ஆளுநர்களின் வரலாறு காணாத மோதல் போக்கு – டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக்
இந்தியாவில், 2014 ஆம் ஆண்டு என்பது மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையி லான உறவுகள் மோசமடையும் புதிய கால கட்டத் தொடக்கத்தை குறிக்கிறது. இந்திய கூட்டாட்சி யில் ஆளுநரின் பங்கு என்பது எப்போதுமே சர்ச்சைக் குரியதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், இன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளின் ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கான ஆயுத மாக ஆளுநர் பதவி மாற்றப்பட்டுள்ள அளவுக்கு இதற்கு முன்பு நிலைமை இப்படி மோசமடைந்ததில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஆளுநர்கள் மாநில அரசுடன் தினந் தோறும் அறிவுப்பூர்வமற்ற மோதலில் ஈடுபட்டுள்ள னர். ஆளுநர்களின் மோதல் போக்கு அரசமைப்புச் சட்ட நெருக்கடி நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.
பாஜகவின் சித்தாந்தமே மோதலுக்கு அடித்தளம்
மாநில அமைச்சரவைக்கு ஆளுநரின் ‘உதவி மற்றும் ஆலோசனை’ என்பது இன்று எதிர்க்கட்சி என்ப தாக உருமாற்றம் அடைந்துள்ளது. ஒன்றியத்தில், இன்று ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக கட்சியை கணக்கில் எடுத்துக் கொண்டால் இதில் ஆச்சரியப்படு வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், அந்தக் கட்சி தமது சித்தாந்தத்தால், இந்தியாவின் பன்மைத்துவத்தில் நம்பிக்கை இல்லாத, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்தல், இப்படி ஒற்றைத்து வம் கொண்ட நாடாக தேசத்தை மாற்றியாக வேண்டும் என்று உறுதியுடன் செயல்படும் ஒரு கட்சி தில்லி யில் ஆட்சியில் இருக்கும் போது ஆளுநரின் உரு மாற்றம் வியப்பளிக்கவில்லை. நாட்டை ஒற்றைத்துவ தேசமாக மாற்றி அமைப்பதற்கான தனது பயணத் தில் இந்திய கூட்டாட்சி முறை பெரும்தடையாக இருப்ப தாக அந்தக் கட்சி பார்க்கிறது. அதிகாரங்களை எல்லாம் ஒன்றியத்தில் குவிக்கும் ஒன்றிய அரசின் வேகம் முன்னுதாரணம் இல்லாதது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஏராளமான சட்டங்கள் மாநிலங்களின் நிதியதிகார வாய்ப்பை திட்டமிட்டே குறைப்பதாக உள்ளன. மாநில அரசின் வருவாய் ஆதாரங்கள் கசக்கி பிழிந்தெடுக்கப்படு கின்றன. மாநில ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் பதவி பெரும் தீங்காக மாறியுள்ளது.
நாடாளுமன்ற/ சட்டமன்ற அமைச்சரவை ஆட்சி முறை
ஆளுநரின் உண்மையான அதிகாரங்கள், பணிகள் என்ன என்பதை இந்தியா ஏற்றுக்கொண்ட நாடாளு மன்ற/சட்டமன்ற அமைச்சரவை ஆட்சி முறையின் பின்புலத்தில் தான் மதிப்பிடப்பட வேண்டும். ஷாம் ஷெர் எதிர் பஞ்சாப் மாநில அரசு (1974) வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்ட நிர்ணய சபையில் நடை பெற்ற விவாதங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னர் வழங்கிய தனது முக்கியமான தீர்ப்பில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிட்டது: ‘நேரு,பட்டேல், பி. என். ராவ் ,அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் எல்லாவற்றிற்கும் மேலாக அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர். அம்பேத் கர் ஆகிய அனைவரும் குடியரசுத் தலைவர் ஆட்சி நிர்வாக நடைமுறையினை நிராகரித்து, ஒரே குரலில் நாடாளுமன்ற, சட்டமன்ற கூட்டாட்சி அமைப்பினை ஏற்றுக் கொண்டனர்.’ டாக்டர். அம்பேத்கர், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணி பற்றி வெளிப்படையாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆளுநரின் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநரின் பங்கு என்பது சம்பிரதாயப்பூர்வமானதுதான். தேசம் மேற்கொள்ளும் முடிவுகள் குடியரசுத் தலைவர் எனும் முத்திரை மூலம் அறிவிக்கப்படுகிறது. பொதுவாகவே குடியரசுத் தலைவர் அவரது அமைச்சர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர்.
