வாக்காளர் பட்டியல் என்பது தேர்தல் ஆணையத்தால் தயார் செய்யப்பட்டு வருடாவருடம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் ஆதார் பட்டியலை UIDAI எனப்படும் ஆதார் ஆணையம் தயார் செய்கிறது. அடிப்படையில் இரண்டுமே மனிதர்கள் தேவைப்படும் இடத்தில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க உதவக்கூடும். வாக்காளர் அடையாள அட்டை இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுவது, ஆனால் ஆதார் அடையாள எண் இந்தியாவில் 6 மாதங்களுக்கு மேல் வசிக்கும் எவரும் பெறக்கூடிய ஒன்று. வெளிநாட்டவரும் இந்தியாவில் 6 மாதங்களுக்கு மேல் தங்கினால் ஆதார் எண்ணை பெற்றுவிடலாம். எனவே ஆதார் குடியுரிமைக்கான சான்று இல்லை.
ஆதார் அடையாள எண்ணை வாக்களர் அடையாளத்துடன் இணைக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் எவ்வித விவாதமும், கலந்தாய்வும் இல்லாமல் அவசர அவசரமாக கடந்த வருடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திருத்ததின் படியே ஒருவரால் ஆதார் அடையாள எண்ணை கொடுக்க முடியாமல் போனால் அரசாங்கம் வழங்கியுள்ள பல்வேறு அடையாள ஆவணங்களை சமர்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, ஒருவரின் வாக்குரிமை பறிக்கப்படாது என்று தெளிவாக சட்டம் கூறுகிறது.