடத்திட்டமான சிபிஎஸ்இக்கு மாற்றி காவிமயமாக்குதல் என ஒவ்வொரு படியாகக் காவி பூசும் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் மாணவர்களின் படிப்பிலும், ஆசிரிய பற்றாக்குறையை போக்குவதிலும், தேர்ச்சி விழுக்காட்டை அதிகப்படுத்துவதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது அவருக்கு.
ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு கவனப்படுத்த ஒவ்வொருமுறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தினால் மட்டுமே வேலைகள் நடக்கின்றன. ஆளும் அரசுக்கு அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திலோ, மாணவர்களின் நலனிலோ சிறிதளவும் அக்கறை இல்லை என்பது தெளிவாக தெரிவதோடு தனியார் பள்ளி முதலாளிகளுக்குச் சாதகமாக அரசுப்பள்ளிகளை அழிக்கும் வேலையை சிறப்பாகச் செய்வதாக தெரிகிறது.
உண்மையிலேயே முதலமைச்சருக்கு அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், போதுமான வகுப்பறைகள், காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட வேண்டும், பாடப்புத்தகங்களை முறையாக வழங்கிட வேண்டும், ஏற்கனவே இயக்கப்பட்ட 50 மாணவர்கள் பேருந்தை இயக்க வேண்டும், எந்தவித ஆய்வும் இன்றி தான்தோன்றிதனமாக சிபிஎஸ்இ பாடமுறை நிறுத்த வேண்டும், சாப்பிடவே முடியாத மதிய உணவு திட்டத்தை மாற்றி அரசே ஊட்டச்சத்துடன் மதிய உணவை வழங்க வேண்டும், பள்ளி மாணவர்களை மையப்படுத்தி நடைபெறும் கஞ்சா, மது விற்பனையைத் தடுக்க வேண்டும், கல்வித்துறையில் உள்ள நிர்வாக குறைபாடுகளைக் களையவேண்டும் வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.
R. Rajangam, State Secretary CPM, Puducherry.