அமைச்சர்களின் ஆலோசனைக்கு மாறாக அவர் எதையும் செய்ய முடியாது. அமெரிக்க குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் எந்தச் செயலரையும் பதவி நீக்கம் செய்ய முடியும். போதுமான பெரும்பான்மை இருக்கும் வரையில் இந்திய குடியரசுத் தலைவர் அப்படி எல்லாம் செய்வதற்கு அதிகாரம் இல்லை”. அம்பேத்கரின் கருத்தை நேரு ஒத்துக் கொண்டார். “அமைச்சரவை அடிப்படையிலான ஆட்சியின் தன்மை என்பது அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சர வையிடம்தான் இருக்கும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். அதே நேரத்தில், பிரெஞ்சுக் குடி யரசுத் தலைவர் போன்று இந்திய குடியரசுத் தலை வரை வெறும் பெயரளவிலான தலைவராக ஆக்குவ தற்கும் நாம் விரும்பவில்லை. அவருக்கு உண்மை யான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அவரது நிலையினைகண்ணியமிக்கதாக உருவாக்கி உள்ளோம்” என்று நேரு குறிப்பிட்டார். நாடாளுமன்ற ஆட்சி முறையின் சாதனங்களைப் பற்றி, “நாடாளுமன்ற ஆட்சிமுறை பற்றிய மதிப்பீடு தினசரி மற்றும் காலமுறையிலானதாக இருக்கும். தினசரி மதிப்பீடு என்பது நாடாளுமன்றத்தில், உறுப்பி னர்களின் கேள்விகள் தீர்மானங்கள், நம்பிக்கை இல்லா தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், விவா தங்கள் ஆகிய செயல்பாடுகள் அடிப்படையில் இருக்கும். கால முறையிலான மதிப்பீடு என்பது தேர்த லின் போது வாக்காளர்கள் தீர்மானிப்பதாக இருக்கும். ………”என்பது அம்பேத்கரின் கருத்தாகும்.
இவை யாவும், அனைவரும் அறிந்த விசயம் தானே என்று சிலருக்குத் தோன்றலாம். இன்று, குடி யரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுவதற்கு திரை மறைவில் கடுமையான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதால்தான் இவ்வளவு விரிவாக விளக்க வேண்டி யுள்ளது. இந்த முயற்சிகளின் பின்னணியில்தான் ஆளுநர் கள் தங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.
முழுமையான கூட்டாட்சி இல்லாத அரசமைப்புச் சட்டம்
ஷாம்ஷெர் வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், நன்கு அறியப்பட்ட ‘சில விதிவிலக்குகளைத் தவிர’ ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்; அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ‘சில விதிவிலக்கு கள்’ என்பதில் தான் குழப்பங்களும், தவறான நம்பிக் கைகளும் ஏற்படுகின்றன. ஆளுநருக்குரிய அரசமைப்புச் சட்ட அதிகாரங்கள் (பிரிட்டிஷ்) இந்திய அரசின் 1935 ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்தச் சட்டம் தான், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்டது.
ஒன்றிய அரசு- மாநில அரசுகளுக்கு இடையில் ஆளுநர் முக்கியமான இணைப்பாக பார்க்கப்பட்டார். மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமலேயே ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறார். அவரது பதவிக்காலமும் ஒன்றிய அரசின் கருணை அடிப்படை யில் அமைகிறது. அரசமைப்புச் சட்டத்தில்,ஆளுநரின் சில தனி விருப்புரிமைகள், அதிகாரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாநில அரசியலிலிருந்து தகவலை கேட்டுப் பெறலாம். மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது.
