பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழ்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (ஜூலை-7) புதுச்சேரி வருகை தர உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வந்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரச்சாரம் செய்த பிறகு தற்போது அடுத்த தேர்தலுக்காக வருகிறார்.
மாநிலத்தில் பிஜேபி- என்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகைதந்தனர். புதுச்சேரி மாநிலம் மின்னல் வேகத்தில் முன்னேரும் என அவரவர் பல அறிவிப்புகள், விளம்பரங்கள் மக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்டது. ஆனால் எந்த ஒரு புதிய திட்டமும் இதுவரை வரவில்லை. புதுச்சேரியின் கடும் நிதி நெருக்கடியும் தீர்ந்தபாடு இல்லை. இந்நிலையில் தற்போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகையை ஒட்டி அதேபோன்று ஆரவார அறிவிப்புகளாக ஏராளமான திட்டங்களை தொடங்கி வைக்க போவதாகவும், மாநிலத்தின் நிதி சிக்கல்கள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் வெற்று விளம்பரங்கள் மீண்டும் செய்யப்படுகிறது.
ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரி மாநில தேவைகளைப் பற்றியோ, மக்களின் நலனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து பல்வேறு துரோகத்தை செய்து வருவதை மாநில மக்கள் நன்கரிந்து உள்ளனர்.
குறிப்பாக இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மக்களை திரட்டி நடத்தப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. இதுநாள் வரை திறக்கப்படவில்லை. ஜவுளி பூங்கா என்ற பெயரில் தனியார் பஞ்சாலைகளுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கும் ஒன்றிய பாஜக அரசு, புதுச்சேரியின் அடையாளமான பஞ்சாலைகளுக்கு நிதி ஒதுக்காமல், நிரந்தரமாக மூடிவிட்டது. இலாபத்தில் இயங்கிவரும் மின்துறை சொத்துக்களை சூறையாடி, நாசமாக்க தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுககு 10 சதவீத மருத்துவ கல்வி இட ஒதுக்கீடும் மறுக்கப்பட்டுள்ளது. மத அடிப்படை கொண்ட அட்சய பாத்திர உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் மதிய உணவை பறித்துள்ளது. இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கே.வி.கே கால்நடை மருத்துவகல்லூரி உள்ளிட்ட சொசைட்டி கல்லூரிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி ரூ. 3,800 கோடி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2022-23ல் ஆண்டில் மட்டும் ரூ. 2370 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி நிதி வசூல் ஆகி உள்ள நிலையில், அத்தொகையில் 41 சதவீதம் வழங்குவதற்கு மாறாக, 23 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படி பல திட்டங்களில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்படுகிறது. இத்தகைய செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியாளர்களின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்றும் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படவில்லை.
அதோடு மாநிலத்தின் ரூ.11,000 கோடி கடனை உடனே ரத்து செய்ய வேண்டும். சட்டசபையுடன் கூடிய புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே வழங்கவும், நிதிக் குழுவில் மாநிலத்தை இணைத்திடவும், மாநில சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுச்சேரியை இணைத்து ரூ.2 ஆயிரத்து 328 கோடி உடனடியாக ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவீத நிதி உதவி வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துரிதப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் வலியுறுத்துகிறது.
இச்செய்தியை தங்கள் நாளிதழில் வெளியிட்டு உதவிடுமாறு கேட்டு கொள்கிறோம்.
இவன்,
இரா.இராஜாங்கம்,
மாநில செயலாளர்