இதைத்தான் ஆளுநர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர். இதையே சாக்கிட்டு ஆளு நர்கள் தாங்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று அச்சுறுத்துகின்றனர். இந்தச் சூழலை அரசமைப்பு சட்டத்தின்படியான கூட்டாட்சித் தன்மையின் பின்னணி யில் தான் புரிந்து கொள்ள முடியும். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையான கூட்டாட்சி அமைப்பு அல்ல. (அது quasi federal எனும் முழுமையற்ற கூட்டாட்சி அமைப்பு தான்). உண்மை யில் 73 மற்றும் 74 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரையில், காந்தியின் முக்கியமான சிந்தனையான கிராம சுயராஜ்யமெனும் மூன்றாம் மட்ட அரசு இல்லாதது ஒரு புதிராகவே இருந்தது. நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் ஒன்றிய அரசுவசம் குவிக்கப்பட்டன.
இதனால், விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் பதற்றமான நிச்சயமற்ற சூழல் நிலவியது. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில், காங்கிர சைச் சேர்ந்த பீகார் மாநிலத்துக்காரரான பிரஜேஸ்வர் பிரகத் என்பவர், இந்திய ஒற்றுமையை முன்னிட்டு மாநிலங்கள் மீதான இந்திய அரசின் அதிகார மேலாண்மை பாதிக்கப்படாமல் பராமரிப்பது அவசி யம் என்று குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளில், அதிகாரங்கள் யாவும் ஒன்றியத்தில் மேலும் மேலும் குவிக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் பங்கு மென்மேலும் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. ஒரே கட்சி ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஆட்சி யில் இருக்கும் போது அங்கே மோதல் போக்கு எழுவ தில்லை. ஆனால் 1957- 59 களில் கேரளா போன்று எதிர்க்கட்சிகள் ஆட்சி நடந்த போதும், 1967க்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் மோதல் போக்குகள் தலை தூக்க ஆரம்பித்தன. 1977க்கு பின்னர் ஒன்றியத்தில் ஆளுங்கட்சி மாறி மாறி வந்த போது சூழ்நிலை மிகவும் மோசமடைந்தது. அரசியல் நோக்கத்திற்காக ஆளுநர் கள் மாற்றப்பட்டனர்.
ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக்கும் நடைமுறை பழங்கால வரலாற்றுப்பூர்வமான தேவையாக முன்பு வரை இருந்திருக்கலாம். விடுதலை இந்தியாவின் காலமும், சூழலும் மாறிவிட்டதாலும் இப்போது அந்தத் தேவை எழவில்லை.
விசாரணை ஆணையங்கள், உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள்
கூட்டாட்சி உறவுகளில் தொடரும் பதற்றத்தை தணிப்பதற்காகவும், ஒன்றிய- மாநில உறவுகளை விரிவாக ஆராய்வதற்கும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன.சர்க்காரியா விசாரணை ஆணையம் (1983) அரசமைப்புச் சட்டம் இயங்கும் முறையை ஆய்வு செய்தது. பூஞ்சி விசாரணை ஆணையம் (2007)ஒன்றிய-மாநில உறவுகளை மிகவும் கூர்மையாக ஆய்வு செய்தது. பூஞ்சி விசாரணை ஆணையம் ஆளுநர் நியமனம் செய்யும் முறை, அவரது விருப்ப உரிமை, ஆலோ சனை வழங்கும் அதிகாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டம் குறித்த பல்வேறு தீர்ப்புகளிலும் அவ்வப்போது தமது தீர்ப்பு களில் கூட்டாட்சி உறவுகள் பற்றி தெளிவுபடுத்தி யுள்ளது. ஆனால் ஒன்றிய அரசுகள் இவை அனைத்தை யும் அப்பட்டமான முறையில் மீறியுள்ளன.
ஆளுநரின் தகுதியும், நியமன முறையும்
ஆளுநர் நியமனம் குறித்து அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் கூர்மையான விவாதம் நடை பெற்றது. ஆளுநர் நியமனம் குறித்து நேரு என்ன சொன்னார் என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “….. மொத்தத்தில் பார்த்தால் அரசியலுக்கு அப்பாற்பட்டு வெளியில் இருந்து ஆட்களை தேர்வு செய்வது விரும்பத்தக்கது. அவர் அரசியலில் பெரும் பங்கு வகிக்காதவராக இருக்கலாம். கல்வியாளர்கள் போன்று வாழ்க்கையின் பல துறைகளில் உள்ள புகழ் பெற்றவர்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் அரசின் கொள்கை, திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாவற்றி லும் உதவி புரிவதுடன் அரசியல் கட்சிக்கு அப்பாற் பட்டவராக இருப்பார்கள்” என்று நேரு குறிப்பிட்டார். பூஞ்சி விசாரணை ஆணையம் ஆளுநர் பதவி அரசி யல் மயப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது. இத னால்,ஆளுநர் போன்ற அரசமைப்புச் சட்ட உயர் பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவதாக அக்குழு குறிப்பிட்டது. எனவே சில கட்சிகள் ஆளுநர் பதவியை முற்றிலும் ஒழிக்கக் கோருவதற்கும், சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கு எதிராக போராட் டங்கள் நடத்துவதற்கும் வழி வகுக்கின்றன.
எனவே அந்தப் பதவியின் கண்ணியமும், சுதந்திர மான செயல்பாடும் உறுதிபடுத்தப்பட பூஞ்சி விசார ணைக் குழு “எதிர்பார்க்கப்படும் சில தகுதிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பதவிக்காலம்” போன்ற பரிந்து ரைகளை செய்தது. இவைகளை அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப்பட பரிந்துரைத்தது. ஆனால் இது விஷயத்தில் ஒன்றும் நடக்கவில்லை. அதனால் கூட்டாட்சி உறவுகள் மேலும் மோசமாகி யுள்ளது. ஆளுநர் என்பவர் பெயரளவிலான தலைவர் மட்டுமே என்பது தீர்வு காணப்பட்ட பிரச்சனையா கும். அமைச்சரவைக்கு ஆளுநர் உதவியும், ஆலோ சனை வழங்கவும் செய்வார். ஆளுநர் விரும்பும் வரை யில் அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள் (பிரிவு164(1)) என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், இவைகளுக்கு இடையில் 163 (2) சட்டப்பிரிவும் இருக்கிறது. குறிப்பிட்ட மிகச்சில பிரச்சனைகளை மட்டுமே ஆளுநர் தமக்கு வழங்கப்பட்டுள்ள தனி விருப்புரிமை அடிப்படையில் செயல்படலாம் என்று அந்த பிரிவு தெளிவுபடுத்துகிறது. மற்றபடி, பொதுவான விவகாரங்களில், மாநில அமைச்சரவையின் ஆலோ சனைக்கும், அறிவுரைக்கும் கட்டுப்பட்டுத்தான் ஆளுநர் செயல்பட வேண்டியவர் என்பது தெளிவான தாகும்.
எனவே, கேரள ஆளுநர், கேரள அமைச்சரவைக் குழுவில் உள்ள ஒருவர் அமைச்சராக தொடர்வ தற்கான தனது விருப்பத்தை நீக்கிக் கொண்டதாக அறிவிப்பதும்-அவரை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதும் ஆளுநரின் வெறும் மாயை தான்! சட்டப்பிரிவு 124 இல் குறிப்பிடப்படும் தனிநபர் (ஆளுநர்) திருப்தி அல்ல! அமைச்சரவையின் திருப்தி என்பது தான் அரசமைப்புச் சட்டத்தின் உண்மை யான உணர்வாகும். ஆளுநருக்கு கீழ்க்கண்ட தனி விருப்புரிமை அதிகாரங்கள் உள்ளன: ஒரு மசோதாவிற்கு- ஒப்புதல் வழங்குதல், நிறுத்தி வைத்தல் அல்லது சட்டப்பிரிவு 200 இன் படி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புதல், சட்டப்பிரிவு 164இன்படி முதல்வரை நிய மனம் செய்தல், சட்டப்பேரவையில் பெரும்பான் மையை இழந்தால் பதவி விலக மறுக்கும் அரசை பதவி நீக்கம் செய்தல், சட்டப்பிரிவு 174 இன் படி மாநில அரசை கலைத்தல், சட்டப்பிரிவு 356 இன் கீழ் ஆளுநர் அறிக்கை அனுப்புதல், வடகிழக்கு மாநிலங்க ளில் உள்ள ஆதிவாசி பகுதிகளில் சில பிரத்யேகக் கடமைகளை நிறைவேற்றுதல் போன்ற ஆளுநரின் அதிகாரங்கள் பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் விசாரணை குழுக்களின் பரிந்துரைகளிலும் வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்திய சர்ச்சைகள் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களின் மீதான ஆளுநரின் தனி விருப்புரிமை அதிகாரம் பற்றியதாகும். சட்டமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தல், ஒருவேளை கூடிய விரைவில் தனது கருத்துக்களை தெரிவித்தல், சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புதல் ஆகிய பிரச்ச னைகளில் தங்களின் கருத்துக்களை தெரிவிக்காமல் நிறுத்தி வைப்பதற்கு அரசமைப்புச் சட்டம் கால வரையற்ற அவகாசம் வழங்கியுள்ளதாக நினைத்துக். கொண்டுள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெள்ளத் தெளிவா னதாகும். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்து ரையை இரண்டரை ஆண்டு காலமாக நிலுவையில் வைத்திருந்த பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டத்தின் படியான எந்தவித அதிகாரமும் இல்லை. ஆளுநர் என்பவர் மாநில அரசின் உணர்வுகளை வெளிப் படுத்துபவர் மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆளுநர்களின் விருப்புரிமை அதிகாரங்கள் மற்றும் சட்டமன்ற அதிகாரங்களில் காணப்படும் தெளி வின்மை குழப்பங்களை அகற்றுவதற்கு முக்கிய அரச மைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பூஞ்சி விசாரணை ஆணையம் பரிந்து ரைத்தது. ஆனால் அவைகளை எல்லாம் ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்ப தும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக மாறியுள்ளது. பல்கலைக்கழக பதவி என்பது அரசமைப்புச் சட்டத்தின்படியான பதவி அல்ல. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்க ளின்படியான பதவியே வேந்தர் பதவியாகும். எனவே வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்குவதற்கு சட்டப்பேரவைக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் கேரள ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒத்து ழைக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
பூஞ்சி விசாரணை ஆணையத்தின் கருத்து என்ன வென்றால், அரசமைப்புச் சட்டம் ஆளுநரின் அதிகா ரங்களும் பதவிகளும் சட்டப்படியான பொறுப்பு களுக்கு மேலாக கூடுதல் சுமையாகி விடக்கூடாது. இதனால் ஆளுநருக்கு தேவையற்ற சுமைகளை சுமத்தி விடக்கூடாது. இது போன்ற பதவிகள், ஆளுநர் பதவியை தேவை யற்ற சர்ச்சைகளுக்கும், பொது மக்களின் விமர்ச னத்திற்கும் உள்ளாக்கும் என்று பூஞ்சி விசாரணை ஆணையம் எடுத்துரைத்துள்ளது. எனவே ஆளுநர் பதவி தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கப்படாமல் இருக்க வேந்தர் பதவி போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக்கும் நடைமுறை பழங்கால வரலாற்றுப்பூர்வமான தேவை யாக முன்பு வரை இருந்திருக்கலாம். விடுதலை இந்தியாவின் காலமும், சூழலும் மாறிவிட்டதாலும் இப்போது அந்தத் தேவை எழவில்லை.
ஒரு ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையி லான இயல்பான அரசமைப்புச்சட்டத்தின் படியான நாகரீகம், நல்லொழுக்கம், மரியாதை இவை எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது. கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற பாஜக மிகவும் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில், அந்த மாநில அரசுக ளைக் கைப்பற்றுவதற்கு முடியாததால் அந்த மாநிலங்களின் ஆளுநர்கள் எதிர்க்கட்சிப் பணியை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் ஆளுநர்களின் அபத்தமான, விசித்திர மான செயல்பாடுகள் கேலிக்கூத்தாக மாறியுள்ளன. ஆனால் இதுவே கொடூரமான உண்மையாக உள்ளது. இது நாடாளுமன்ற/சட்டமன்ற ஜனநாயகத்திற்கோ அல்லது கூட்டாட்சிக்கோ நல்லதல்ல.
நன்றி : ஃப்ரண்ட்லைன்,
தமிழில் : ம.கதிரேசன்